மேலும்

படுகொலைச் சதித் திட்டம் – விசாரணை வளையத்தில் உயர்மட்டக் காவல்துறை அதிகாரிகள்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களைப் படுகொலை செய்ய சதித் திட்டம் தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையின். கட்டளை அதிகாரி உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாதாள உலக தலைவர் மகதுரே மதுஸ் உதவியுடன், இந்த சதித் திட்டத்தை தீட்டினார் என்று தீவிரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த நாலக சில்வா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர், விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறப்பு அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் லதீப் மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் நந்தன முனசிங்க ஆகியோரிடம் நேற்று விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த நிலையில் இன்று, அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளரான பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தனவிடம், விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்படவுள்ளது.

நாலக சில்வாவுக்கும், நாமல் குமாரவுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலில், பிரதி காவல்துறை மா அதிபர்களான லதீப், முனசிங்க, ஜெயவர்த்தன ஆகியோரின் பெயர்களும் வருவதால், அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட வேண்டிய தேவை இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *