ஐ.நா கொடியுடனான ஆய்வு கப்பலுக்கும் தடை- சிறிலங்காவுக்கு எச்சரிக்கை
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பது தொடர்பான நெறிமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் உருவாக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், பெருமளவிலான வாய்ப்புகளை சிறிலங்கா இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களைக் கையாள்வதற்கான நிலையான நெறிமுறைகளை உருவாக்குவதற்கு, சிறிலங்கா அரசாங்கம் தாமதித்து வருகிறது.
இதனால், ஐ.நா உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வழங்கும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பு ஆராய்ச்சியில், சிறிலங்காவிற்கு முக்கிய நன்மைகள் கிடைக்காது என்று ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறிலங்கா அரசாங்கம் 2023 நவம்பர் 24,ஆம் திகதி ஐ.நாவுக்கு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூலை 15 முதல் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை சிறிலங்காவுக்கு, ஒரு அதிநவீன கப்பலான டொக்டர் ஃப்ரிட்ஜ் ஒப் நான்சென் (Dr Fridtj of Nansen) அனுப்பப்படுவதை ஐ.நாவின் உணவு விவசாய அமைப்பு ஒருங்கிணைத்திருந்தது.
எனினும், கடல்வளம், நீர்வாழ் மற்றும் பெருங்கடல் வள அமைச்சினால், கடந்த மே 19ஆம் திகதியிட்டு ஐ.நாவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கான நிலையான நெறிமுறைகளை உருவாக்கும் வரை இந்தக் கப்பலின் வருகை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறிப்பட்டுள்ளது.
இந்த கப்பலின் வருகையை ரத்து செய்வது உணவு விவசாய நிறுவனத்தின் மூலம் சிறிலங்காவுக்கு1 மில்லியனுக்கும் அதிகமான டொலர் நேரடி இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், பசுமை காலநிலை நிதியத்தால் நிதியளிக்கப்படும் வரவிருக்கும் நிகழ்ச்சிகளின் செயல்திறனையும் குறைக்கும். இது நான்சென் கப்பலின் தரவை பெரிதும் நம்பியிருக்கும் என்று ஐ.நாவின் ஆவணம் ஒன்று கூறுகிறது.
இந்தக் கப்பலின் தற்போதைய வருகை ரத்து செய்யப்பட்டால், 2030 ஆம் ஆண்டு வரை, மற்றொரு பயணம் சாத்தியமில்லை என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வருகையை ரத்து செய்வது சிறிலங்கா அரசாங்கம், முடிவெடுப்பதற்கு அவசியமான முக்கியமான தரவுகளை இழக்கச் செய்து, முக்கிய துறையில் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, ஐ.நா கொடியின் கீழ் இந்த கப்பலின் பயணத்தை தொடர அனுமதிக்குமாறு, கொழும்பில் உள்ள ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகம், சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரவுள்ளது.
இது பற்றி கலந்துரையாடவும், தேவைப்படும் கூடுதல் தகவல்களை வழங்கவும், ஐ.நாவின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஒரு சந்திப்புக்கு தயாராக இருக்கிறார். என்றும் கூறப்பட்டுள்ளது.
மீன்களின் அறுவடை குறைந்து வரும் பின்னணியில், கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியம் குறித்த அவசர நுண்ணறிவுகளைப் பெறுவதிலும், கடலில் இருந்து நீண்டகால உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சிறிலங்காவின் கடல்சார் நிறுவனங்களுக்கு உதவுவதில் நான்சன் கப்பரலின் வருகை முக்கிய பங்கு வகிக்கும்” என்றும் ஐ.நா. ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.