மேலும்

ஐஎஸ் தலைவரைக் கொன்ற அமெரிக்க படைகள் – தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி?

சிறிலங்காவில் கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு உரிமை கோரிய- உலகின் பல்வேறு இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களுக்குக் காரணமாக இருந்த இஸ்லாமிய தேசம் எனப்படும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி அமெரிக்கப் படைகளின் அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

சிரியாவின் வடமேற்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு அமெரிக்காவின் சிறப்புப் படைகள் மேற்கொண்ட இந்த அதிரடித் தாக்குதல் தொடர்பான விபரங்களை, நேற்று வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,  ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்க படைகள் துரத்திய போது- தனது இரு மனைவிகள், பிள்ளைகளுடன் சுரங்கம் ஒன்றுக்குள் ஓடிய ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதி, கடைசியில் தப்பியோட முடியாத நிலையில் தற்கொலைக் குண்டு அங்கியை வெடிக்க வைத்தார்.

இரு மனைவிகள், 3 குழந்தைகளும் பலி

இந்தச் சம்பவத்தில் அவரது இரு மனைவிகள், 3 குழந்தைகளும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் அமெரிக்க படையினர் எவருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை. எனினும், இந்த தாக்குதலுக்காக அமெரிக்க சிறப்புப் படைகள் பயன்படுத்திய நாய் ஒன்று படுகாயமடைந்தது.

இந்த தாக்குதல் குறித்து நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் அறிவித்த போது, உலகின் முதலாவது இலக்க தீவிரவாதியை நேற்றிரவு அமெரிக்கா நீதியின் முன் நிறுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார்.

இரவு நேர அதிரடி

“இன்னமும் சிரியப் படைகளின் கட்டுப்பாட்டில் வராத, வட மேற்கு மாகாணமான இட்லிப்பில், ஒரு மறைவிடத்தில் பக்தாதி தங்கியிருந்தார். 48 வயதுடைய அவர், இரண்டு மணி நேர அதிரடித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

அமெரிக்க சிறப்பு நடவடிக்கை படைகள், வடமேற்கு சிரியாவில் ஒரு ஆபத்தான-  துணிச்சலான இரவுநேர தாக்குதலை நடத்தியதுடன், தங்கள் பணியை பிரமாண்டமான பாணியில் நிறைவேற்றினர்.

பக்தாதி மற்றும் அவரது குடும்பத்தினர், உதவியாளர்கள் தங்கியிருந்த அந்தக் கட்டடத்தை பாரிய சுடுபல சக்தியுடன் அமெரிக்கப் படைகள் நெருங்கியிருந்தன.

சுரங்கத்துக்குள் சிக்கினார்

தப்பிச் செல்ல முடியாத ஒரு சுரங்கத்துக்குள் ஓடிக் கொண்டு, அலறியபடி, அவர் இறந்து போனார். அவர் தனது உடையை வெடிக்க வைத்து, தன்னையும் மூன்று குழந்தைகளையும் கொன்றார்.

குண்டுவெடிப்பால் அவரது உடல் சிதைந்து போனது. ஆனால் சோதனை முடிவுகள், அவரது அடையாளத்தை உறுதி செய்துள்ளன.

ஐஎஸ் அமைப்பின் தலைவர் பக்தாதி எவ்வாறு இறந்தார் என்பதை அவரது குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர், ஒரு கதாநாயகன் போல இறக்கவில்லை. ஒரு கோழை போல இறந்தார். ஒரு நாயைப் போல, இறந்தார்.” என்று குறிப்பிட்டார்.

இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கிய நடவடிக்கை

“ஐஎஸ் தலைவர் அல் பக்தாதியை கொல்வதற்கான தாக்குதல் நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பமானது.

அமெரிக்காவின் கிழக்கு கரை நேரப்படி, சனிக்கிழமை,  பிற்பகல் 5 மணியளவில் – சிரிய நேரப்படி இரவு 11 மணியளவில், இறுதி நடவடிக்கை தொடங்கப்பட்டது.

வெள்ளை மாளிகையில் நேரலை

வெள்ளை மாளிகையில் அமைக்கப்பட்டிருந்த அவதானிப்பு அறையில், துணை அதிபர் மைக் பென்ஸ், பாதுகாப்புச் செயலர் மார்க் எஸ்பர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் றொபேர்ட் ஓ பிறெய்ன் மற்றும் ஏனைய புலனாய்வு அதிகாரிகளுடன் இணைந்து அந்த நடவடிக்கையை பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு நிமிடங்களும் நாங்கள் தகவல்களைப் பெற்றுக் கொண்டிருந்தோம். அது ஒரு திரைப்படத்தை பார்ப்பது போல இருந்தது.

எட்டு உலங்கு வானூர்திகள்

எட்டு உலங்குவானூர்திகளில் 70 நிமிடங்கள் பயணம் செய்த பின்னர், பாக்தாதியின் வளாகத்தை நெருங்கியதும், உலங்குவானூர்திகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனினும், அமெரிக்கப் படைகள் அந்தத் தாக்குதலை விரைவாக அடக்கி, பாதுகாப்பாக தரையிறக்க முடிந்தது.

அந்த வளாகத்தின் வாயிலில் பொறிவெடிகள் வைக்கப்பட்டிருந்ததால், கட்டடத்தின் வெளிப்புறமாக இருந்து துவாரங்கள் போடப்பட்டன.

சரணடையாவிடின் சுட்டுக் கொல்வது என்ற அடிப்படையில் தான் அந்த கட்டடத்தை அந்த நேரத்தில் கைப்பற்ற வேண்டியிருந்தது.

11 சிறுவர்கள் அங்கிருந்து காயங்களின்றி வெளியேற்றப்பட்டனர். அவர்கள் மூன்றாவது தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஐஎஸ் குழுவினர் பலர் அமெரிக்கப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டனர்.

சரணடைய மறுப்பு

எனினும், பக்தாதி தனது மூன்று குழந்தைகளுடன் சுரங்கத்துக்குள் ஓடினார்.சுரங்கத்துக்குள் ஓடிச் சென்ற பக்தாதியை சரணடையுமாறு அமெரிக்க படையினர் கோரினர். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

சிறப்புப் படைகளின் நாய்கள் அவரைத் துரத்திச் சென்ற போது, அவர் சுரங்கத்தின் முடிவிடத்தை அடைந்தார். அப்போது, அவர் தனது உடையை வெடிக்க வைத்து, தன்னையும் மூன்று குழந்தைகளையும் கொன்றார்.

15 நிமிடங்களில் மரபணுச் சோதனை

பாக்தாதியின் உடல் குண்டுவெடிப்புகளால் சிதைக்கப்பட்ட நிலையில், அமெரிக்கப் படைகள் மரபணு சோதனையை நடத்தி,15 நிமிடங்களில் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்தின. சோதனை முடிவுகள் அவர் தான் என்பதற்கு சாதகமாக இருந்தன.

இந்த நடவடிக்கையின் போது, அங்கு தேடுதல் நடத்திய ஐஎஸ் அமைப்பு மற்றும் அதன் எதிர்காலத் திட்டங்கள் அடங்கிய மிகவும் உணர்திறன் வாய்ந்த பொருள் மற்றும் தகவல்களை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியுள்ளன.” என்று கூறினார்.

எனினும், கைப்பற்றப்பட்ட பொருள் என்ன என்பது பற்றி இன்னமும் தெளிவாகவில்லை.

ரஷ்ய வான்பரப்பு ஊடாக சென்றே தாக்குதல்

“மொஸ்கோவின் அனுமதியுடன், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள வான்பகுதியைக் கடந்து சென்றே அமெரிக்கப் படைகள் இந்த தாக்குதலை நடத்தின.

இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, சிரியா, ஈராக், துருக்கி மற்றும் சிரிய குர்து படையினர் ஆகியோரின் ஒத்துழைப்புகள் பெறப்பட்டன. அதற்காக அந்த நாடுகளுக்கு நன்றி கூறுகிறோம்.

எனினும், அவர்களுக்கு இந்த நடவடிக்கை பற்றிய இரகசியம் தெரியவராமல் பாதுகாக்கப்பட்டது” என்றும் ட்ரம்ப் கூறினார்.

நாய்களுடன் சென்று தாக்குதல்

இந்த நடவடிக்கைக்காக அமெரிக்க சிறப்புப் படையினர், இராணுவ நாய்களுடன் எட்டு உலங்குவானூர்திகளில் மத்திய கிழக்கில் உள்ள இராணுவத் தளம் ஒன்றில் இருந்து புறப்பட்டுச் சென்றனர் என்றும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

எனினும், மேற்கு ஈராக்கில் உள்ள விமானத் தளம் ஒன்றில் இருந்தே இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இட்லிப் பிராந்தியத்தில் நடந்த இந்த தரைவழி நடவடிக்கைக்கு, சிரியாவின் இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஆதரவு அளித்தன.

ரோபோவும் தாக்குதலுக்குச் சென்றது

அமெரிக்கப் படையினர் ஒரு இராணுவ ரோபோவையும் கொண்டு சென்றிருந்தனர். ஆனால் இறுதியில் அதைப் பயன்படுத்தவில்லை.

‘100 வீதம் நம்பிக்கை ஜாக்பொட்’

“நேற்றிரவு மிகப்பெரிய செய்தி கிடைத்தது. அப்போது அமெரிக்க நேரப்படி இரவு 7.15 மணி இருக்கும்.நாங்கள் அவதானிப்பு அறையில் இருந்தோம்.

அந்த நடவடிக்கையின் தளபதி அழைத்து, 100 வீதம் நம்பிக்கை, ஜாக்பொட்” (‘100% confidence, jackpot.’) என்று கூறினார் என அவதானிப்பு அறையில் இருந்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் றொபேர்ட் ஓ பிறெய்ன் குறிப்பிட்டார்.

சுமார் இரண்டு மணிநேரம் நீடித்த இந்த தாக்குதலை முடித்துக் கொண்டு அமெரிக்க படையினர், பறந்து சென்ற அதேவழியில் தளம் திரும்பினர்.

பக்தாதியின் சிதைந்த உடல் அமெரிக்கா வசம்

பாக்தாதியின் உடல் ஒழுங்கான முறையில், அடக்கம் செய்யப்படும். ஒசாமா பின்லேடன் 2011 இல் கொல்லப்பட்டபோது, பின்பற்றப்பட்ட அதே நெறிமுறையாக இது இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஓ பிரையன் கூறினார்.

உலகை அச்சுறுத்தும் சித்தாந்தவாதியாகவும்,, அனைத்துலக புலனாய்வு அமைப்புகளுக்கு சவாலாகவும், இருந்த பக்தாதி, உயர்மட்ட தலைவர்களுடன் மாத்திரம் தொடர்புகளைப் பேணி வந்ததாலும், அதிகளவில் வெளியே தலைகாட்டாமல் இருந்ததாலும், அவரது இருப்பிடத்தைக் கண்டறிவது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.

மறைவிடத்தை கண்டு பிடித்தது எப்படி?

ஈராக்கில் இருந்து தனது மனைவிகள் மற்றும் குடும்பத்தினரை, சிரியாவுக்கு மாற்றிய சிரிய நாட்டவர் ஒருவரை ஈராக்கிய அதிகாரிகள் அடையாளம் கண்டதை அடுத்து, பக்தாதியை வேட்டையாடும் நடவடிக்கை கடந்த ஒரு மாதமாக தீவிரமடைந்திருந்தது.

பக்தாதியின் இரண்டு சகோதரர்களான ஜூம்மா மற்றும் அகமட் ஆகியோர், தமது குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுடன், இட்லிப் பிராந்தியத்துக்கு நகர்ந்தது அவதானிக்கப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில், இந்த தகவல் அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏவுக்கு வழங்கப்பட்டது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோப்பம் பிடித்த சிஐஏ

இட்லிப் மாகாணத்தில் ஐஎஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர்கள் யாராவது உள்ளனரா என்று, அங்குள்ள பல சிரிய போராளிக் குழுக்களிடம்,  அமெரிக்க அதிகாரிகள் கேட்டிருந்தனர்.

இப்பகுதியை பெரும்பாலும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற இஸ்லாமிய குழு வைத்திருக்கிறது. இது ஐஎஸ் அமைப்பை எதிர்க்கிறது. ஐஎஸ் குழுவுடன் இணைந்திருப்பதாக கருதப்படும் மக்களை தூக்கிலிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறது.

பக்தாதி இங்கு மறைந்திருக்கலாம் என்று நீண்டகாலமாக ஊகிக்கப்பட்டிருந்தாலும், பல பிராந்திய அதிகாரிகள், இட்லிப் அவருக்கு மிகவும் ஆபத்தான இடமாக இருக்கும் என்று கருதியிருந்தனர்.

தலைக்கு 25 மில்லியன் டொலர் 

அமெரிக்காவினால் 25 மில்லியன் டொலர் பரிசு அறிவிக்கப்பட்டிருந்த பக்தாதி, இதற்கு முன்னரும் இதேபோன்ற தாக்குதல்களில் காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்.

நீண்டகாாலமாக வெளியே தலைகாட்டாமல் இருந்த  அவர், கடந்த ஏப்ரல் 21ஆம் நாள் சிறிலங்காவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுக்கு உரிமை கோரும் ஒளிப்பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *