மேலும்

கி.பி.அரவிந்தன்: உணர்வுக்குள் இருந்து வழிநடத்தும் ஒப்பற்ற ஆளுமை

ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காக, உரிமைப் போராளியாக, அரசியல் போராளியாக, ஆயுதப் போராளியாக, ஊடகப் போராளியாக, இலக்கியப் போராளியாக, பலமுனைகளில் தடம் பதித்த கி.பி.அரவிந்தன் அவர்கள் மறைந்து இன்றோடு நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன.

சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுக்கு எதிராக துண்டுபிரசுரங்களின் மூலம் தமிழ் மக்களை விழிப்படையச் செய்வதில் ஆரம்பித்து, தமிழ் மக்களின் உரிமைகளை உரத்துச் சொல்வதற்காக ‘புதினப்பலகை’ இணையத் தளத்தை முன்னெடுத்துச் சென்றது வரை அவரது வரலாறு போராட்டங்களால் தான் நிரம்பியிருக்கிறது.

கி.பி.அரவிந்தன் ஒரு வரலாறு. ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் அவருக்கென ஒரு தனிவரலாறுப் பக்கம்  உள்ளது.

ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காக கி.பி.அரவிந்தன் அவர்கள் முன்னெடுத்த ஒவ்வொரு நகர்வுமே அவருக்குப் போராட்டம் தான்.

பதின்ம வயதுகளில் ஆரம்பித்த அவரது விடுதலைக்கான போராட்ட வாழ்வு, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், இதே நாளில் நோயுடனான போராட்டத்தில் முடிவுக்கு வந்தது.

ஆனாலும், அவர் முன்னெடுத்து வந்த, ஈழத்தமிழினத்தின் விடுதலைக்கான, உரிமைகளுக்கான போராட்டம் இன்னமும் முடிந்து விடவில்லை. தமிழருக்கான விடிவு கிட்டும் வரை அது ஓயாது. முடியாது.

2009ஆம் ஆண்டு போரின் மூலம் தமிழரின் ஆயுதப் போராட்டத்துக்கு முடிவுகட்டப்பட்டது.

அதற்குப் பின்னர், அரசியல் போராட்டம், இராஜதந்திரப் போராட்டம் என்றெல்லாம் ஆர்ப்பரித்த போதும், ஈழத்தமிழினம் இன்னமும் அடிப்படை வாழ்வுக்கான போராட்டத்தில் இருந்து மீளவில்லை.

போர் முடிந்து பத்து ஆண்டுகளாகியும், அதன் பாதிப்புகளில் இருந்து மீளமுடியாமல், அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்ற நிலையில் தான் தமிழர்கள் வாழும் சூழல் தொடர்கிறது.

ஆயுதப் போராட்டத்துக்குப் பின்னைய காலகட்டத்தில், ஈழத் தமிழரின் போராட்ட உணர்வையும், விடுதலை நெருப்பையும் மழுங்கடிக்க- எல்லாப் பரப்புகளிலும், பல்வேறு முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

அவ்வாறான முனைப்புகளுக்குள் சிக்கிவிடாமல், ‘புதினப்பலகை’யை வழிநடத்திச் சென்றவர் கி.பி.அரவிந்தன் அவர்கள்.

அவர் இல்லாத நான்கு ஆண்டுகளில் தான், அவரது வெற்றிடத்தின் வெறுமையை, ஆளுமையின் ஆழத்தை- அவரது பெறுமானத்தின் உச்சத்தை எம்முள் வலுவாக உணர முடிந்திருக்கிறது.

அவர் விட்டுச்சென்ற ஆளுமையின் உறுதியே இன்னமும் எம்முள் இருந்து வழிநடத்துகிறது. ‘புதினப்பலகை’யின் தடங்களைப் பலப்படுத்துகிறது. இன்னமும் வீரியத்துடன் எழும் உற்சாகத்தைக் கொடுக்கிறது.

அந்த உறுதியின் வழியே நாம் பயணிப்போம்.

அவரது நினைவுகளுடனும், உணர்வுகளுடனும் இனியும்  தொடரும் எம் பயணம்.

-‘புதினப்பலகை’ குழுமத்தினர்
2019-03-08

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *