‘தமிழ்3இன் தமிழர் மூவர் விருது -2019’ -நோர்வேத் தமிழ் இளைய ஆளுமைகள் மதிப்பளிப்பு
நோர்வேயில் தமிழ் 3 வானொலி நடாத்தும் வருடாந்த சங்கமம் நிகழ்வின் முக்கிய அடையாளமாக ‘தமிழர் மூவர் விருது விளங்குகிறது- இந்த ஆண்டுக்கான தமிழர் மூவர் விருது வழங்கல் 26.05.19 ஒஸ்லோவில் இடம்பெற்றது.
உளவளத்துணை வளவாளர் ரக்சனா சிறீஸ்கந்தராஜா, அரங்க-தொலைக்காட்சி நடிகர் கோபி பிரபாகரன், ஊடகவியலாளர் றெனோல்ட் டெரிசன் கிறிஸ்தோபர் ஆகிய மூன்று வெவ்வேறு துறைசார்ந்து முன்னுதாரணமாக விளங்கும் இளையவர்கள் நோர்வே தமிழ்3 வானொலியினால் வழங்கப்படும் ‘தமிழர் மூவர்’ விருதுக்கான இந்த ஆண்டிற்கான முன்மாதிரி இளையவர்களாக தெரிவாகியுள்ளனர்.
ரக்சனா சிறீஸ்கந்தராஜா – உளவியல் வளவாளர்
கலந்துரையாடல்கள் கருத்தரங்குகள் மூலம் தமிழச் சமூகத்தின் மத்தியில் உளநல, உளவளத்துணை பற்றிய விழிப்புணர்வுச் செயற்பாடுகளில் சமூக அக்கறையோடு ஈடுபட்டு வருபவர். தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உளநலம் பற்றிய சரியான பார்வை இல்லாததையும் அது ஒரு பேசாப்பொருளாக இருப்பதையும் மாற்றும் நோக்குடன் தொடர்ந்து பல கருத்தரங்குகளையும் கலந்துரையாடல்களையும் நடத்தி வருபவர்.
தமிழர்களிற்கிடையே நிலவுகின்ற உளநலம்பற்றிய விளக்கக் குறைபாட்டைப் போக்குவதற்கான அக்கறையுடன் செயற்படுபவர்.
-தமிழ் மக்கள் மத்தியில் உளநலமென்பது ஒரு பேசாப் பொருளாகவே இருக்கிறது. மனநோய் பற்றிய விளக்கக் குறைபாட்டினை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது.
கோபி பிரபாகரன்: அரங்க-திரை நடிகர்
ஒரு நடிகனாக வரவேண்டும் என்ற உத்வேகத்துடன் பல தடைகளையும் கடந்து சிரத்தையுடன் உழைத்தவர். முறையாக நடிப்புத் துறையினைப் பயின்ற இவர் நடிப்புத் துறையைச் சார்ந்த பலருடனும் தொடர்பைக் கொண்டிருக்கிறார். Norsk tipping எனப்படுகின்ற NRK – நோர்வேத் தேசியத் தொலைக்காட்சியின் வாராந்த தேசிய சீட்டிழுப்பு நிகழ்ச்சியில் ஒரு அறியப்பட்ட முகமாக இருந்துள்ளார். இப்போது பல நாடகத் தயாரிப்புக்களிலும் தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார் இந்த இளைஞர்.
எமது கதைகளைச் சொல்கின்ற திரைப்படத் துறையே இவரது அடுத்த இலக்கு என்கிறார்.
– எங்கள் முகங்களையும் எங்கள் கதைகளையும் வெளியில் கொண்டுவர எனக்கு விருப்பம். அதை நாங்கள்தான் செய்ய வேண்டும் என்று தனது உள்ளக் கிடக்கையைப் பகிர்ந்து கொண்டார்.
றெனோல்ட் டெரிசன் கிறிஸ்தோபர் – ஊடகவியலாளர், பத்தி எழுத்தாளர்
பத்து வயதிலே நோர்வேக்கு இடம்பெயர்ந்த இந்த இளைஞன். தாயகத்தில் இடம்பெற்ற போரும் அனர்த்தங்களும் போதிய அளவு நோர்வேப் பெரும் சமூகத்து ஊடகங்களில் வெளிவராதது இவரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது . தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களில் நாடுபற்றிய விடயங்களை பத்திரிகைகளிலும் சமூக ஊடகங்களிலும் எழுதிவருபவர்.
ஊடகவியலை முறையே கற்று, NRK நோர்வேத் தேசியத் தொலைக்காட்சி நிறுவனத்தில் சில வருடங்கள் பணிபுரிந்த இவர் இப்போது வேறொரு பெரும் தொலைக்காட்சித் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிகிறார். தமிழ் இளையவர்களின் சமூக ஈடுபாடு இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதில் கரிசனையாக உள்ளார்.
– விமர்சனபூர்வமான பார்வை வளர வேண்டும். அதற்கு உலகத்தில் என்ன நடக்குது என்பதை அறிய வேண்டும். கருத்துரிமையும் மாறுபட்ட சிந்தனைகளும் மதிக்கப்பட வேண்டும் என்று கூறும் றெஜினோல்ட் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இந்தப் போக்குகளில் பெரும் குறைபாடுகள நிலவுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.
நோர்வே-தமிழ் இளையவர்கள் மத்தியிலிருந்து துறைசார் ஆளுமையாளர்களாகவும், “Role Models” எனப்படும் முன்மாதிரியாகவும் கொள்ளக் கூடியவர்களை அடையாளப்படுத்தி மதிப்பளிக்கும் நிகழ்வு இது
ஒவ்வோராண்டும் நாடு முழுவதிலுமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டு, சுயாதீனமான தெரிவுக்குழு அமைக்கப்பட்டு இவ் விருதுக்கான தெரிவு இடம்பெற்று வருகின்றது.
கல்வி மற்றும் தொழிற்தெரிவில் சமூக வழமைக்கு மாறான முன்னுதாரணமாக துறைசார்ந்து சாதிப்பவர்களை அடையாளப்படுத்துவது விருது வழங்கலின் அடிப்படை நோக்கு. அவர்களை முன்னுதாரணமாக நிறுத்துவதன் மூலம் ஏனைய இளையவர்களுக்கு உந்துதலை வழங்குதும் இவ்விருதின் சமூக விளைவு சார்ந்த நோக்கமாகும்.
இம்முறை ஊடகவியலாளர் யோகான் சண்முகரட்ணம் தலைமையில் ஐவர் கொண்ட குழுவினர் இந்த ஆண்டுக்கான முன்மாதிரி ஆளுமையாளர் மூவரைத் தெரிவுசெய்தனர்.
26.05.19 இடம்பெற்ற சங்கமம் நிகழ்வில் நடுவர்குழுவின்தலைவராகக் கடமையாற்றிய ஊடகவியலாளர் யோகான் சணமுகரட்ணம் மற்றும் மருத்துவத்துறை மாணவியும் நோர்வேயின் ஐ.நா மாணவர் மையத்தின் தலைவருமான ஹம்சிகா பிரேம்குமார் ஆகியோர் இந்த விருது வழங்கலை வைபவபூர்வமாக நெறிப்படுத்தினர்.
யோகான் சண்முகரட்ணம் நோர்வேயிய ஊடக எழுத்துத்துறையில் நீண்டகால அனுபவம் உடையவர். இங்குள்ள சமூகத்தாக்கம் மிக்க முக்கிய நாளிதழ்களில் ஒன்றான Klassekampen இல் 2003 இலிருந்து ஊடகவியலாளராகப் பணிபுரிகின்றார். சில ஆண்டுகள் அதன் வெளிநாட்டுப் பகுதிக்கான ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
ஹம்சிகா பிரேம்குமார், மருத்துவக் கல்வியையும், அரசறிவியல் மற்றும் மேம்பாட்டுக் கல்வியையும் ஒரே நேரத்தில் கற்றுவருவதோடு, சமூக மேம்பாட்டில் அக்கறை கொண்டவராக பல்வேறு சர்வதேச தன்னார்வ நிறுவனங்களிலும் இணைந்து பணி செய்து வருபவர். கடந்த ஆண்டின் தமிழர் மூவரில் ஒருவராக மதிப்பளிக்கப்பட்டவர்.
இம்முறை தெரிவு செய்யப்பட்ட தமிழர் மூவருக்கான விருதுகளை விருதுகள் முறையே தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த சமூக, அரசியல், அரங்கியல் செயற்பாட்டாளரும் முன்னாள் இலங்கை பாராளுமன்ற உறுப்பினருமான பத்மினி சிதம்பரநாதன், இசைத்துறை வல்லுனரும் நோர்வேயில் பல இளைய இசைக்கலைஞர்களை உருவாக்கியவருமான சுந்தர் கணேசமூர்த்தி (குட்டி மாஸ்ரர்), மற்றும் மருத்துவரும் ஆய்வாளருமான ரவீனா மனோதீபன் ஆகியோர் வழங்கி மதிப்பளித்தனர்.
-ராஜன் செல்லையா – ரூபன் சிவராஜா