மேலும்

தாக்குதல்களை முன்னரே அறிந்திருந்தார் சிறிலங்கா அதிபர் – கிளம்பும் புதிய சர்ச்சை

ஈஸ்டர் நாளன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக, முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு  தெரியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிடுகையில்,

அரசாங்க புலனாய்வு சேவை பணிப்பாளர், மூத்த பிரதி காவல்துறை மா அதிபர், நிலந்த ஜயவர்தன, குறைந்தது மூன்று சந்தர்ப்பங்களில் சிறிலங்கா அதிபரிடம் விரிவான அறிக்கையை வழங்கினார்.

அதிகாரபூர்வமான மற்றும் பல ஆதாரங்களை அவர் அறிந்திருந்திருந்தார் என்று பாதுகாப்பு அமைச்சின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

அவ்வாறான அறிக்கைகளில் ஒன்று, புத்தாண்டு விடுமுறைக்கு முன்னதாக, ஏப்ரல் 11ஆம் நாள் வழங்கப்பட்டது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதி செய்தன.

இரண்டாவது அறிக்கை, ஐந்து நாட்களுக்குப் பின்னர், அரச புலனாய்வுச் சேவை தலைவரால் வழங்கப்பட்டது.

மூன்றாவது அறிக்கை, தாக்குதல் நடப்பதற்கு முன்னதாக, ஏப்ரல் 20ஆம் நாள் மாலை பாதுகாப்பு அமைச்சுக்கு, வழங்கப்பட்டது.

ஏப்ரல் 20ஆம் நாள் அறிக்கை வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளிடம் இருந்த குறிப்பாக இந்திய புலனாய்வு அமைப்பிடம் இருந்து கிடைத்திருந்தது.

கடைசிநேர அறிக்கைகள் கிடைத்தபோது, புலனாய்வு அறிக்கைகள் தொடர்பாக காவல்துறையை எச்சரிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகளிடம், நிலந்த ஜயவர்த்தன கோரியிருந்தார்.

இந்த எச்சரிக்கைகள் காவல்துறை மா அதிபருக்கு பரிமாறப்பட்டதாக அறியப்படுகிறது.

எனினும், குண்டுத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தேவாலயங்கள் குறிவைக்கப்படலாம் என்று புலனாய்வு அறிக்கைகளில் சுட்டிக்காட்டப்பட்ட போதும், அந்த அச்சுறுத்தல்கள் தொடர்பாக தேவாலயங்களை எச்சரிக்க காவல்துறை மா அதிபர் தவறிவிட்டார்.

சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமானவர் என்று நம்பப்படும், அரச புலனாய்வுச் சேவையின் தலைவர், நிலந்த ஜயவர்த்தன சிங்கப்பூரில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த அதிபர் மைத்திரிகால சிறிசேனவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியிருந்தார்.

குண்டுத் தாக்குதல் நடப்பதற்கு சில மணிநேரம் முன்னதாக, சிறிலங்கா அதிபருக்குத் தெரியப்படுத்தி, நிலந்த ஜயவர்த்தன எச்சரிக்கை செய்திருந்தார்.

புலனாய்வுத் தலைவர்கள், குறிப்பாக அரச புலனாய்வுத் தலைவர், ஏனைய  நிர்வாகிகள் மற்றும் அமைச்சின் ஏனைய முகவர் அமைப்புகளுக்கு அறிக்கைகளை வழங்குவதற்கு முன்னர், முப்படைகளின் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபருக்கு அனுப்புவது வழக்கம் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர், தெரிவித்தார்.

எனினும், புலனாய்வு அமைப்பிடம் இருந்து கிடைத்த உயர்மட்ட எச்சரிக்கைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக, சிறிலங்கா அதிபரிடம் இருந்து முப்படையினர் உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எந்த உத்தரவும் கிடைக்கவில்லை.

புலனாய்வு அறிக்கைகள் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்றும், குண்டுகள் வெடித்த பின்னர் சமூக ஊடகங்களில் பார்த்தே அதனைத் தெரிந்து கொண்டதாகவும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

அச்சுறுத்தல் தொடர்பாக பாதுகாப்பு செயலரோ, காவல்துறை மா அதிபரோ தமக்கு தெரியப்படுத்தவில்லை என்று சிறிலங்கா அதிபர் குற்றம்சாட்டியிருந்தார்.

தமது பொறுப்பை அவர்கள் நிறைவேற்றவில்லை என்று பதவி விலகுமாறும் அறிவுறுத்தினார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு முதல் முறையாக வெளிநாட்டு புலனாய்வு அமைப்பினால், ஏப்ரல் 8ஆம் நாள் எச்சரிக்கை அனுப்பப்பட்டது. மறுநாள் அச்சுறுத்தல்கள் தொடர்பான முதலாவது கூட்டம் நடைபெற்றது.

அதேநாள், தேவையான  நடவடிக்கைககளை முன்னுரிமை அடிப்படையில் எடுக்குமாறு,  காவல்துறை தலைவருக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு வழிகாட்டுதல்களை வழங்கியது.

எனினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலானது கடுமையானதாக, மிருகத்தனமானதாக, நன்கு ஒருங்கிணைக்கப்பட்டதாக இருக்கும்  என்று, பாதுகாப்பு அமைப்புகளில் இருந்த யாரும் கற்பனை செய்து பார்க்கவில்லை என்றும், செயற்பாட்டுத் தவறுகள் பல மட்டங்களில் இருந்தது என்றும் பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறைபாடுகள் தொடர்பாக, அதிபர் விசாரணைக் குழு பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த பலரிடம் விசாரிக்கலாம் என்று அந்த அதிகாரி கூறினார்.

இந்த விசாரணைக்குழு முன்பாக, பாதுகாப்புச் செயலராக    இருந்த ஹேமசிறி பெர்னான்டோவும், காவல்துறை மா அதிபராக இருந்த பூஜித ஜயசுந்தரவும் ஏற்கனவே சாட்சியம் அளித்துள்ளனர். என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எனினும், தாக்குதல் எச்சரிக்கைகளை சிறிலங்கா அதிபர் முன்கூட்டியே அறிந்திருந்தார் என நேற்று ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவிய செய்தி பொய்யானது என்று சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *