மேலும்

சிரிய நகரை இழந்ததற்கான பதிலடியே சிறிலங்கா தாக்குதல் – ஐஎஸ் தலைவர்

ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் புதிய காணொளி ஒன்றின் மூலம் தோன்றியுள்ள இஸ்லாமிய தேசம் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, சிரியாவின் கடைசிக் கோட்டையை இழந்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

நேற்று ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அந்தக் காணொளியில், ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, தனது மூன்று  முக்கிய தலைவர்களுடன் பேசுகின்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

சிரியாவின் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரமான பக்கூஸ் கடந்த மாதம், சிரியப் படைகளிடம் வீழ்ச்சியடைந்திருந்தது.

இதுகுறித்து இந்தக் காணொளியில் பேசியுள்ள, ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி,

”பக்கூஸ்  நகரத்துக்கான சமர் முடிந்து விட்டது, ஜிகாத் செய்யும்படி கடவுள் கட்டளையிட்டுள்ளார். வெற்றி பெறுமாறு அவர் கட்டளையிடவில்லை.

பக்கூஸ் நகரத்திலுள்ள எமது சகோதரர்களுக்கு பழிவாங்கும் வகையிலேயே சிறிலங்காவில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்லாமிய அரசின் பதிலடியின் சிறிய பகுதி தான் இது” என்றும் அவர் கூறியுள்ளார்.

ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல்- பக்டாடி, கடைசியாக ஈராக்கின் மொசூல் நகரில் 2014ஆம் ஆண்டு பொதுவெளியில் காணப்பட்டிருந்தார்.

அதற்குப் பின்னர், 47 வயதான அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டார்.

5 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் காணொளி மூலம் மீண்டும் தோன்றி சிறிலங்கா தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *