ஈழத்தமிழர் அரசியலின் எதிர்காலம்
உணர்ச்சி அரசியல், ஒரு சமூகத்தை ஒன்று திரட்டுவதில் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், அது ஒரு நீடித்த அரசியல் தீர்வை அடைவதில் பல்வேறு சவால்களை உருவாக்குகிறது.
உணர்வுகள் பகுத்தறிவை விட மேலோங்கும்போது, யதார்த்தமான பேச்சுவார்த்தை மற்றும் தீர்வுக்கான வாய்ப்புகள் குறைந்து விடுகின்றன. இந்த நிலை, உள்ளகப் பிளவுகளை அதிகரித்து , சர்வதேச அரசியல் யதார்த்தங்களின் அடிப்படையில் களத்தில் மூலோபாய,தந்திரோபாய செயல் திட்டங்களை வகுப்பதற்கான வாய்ப்புகளை இல்லாமல் செய்து விடுகின்றது
உணர்ச்சி அரசியல், பெரும்பாலும் “அடையாள அரசியல்” ஆகக் சுருக்கப்பட்டு, தனிப்பட்ட குழுக்கள் மற்றும் தனி நபர்களின் குறுகிய கால ஆதாயங்களில் கவனம் செலுத்துகிறது. இது சமூகத்தின் பெரிய அபிலாஷைகளைத் தீர்க்கத் தவறிவிடுகிறது. இந்த நிலை தமிழ் சமூகத்திற்குள் ஒரு “போதை” போன்ற விளைவை ஏற்படுத்துகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின்போது கூட, சுயநிர்ணயம், சமஷ்டி, மனித உரிமை, வடக்கு – கிழக்கு இணைப்பு போன்ற சொற்கள் அரசியல் மேடைகளில் உச்சரிக்கப்பட்டன . இவற்றை உச்சரித்த பல வேட்பாளர்களுக்கு இவை தொடர்பில் குறைந்த புரிதல் கூட இல்லை என்பதே கசப்பான உண்மை.
தமிழ் தேசிய அரசியலில் ஈடுபடுபவர்களுக்குக் குறைந்தபட்சம் தமிழர்களின் தாயகம் தமிழ்த் தேசியம் தன்னாட்சி உரிமை என்பவற்றை , தமிழர்களின் வரலாற்று மாடவியல் சமூகவியல் பார்வையில் தெளிவுபடுத்தும் எந்த விதமான பயிலரங்குகளையும் எந்த ஒரு அரசியல் கட்சிகளும் நடத்தியதில்லை.
விடுதலைப் புலிகள் உட்பட தமிழர்களின் விடுதலைக்காகப் போராட போராடிய, போராட புறப்பட்ட அனைத்து விடுதலை இயக்கங்களும் தங்களது உறுப்பினர்கள் மத்தியில் இவற்றைச் செய்தார்கள்.
இன்றைய தமிழ் தலைமைகள் தேர்தலில் நிறுத்துவதற்கு ஏட்டிக்குபோட்டியாக ஆட்களை வலை வீசித் தேடிப் பிடிக்கும், சடுகுடு விளையாட்டைத் தான் நடத்தினார்கள்.. அவர்களுக்கு இத்தகைய பயிலரங்குகளை நடத்துவதும், மக்களை அரசியல் மையப்படுத்துவதும், கிராமிய கட்டமைப்புகளை வலுப்படுத்துவதும் அவசியமற்ற ஒன்றாகும்.
இங்குத் தேசிய நலன் என்பது புறம் தள்ளப்பட்டு,தனி நபர்களின் சாதிய வட்டார செல்வாக்குகள் முதன்மைப்படுத்தப்பட்டன. இது மக்களைப் பகுத்தறிவுடன் சிந்திக்க விடாமல் தடுக்கிறது.
அரசியல்வாதிகள் முன்னர் சொன்னதை நிறைவேற்றினார்களா அல்லது நிறைவேற்றக் கூடியவைகளைத்தான் கூறுகின்றார்களா என்ற கேள்விகளை மக்கள் எழுப்பத் தவறிவிடுகிறார்கள். இந்த “குறைவான ஞாபகசக்தி” அரசியல்வாதிகளால் மக்களை எளிதாகக் கட்டுப்படுத்த வழிவகுக்கிறது.
இது ஒரு பம்மாத்து அரசியல் கலாசாரத்தை வளர்க்கிறது, இந்தப் பம்மாத்து அரசியல் கலாசாரம் தமிழ் மக்களின் விடுதலைக்காகச் செய்யப்பட்ட தியாகங்கள் மற்றும் அர்ப்பணிப்புகள் அனைத்தையும் நீர்த்துப்போக செய்கின்றது .
இந்தப் பம்மாத்து அரசியலின் விளைவாக ஏற்படும் உள்ளகப் பிளவுகள், தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தி, ஒரு பலமான அரசியல் சக்தியாகச் செயல்படும் திறனைக் குறைக்கின்றன. ஒற்றுமையின்மை ஒரு சமூகத்தின் அரசியல் பலத்தை வெகுவாகப் பாதிக்கிறது.
ஈழத்தமிழர் அரசியல் தலைவர்கள், தனிப்பட்ட மற்றும் கட்சிப் பிளவுகளைத் தவிர்த்து, ஒரு பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரலை உருவாக்க வேண்டும். இது சமூகத்தின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பிக்கையை வளர்ப்பதன் மூலமும் அடையப்பட வேண்டும்.
உணர்ச்சிபூர்வமான கோரிக்கைகளுக்கு அப்பால், நடைமுறைச் சாத்தியமான அரசியல் தீர்வுகளை நோக்கிய படிப்படியான அணுகுமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
-சிவா சின்னப்பொடி