மேலும்

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட புலிகள் இயக்க சந்தேகநபர் விடுதலை

வெடிபொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர் ஒருவரை மேன் முறையீட்டு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

திருகோணமலையைச் சேர்ந்த மீனவரான கனகசூரியன் அழகதுரை என்பவர், விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் என்ற சந்தேகத்தில் 2008 ஜூன் 29ஆம் நாள், உப்பூறல் சோதனைச் சாவடியில் சிறிலங்கா படையினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் வெடிபொருட்களை வைத்திருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவசரகாலச்சட்ட விதிகளின் கீழ், திருகோணமலை மேல் நீதிமன்றத்தில், அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் அரசாங்க பிரதி பகுப்பாய்வாளர் ஆகியோர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்

இந்தக் குற்றச்சாட்டுகளை சந்தேக நபர் நிராகரித்திருந்த போதும், அவரை குற்றவாளி எனக் கண்ட திருகோணமலை மேல் நீதிமன்றம், 2014 ஜூலை 10ஆம் நாள், ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிராகவும் தண்டனைக்கு எதிராகவும், கனகசூரியன் அழகதுரை மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

தமது கட்சிக்காரருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வலுவாக இல்லை என்றும், ஆதாரங்களை முறைப்படி சமர்ப்பிக்கவில்லை என்றும் மனுதாரரின் சட்டவாளர், வாதிட்டார். சாட்சியங்களும், ஆதாரங்களும் சரியாக முன்வைக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கில் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சட்டவாளர், இந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்க விரும்பவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் திருகோணமலை மேல் நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனைத் தீர்ப்பை ரத்துச் செய்து, குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *