சிறிலங்கா மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரை
ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகள் சிலவற்றை நடைமுறைப்படுத்தத் தவறிய சிறிலங்காவுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் வரும் 20ஆம் நாள், சமர்ப்பிக்கவுள்ள, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரின், சிறிலங்கா தொடர்பான அறிக்கை இன்று பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க, பொறுப்புக்கூறலின் அடிப்படையில், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை உறுதி செய்வதாக, 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கி ஏற்றுக் கொண்டிருந்தது, எனினும், அதற்கான தீர்க்கமான நடவடிக்கைகள் மற்றும் பொருத்தமான தொடர்பாடல், இல்லாததால், பரந்தளவிலான விரக்தியை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போதிய முன்னேற்றங்கள் இன்மையானது, சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமையை தொடர்ந்தும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், உறுதியான நிகழ்ச்சி நிரலில் வைத்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதாகவும், அந்த அறிக்கையில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவை சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்ந்தும் நெருக்கமான தொடர்புகளைப் பேண வேண்டும் என்பதுடன், சிறிலங்காவின் நிலைமைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையை தொடர்ந்தும், சிறிலங்கா அரசாங்கத்துடன் நெருங்கிச் செயற்படுமாறும், உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரை செய்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், நாட்டின் முன்னேற்றங்களைக் கண்காணிப்பதுடன், சித்திரவதை, காணாமல் ஆக்கப்படுதல், போர்க்குற்றங்கள், அல்லது மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக உலகளாவிய அதிகாரவரம்புகளுக்கு அமைய, சாத்தியமான விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கை எடுத்தல் மற்றும் நம்பகமான உள்நாட்டு செயல்முறைகள் இல்லாவிடின், மேலதிக பொறுப்புக்கூறலுக்கான ஏனைய வாய்ப்புகளை கண்டறிய வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
பொறுப்புக்கூறல், நீதி, மற்றும் நல்லிணக்கத்துக்குப் பொருத்தமான அமைப்புகளை உருவாக்க ஆதரவளித்து, கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காணும் சிறிலங்கா மக்களின் முயற்சிகளுடன், தொடர்ந்து இணைந்து செயற்படுமாறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகளைக் கண்காணிக்கவும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர், ஐ.நா மனித உரிமைகள் பேரவை, மற்றும் மனித உரிமைகள் பொறிமுறைகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கவும், தொழில்நுட்ப உததவிகளை அளிப்பதற்குமான முழு அளவிலான, பணியகம் ஒன்றை சிறிலங்காவில் அமைக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துக்கு, சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.