மேலும்

ஈழத்தின் மூத்த ஊடகவியலாளர் பெருமாள் இயற்கை எய்தினார்

ஈழத்து ஊடகத்துறையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான, சி.பெருமாள், யாழ்ப்பாணத்தில் நேற்று தனது 86ஆவது வயதில் இயற்கை எய்தினார்.

இரத்தினபுரியைப் பிறப்பிடமாகக் கொண்ட சின்னக்கண்ணு பெருமாள், ஊடகத்துறை மீது இருந்து ஆர்வத்தினால் இளவயதிலேயே, வீரகேசரி நாளிதழின் ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியராக இணைந்து கொண்டார்.

பின்னர், 1961ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு நாளிதழில், உதவி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், பின்னர் அதன் செய்தி ஆசிரியராகவும், வாரமலர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

அதையடுத்து, யாழ்ப்பாணத்தில் உதயன் நாளிதழின் ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியராகவும், ஆசிரிய பீட ஆலோசகராகவும் பணியாற்றிய, சி.பெருமாள், 2017இல் ஊடகத்துறைப் பணியில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்டார்.

சுமார் 55 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றிய சி. பெருமாள், தனது ஊடகத்துறை அனுபவங்களை இளம் ஊடகவியலாளர்கள், ஊடகத்துறை மாணவர்களுடன் பகிர்ந்து அவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவராக இருந்தவர்.

மரணத்துக்குப் பின்னர், தனது உடலை  மாணவர்களின் ஆய்வுக்காக யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கையளிக்க வேண்டும் என்று அவர் விரும்பியிருந்தார்.

இதற்கமைய அவரது உடல், இறுதிச் சடங்களுக்குப் பின்னர், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் கையளிக்கப்படவுள்ளது.

தமிழ் ஊடகத்துறையில் அரை நூற்றாண்டு காலம் தடம் பதித்துச் சென்ற மூத்த ஊடகவியலாளர் பெருமாள் அவர்களுக்கு ‘புதினப்பலகை’ சார்பில் அஞ்சலிகளை செலுத்துவதுடன், அவரது இழப்பால் துயருற்றிருக்கும், குடும்பத்தினருக்கும் எமது இரங்கலைப் பகிர்ந்து கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *