மேலும்

அமெரிக்க கடற்படைக்கு விநியோக வசதி – நாடாளுமன்றத்தில் சூடான விவாதம்

இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு விநியோக   ஆதரவு வழங்கும் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சி உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.

2018இல் அமெரிக்கத் தூதரகத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட உடன்பாடு குறித்து வாசுதேவ நாணயக்கார நேற்று சபையில்  கேள்வி எழுப்பினார். அதற்குப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளிக்கையில், அந்த உடன்பாடு 1995இல் கையெழுத்திடப்பட்டது என்று கூறினார்.

அதையடுத்து, அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்ரெனிஸ் சிறிலங்காவை விநியோக கேந்திரமாக பயன்படுத்தியமை தொடர்பாக, வெளியான அறிக்கை குறித்தும்,  அதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டதா என்றும், நாடாளுமன்றத்துக்கு ஏன் அறிவிக்கவில்லை என்றும், வாசுதேவ நாணயக்கார கேள்வி எழுப்பினார்.

“இந்தியப் பெருங்கடலில் செயற்படும் அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு விநியோகங்களை வழங்கும் வகையில் தற்காலிக அடிப்படையில்  விநியோக  மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய பெருங்கடலில் செயற்படும், அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு முக்கிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதே இந்த நடவடிக்கையின் அடிப்படை நோக்கமாகும்.

இந்த உடன்பாடு, நாட்டின் இறைமை தொடர்பான அரசியலமைப்பின்  விதிகள் மற்றும் அணிசேர கொள்கையுடன் இணங்கிப் போகிறதா? சிறிலங்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்காதா?” என்று வாசுதேவ நாணயக்கார  கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “அமெரிக்க கடற்படை மட்டுமல்ல, எந்த நாட்டின்  கடற்படையும், நாட்டின் எந்தவொரு விமான நிலையம் அல்லது துறைமுகத்தில் இருந்தும் விநியோக வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியப் பெருங்கடலில், அமெரிக்க கடற்படையின் பிரதான விநியோக மையம் டியேகோ கார்சியாவில் உள்ளது. தேவைப்படும் போது மற்ற நாடுகளும் தற்காலிகமாக அந்த வசதிகளை வழங்குகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் காரணமாக அமெரிக்கா பெரிய தளங்களைக் கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை.

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் போட் விமானந்தாங்கிக் கப்பலில், சிறிலங்கா விமானப்படையிடம் உள்ள விமானங்களை விட அதிகமான விமானங்கள் உள்ளன. நிரந்தரமாக அமெரிக்கா இங்கு வரவில்லை. ஆயுதங்களைக் கொண்டு வர நாங்கள் அனுமதிக்கவில்லை.

வியன்னா பிரகடனத்தின் கீழ், அளிக்கப்பட்டுள்ள வசதிகளைக் குறிப்பிட்டு, 1995ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டை, புதுப்பித்துக் கொள்வதற்கு விருப்பம் வெளியிட்டு, 2018 ஓகஸ்ட் 28ஆம் நாள், வெளிவிவகார அமைச்சுக்கு ஒரு கடிதம் கிடைத்தது.

இந்த வசதிகள் முன்னரே வழங்கப்பட்டவை. நாங்கள் இன்னமும் இறுதியான முடிவை எடுக்கவில்லை.” என்று கூறினார்.

அதையடுத்து, வாசுதேவ நாணயக்கார,“ 2018ஆம் ஆண்டு புதிய உடன்பாடு கையெடுத்திடப்பட்டுள்ளதாகவும், அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு எடுத்து வரப்படும் பல்வேறு பொருட்கள் தொடர்பாக, குடிவரவு, குடியகல்வு, பாதுகாப்பு, சுங்கச் சட்டங்களில் இருந்து அமெரிக்காவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும்,இதற்கு யார் அதிகாரம் அளித்தது என்றும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதனை எங்கிருந்து அறிந்தீர்கள் என்றும், எந்த ஆவணத்தின் அடிப்படையில் இதனைக் கூறுகிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார்.

வெளிவிவகார அமைச்சிடம் இருந்து அதனைப் பெற்றதாக வாசுதேவ நாணயக்கார பதிலளித்தார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “அது உங்களின் அரசாங்கம் பதவியில் இருந்த காலத்தில், கையெழுத்திடப்பட்ட கையகப்படுத்தல் மற்றும் குறுக்குசேவைகள் உடன்பாடு. அதன் விளைவாகத் தான் எல்லாம் ஆரம்பித்தது. அந்த உடன்பாடு என்னவென்று உங்களுக்குத் தெரியுமா“ என்று கேள்வியைத் தொடுத்தார்.

அதற்கு வாசுதேவ நாணயக்கார, “நான் 2018 உடன்பாட்டைப் பற்றித் தான் கேட்கிறேன், நான் அதை கண்டுபிடித்து வைத்திருக்கிறேன்.  அது வெளிவிவகார அமைச்சின் கடித தலைப்புடன் உள்ளது. நான் அதை உங்களிடம் அனுப்புகிறேன். அமெரிக்க இராணுவ அதிகாரிகள் உள்ளூர் சட்டங்களுக்கு உட்படாமல், சுதந்திரமாக நடமாட அனுமதிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதையடுத்து, வாசுதேவ நாணயக்காரவிடம் இருந்து அந்த உடன்பாட்டு ஆவணத்தை வாங்கிப் பார்த்த சிறிலங்கா பிரதமர், அது 1995 மே 16ஆம் நாளிடப்பட்டிருப்பதாக கூறி, அதன் உள்ளடக்கத்தையும் வாசித்துக் காண்பித்தார்.

இந்த விவாதத்தின் போது, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எந்தவொரு நாட்டினதும் இராணுவத் தளத்தை அமைப்பதற்கு தமது அரசாங்கம் அனுமதிக்காது என்றும், எந்தச் சூழ்நிலையிலும் இராணுவத் தளபாடங்களை மாற்றுவதற்கு, சிறிலங்காவைப் பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் கூறினார்.

அத்துடன் இராணுவத் தளபாடங்கள் அல்லாத பொருட்களை விநியோகிக்கும் கேந்திரமாக சிறிலங்காவை அமெரிக்க கடற்படை பயன்படுத்துவதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *