மேலும்

அரசியலில் வலுவடையும் இராணுவப் பின்னணி

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இராணுவப் பின்னணி கொண்டவர்களின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த தேர்தலாக, இந்த முறை நடக்கப் போகும் ஜனாதிபதி தேர்தல் பார்க்கப்படுகிறது. இதனை ஆபத்தான ஒன்றாகவும், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகவும், அரசியலாளர்கள் சிலரும் ஆய்வாளர்கள் சிலரும் கருதுகிறார்கள்.

பொதுஜன பெரமுவின் வேட்பாளராக முன்னாள் இராணுவ அதிகாரியான லெப்.கேணல் கோத்தாபய ராஜபக்ச போட்டியிடுவதும், தேசிய மக்கள் இயக்கத்தின் வேட்பாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க களமிறங்கியுள்ளதும் மட்டும் தான், இத்தகைய விமர்சனங்களுக்குக் காரணமில்லை.

முன்னெப்போதும் இல்லாதளவுக்கு முன்னாள் படை அதிகாரிகள் அதிகளவில் அரசியல் செயற்பாடுகளில் இறங்கியுள்ளதும் கூட, இதற்குக் காரணம் தான்.

2010ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தான், முதல் முறையாக முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, எதிர்த்து எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டிருந்தார்.

இந்தமுறை, ஒன்றுக்கு இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

இந்த தேர்தலில் களமிறங்கியுள்ள மற்றொரு வேட்பாளரான சிறிலங்கா சமூக ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி.ரொஹான் பல்லேவத்த, முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது,  பிழையான முன்னுதாரணமாக அமையும் என்று கூறியிருக்கிறார்.

“இராணுவ அதிகாரிகளைப் பொறுத்தவரையில், உத்தரவிட்டால், அதனை மறுபேச்சுக்கு இடமின்றி செய்ய வேண்டும். அவ்வாறானவர்களின் கைக்கு அதிகாரம் சென்றால், நிலைமைகள் எவ்வாறு இருக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ள அவர்,

“இராணுவ சேவையிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள், அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு இடமளிப்பதும், அங்கீகாரமளிப்பதும் நாட்டின் ஜனநாயக விழுமியங்களை கேள்விக்குறியாக்குவதுடன், எதிர்காலத்தில் நாட்டுக்கும் பேராபத்து ஏற்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்றும் எச்சரித்திருக்கிறார்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், ராஜபக்ச குடும்பத்தினர் அதிகளவில் அரசியல், இராஜதந்திர அரங்குகளில் நிரம்பியிருந்ததைப் போலவே, அவர்களுக்கு நெருக்கமான படை அதிகாரிகளும் தான் சூழ்ந்திருந்தார்கள்.

அரசாங்க நிறுவனங்களின் உயர் பதவிகளிலும், வெளிநாட்டு தூதுவர்களாகவும், மாகாண ஆளுநர்களாகவும், இராணுவ அதிகாரிகள் அதிகளவில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

அதனால் கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின் போது, இராணுவ ஆட்சி, அராஜக ஆட்சி, சர்வாதிகார ஆட்சி என்பன போன்ற குற்றச்சாட்டுகள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டன.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இராணுவப் பின்னணி கொண்டவர்கள், அரச இயந்திரத்தில் இருந்து, பெருமளவில் நீக்கப்பட்டு, சிவில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

எனினும், இப்போது நடக்கவுள்ள தேர்தலில், இராணுவப் பின்னணி கொண்டவர்களின் ஆதிக்கம் வலுப்பெற்றிருக்கிறது. இதில் போட்டியிடும், 35 வேட்பாளர்களில் இரண்டு பேர் இராணுவ அதிகாரிகளாக உள்ளனர்.

இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக சர்ச்சைகள் கிளம்பிய போது, அதனை நிராகரிக்கும் கருத்துகளும் வெளிப்பட்டன. அதில் நியாயமும் இருந்தது.

அமெரிக்காவில் இதுவரை பதவியில் இருந்த 44 ஜனாதிபதிகளில், 13 பேரைத் தவிர ஏனைய , 31 பேர், படைஅதிகாரிகளாக பணியாற்றியவர்கள் தான்.

இவர்களில் அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான, ஜோர்ஜ் வொசிங்டன், அமெரிக்கா இராணுவத்தின் மிகஉயரிய பதவியான, ஆறு நட்சத்திர General of the Armies of the United States ஆக இருந்தவர்.

அதுபோல அமெரிக்க இராணுவத்தில் சிப்பாய்களாக பணியாற்றிய ஜோன் அடம்ஸ், ஜேம்ஸ் புச்சனன் போன்றவர்களும் அமெரிக்க ஜனாதிபதிகளாக பதவியில் இருந்திருக்கிறார்கள்.

இதனைச் சுட்டிக்காட்டி, இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவதால், ஜனநாயகத்துக்கு ஆபத்து வந்து விடாது என்றும் சிலர் வாதிட்டனர்.

அரசியலமைப்பின் படியே ஆட்சி நடக்கின்ற- அமெரிக்கா போன்ற நாடுகளில் ஜனநாயக மீறல்கள் குறைவு. அங்கு சட்டத்தின் ஆட்சி பலமானது.

ஆனால், இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில், சட்டத்தின் ஆட்சி பலவீனமானது, அரசியலமைப்பின்படி எல்லாம் நடப்பதில்லை. நீதிமன்றங்களின் சுயாதிபத்தியம் குறைவாகவே இருக்கிறது.

இலங்கையின் அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை இன்னமும் எந்தவொரு ஆட்சியாளரும் முழுமையாக நடைமுறைப்படுத்துவதில்லை. அந்தளவுக்குத் தான், இலங்கையின் சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பு வழியான ஆட்சி நடக்கிறது.

ஆனால், அமெரிக்காவில் இதுபோன்று இருப்பதில்லை. அதனால் தான், அங்கு இராணுவ அதிகாரிகளாக இருந்தவர்கள் பெரும்பாலும் ஜனாதிபதியாக வந்த போதும், ஜனநாயகம் சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி என்பன பாதுகாக்கப்படுகின்றன.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில், வேட்பாளர்களாக இரண்டு இராணுவ அதிகாரிகள் குதித்துள்ளது மாத்திரம் இங்குள்ள பிரச்சினையில்லை.

இந்த தேர்தலில் முன்னாள் இராணுவ அதிகாரியான கோத்தாபய ராஜபக்சவை வெற்றிபெற வைப்பதற்கான உத்திகளை வகுப்பது தொடக்கம், பிரசாரங்கள், கூட்டங்களை நடத்துவது வரைக்குமான பணிகளில், முன்னாள் இராணுவ, கடற்படை அதிகாரிகளே ஈடுபட்டிருக்கிறார்கள்.

இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்கெடுத்த மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, முன்னாள் கடற்படைத் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் சரத் வீரசேகர, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, முன்னாள் படை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் ஜிஏ.சந்திரசிறி,மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, முன்னாள் கடற்படைத் தளபதிகளான  அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட, அட்மிரல் ஜெயந்த பெரேரா, உள்ளிட்ட பல இராணுவ, கடற்படை, விமானப்படை அதிகாரிகள், கோத்தாபய ராஜபக்சவின் வெற்றிக்காக உழைக்கிறார்கள்.

இவர்களின் ஆலோசனைப் படியே கோத்தாபய ராஜபக்ச செயற்படுகிறார் என்றும், இதனால், கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றால் இவர்கள் தான் அதிகாரத்துக்கு வருவார்கள், அது இராணுவ ஆட்சியாகவே இருக்கும் என்றும் ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தெற்கில் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றால், அவருக்கு மிக நெருக்கமாக இருக்கும், போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவே, அடுத்த பாதுகாப்புச் செயலர் என்றும் கூட ஊடகங்களில் செய்திகள் பரவுகின்றன.

கோத்தாபய ராஜபக்சவுக்கு நெருக்கமான முன்னாள் இராணுவ அதிகாரிகள் தெற்கில் செய்கின்ற பிரசாரங்கள் மக்களை பீதியூட்டும் வகையில் இருப்பதாக முறைப்பாடுகள் சென்றுள்ளதை அடுத்து, அவர்களை அமைதியாக இருக்குமாறு மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகவும் கூட செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

கோத்தாபய ராஜபக்சவும், அவரது முன்னாள் இராணுவ அதிகாரிகளும் வடக்கில் ஒரு விதமான பிரசாரத்தையும், தெற்கில் இன்னொரு விதமான பிரசாரத்தையும் மேற்கொள்கிறார்கள்.

வடக்கில், புலிகளிடம் இருந்து தமிழ் மக்களை மீட்டு, 13 ஆயிரம் புலிகளுக்கு புனர்வாழ்வு அளித்து, பாதிக்கப்பட்ட இடங்களை புனரமைத்து, மக்களுக்கு உதவி செய்தோம் என்று பிரசாரம் செய்யப்படுகிறது.

தமிழ் மக்களுடன் நெருங்கிய உறவுகளை பேணுவது போன்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப்படுகிறது,

ஆனால் தெற்கில், அதே இராணுவ அதிகாரிகள், வடக்கில் புலிகளின் அச்சுறுத்தல் இருக்கிறது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துகிறார்கள். தீவிரவாத அச்சுறுத்தலில் நாடு இருக்கிறது, அதனை காப்பாற்றக் கூடிய ஒரே ஒருவர் கோத்தாபய ராஜபக்ச தான் என்று அவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கில் குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பிரசாரங்களுக்காக களமிறக்கி விடப்பட்டுள்ளவர்கள் இரண்டு முன்னாள் படை அதிகாரிகள்.

ஒருவர், 2005 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இருந்து, 2009 தொடக்கம் வரை மூன்று ஆண்டுகள், யாழ். படைகளின் தளபதியாக இருந்து பின்னர் வடக்கின் ஆளுநராகவும் பதவி வகித்த மேஜர் ஜெனரல் ஜிஏ.சந்திரசிறி.

இரண்டாமவர், 2010இல் இருந்து 2014 வரை யாழ். படைகளின் கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க.

மேஜர் ஜெனரல் ஜிஏ.சந்திரசிறி, வடக்கின் ஆளுநராக இருந்தபோது, இராணுவ ஆட்சியையே நடத்தியவர். வடக்கு மாகாண சபை தெரிவு செய்யப்பட்ட பின்னரும், அவர் தனது அதிகாரத்தை விட்டுக் கொடுக்காமல், இராணுவ அதிகாரியைப் போலவே செயற்பட்டிருந்தார்.

இவர்கள் இருவரும், 2005ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் 7 ஆண்டுகள், யாழ்.படைகளின் தளபதிகளாக இருந்தவர்கள்.

பாதுகாப்புச் செயலராக கோத்தபபய ராஜபக்ச இருந்தபோது, அவரது சொற்படி நடந்தவர்கள். இவர்கள் நீண்டகாலம் யாழ்ப்பாணத்தில் பணியாற்றியவர்கள் என்பதால், இவர்களைக் கொண்டு யாழ்ப்பாண மக்களின் வாக்குகளைக் கைப்பற்றுவதற்கு கோத்தாபய ராஜபக்ச வியூகம் வகுத்திருக்கிறார்.

அதேவேளை, மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, றியர் அட்மிரல் சரத் வீரசேகர போன்ற கடுமையாக இனவாதத்தைக் கக்கக் கூடியவர்களை சிங்கள மக்கள் மத்தியில் முன்னிறுத்தி வாக்குகளை கவர முனைகிறார் கோத்தாபய ராஜபக்ச.

இவ்வாறாக, கடும்போக்குவாத இராணுவ அதிகாரிகள், பிரதான ஜனாதிபதி வேட்பாளரின் பிரசாரத்துக்காக களத்தில் இறங்கியிருப்பது, அரசியலில் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கான சாத்தியப்பாடுகளை மேலோங்கச் செய்திருக்கிறது.

இந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் வரப் போகிறது. அதில் முன்னாள் படை அதிகாரிகள் பலர் தமக்குள்ள பிரபலங்களைப் பயன்படுத்தி போட்டியில் இறங்கும் வாய்ப்புகள் உள்ளன.

தற்போதைய இராணுவத் தளபதிக்குக் கூட, அரசியல் ஆசை இருக்கிறது என்றும், அவரும் தேர்தலில் போட்டியிடலாம் என்றும் வேட்பாளர் றொகான் பல்லேவத்த கூறியிருக்கிறார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னாள் படை அதிகாரிகள் பலர் அங்கம் வகித்திருக்கிறார்கள்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜெனரல் ரஞ்சன் விஜேரத்ன, ஜெனரல் அனுருத்த ரத்வத்த, மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க, றியர் அட்மிரல் சரத் வீரசேகர, போன்ற பலர் படை அதிகாரிகளாக இருந்தவர்கள் தான்.

தற்போதைய சபாநாயகர், கரு ஜெயசூரியவும் கூட இராணுவத்தின் தொண்டர் படையில் ஒரு அதிகாரியாக இருந்தவர் தான், அவர் 1971 ஜேவிபி கிளர்ச்சியை ஒடுக்கும் நடவடிக்கையிலும் பங்கேற்றவர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில், படை அதிகாரிகள் பலர் போட்டியில் குதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று எழுப்பப்படும் குரல்களை பிரதான அரசியல் கட்சிகளோ தலைவர்களோ கண்டுகொள்ளவில்லை. ஏனெனில் அவர்களின் அரசியல் வெற்றிக்கு இராணுவ அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள்.

-சுபத்ரா
வழிமூலம் – வீரகேசரி வாரவெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *