ஐ.நா ஆய்வுக்கப்பல் விநியோகத் தேவைகளுக்காக கொழும்பு வரும்
ஐ.நா கொடியுடன் இயங்கும் டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் என்ற ஆய்வுக்கப்பல் விநியோக தேவைகளை நிறைவேற்றுவதற்காக மாத்திரமே கொழும்பு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நாவின் உணவு விவசாய நிறுவனத்தினால், சிறிலங்கா கடற்பரப்பில் ஜூலை 15ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை இந்த ஆய்வுக் கப்பல் கடல்சார் சூழலியல் ஆய்வுகளில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தது.
தற்போது மொறிசியஸ் கடற்பரப்பில் ஆய்வுகளில் ஈடுபட்டிருக்கும் இந்தக் கப்பல் சிறிலங்கா கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை.
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான நிலையான நடைமுறைகளை உருவாக்கும் வரை, எந்தக் கப்பலையும் அனுமதிப்பதில்லை எனத் தீர்மானித்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.
இதனால் ஐ.நாவின் மூலம் கிடைக்கவிருந்த 1 மில்லியன் டொலர் நிதி உள்ளிட்ட பல்வேறு நல்வாய்ப்புக்களை சிறிலங்கா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், இந்த ஆய்வுக்கப்பல் விநியோகத் தேவைகளுக்காக கொழும்பு வரத் தடையில்லை என்றும், எனினும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் சிறிலங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் கொழும்பு துறைமுகத்தில் விநியோக தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு டொக்டர் பிரிட்ஜோவ் நான்சென் கப்பல் பங்களாதேஷ் நோக்கிப் பயணிக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.