மேலும்

இன்றைய கலந்துரையாடலின் பின்னர் 5 தமிழ்க்கட்சிகளின் முடிவு

யாழ்ப்பாணத்தில் இன்று நடக்கவுள்ள கலந்துரையாடலின் பின்னரே, சிறிலங்கா அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று, வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதிபர் வேட்பாளர்களிடம் முன்வைப்பதற்காக, தமிழ்மக்களின் 13 அம்ச கோரிக்கைகள்  அடங்கிய பொது இணக்க ஆவணத்தில் கையெழுத்திட்ட ஐந்து தமிழ்க்கட்சிகளும் இன்று சந்தித்துப் பேசவுள்ளன.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 11 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்தில், தமிழ் அரசுக் கட்சி, ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எவ், தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் செயலர் சி.வி.விக்னேஸ்வரன்,“ அரசியல்  விவகாரங்கள் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய யோசனை ஐந்து கட்சிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், இந்த ஆவணம் எந்த வேட்பாளரிடமும் அதிகாரபூர்வமாக கையளிக்கப்படவில்லை.

இன்று நடக்கவுள்ள கலந்துரையாடலின் பின்னர், அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து தீர்மானிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *