மேலும்

தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட வேண்டும் – என்கிறார் கோத்தா

தமிழ் மக்கள் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச, தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட்டு, எதிர்காலத்துக்கு செல்லத் தயாராக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்ப்பாணத்திலும், வவுனியாவிலும், நேற்று தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“தமிழ் மக்கள் கடந்த காலங்களைப் போலஅரசியல்வாதிகளிடம் ஏமாந்து போகக் கூடாது.

மக்களின் நலனுக்காக என்னால் முடிந்ததைச் செய்வதில் கவனம் செலுத்துவேன்.

எனது ஆட்சி மலர்ந்த பின்னர், தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 250 க்கும் மேற்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்களை புனர்வாழ்வு அளித்து, மீண்டும் சமூகத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தடுப்பு முகாம்களில் இருந்த 274 பேர் தவிர்ந்த ஏனைய அனைவரையும் நாங்கள் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்திருந்தோம்.

சிறந்த நேரம் உங்களின் முன்னால் உள்ளது. நீங்கள் கடந்த காலத்தில் வாழ வேண்டும் என்று பலர் விரும்புகிறார்கள். ஆனால் நான் உங்களை எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வேன்.

அவர்கள் போரை ஆரம்பித்தவர்கள் அல்ல, நாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள். எமது நிர்வாகம் மக்களை மையமாகக் கொண்டதாக இருக்கும்.

காணாமல் போனவர்களுக்கான  இழப்பீடுகளை வழங்கும் நடவடிக்கை  விரைவுபடுத்தப்படும்.

நான் எப்போதும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்து வந்துள்ளேன்.

கடந்த காலத்தை ஒதுக்கி வைத்து விட்டு தமிழ் மக்கள் எதிர்காலத்தைப் பார்க்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

கோத்தாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்கள் நேற்று வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டிருந்ததால், யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் கடுமையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பலத்த சோதனைகளுக்குப் பின்னரே, கூட்டத்தில் பங்கேற்க அழைத்து வரப்பட்டவர்கள், கூட்டம் இடம்பெற்ற இடத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

2 கருத்துகள் “தமிழ் மக்கள் கடந்த காலத்தை மறந்து விட வேண்டும் – என்கிறார் கோத்தா”

  1. Mahendran Mahendran
    Mahendran Mahendran says:

    குற்றங்களே புரியவில்லை எனக்கூறும் தாங்கள் கடந்த காலத்தை மறக்க சொல்வதின் பொருள் என்ன?

Leave a Reply to Jayaraman Kumaran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *