மேலும்

சட்டமா அதிபர் திணைக்களம், குற்றப் புலனாய்வுப் பிரிவு மீது பாய்ந்த சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இன்னமும் வழக்குகளைத் தாக்கல் செய்ய முடியாத நிலையிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவும், சட்டமா அதிபர் திணைக்களமும் இருப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று ஊடக ஆசிரியர்கள், பிரதானிகளுடனான சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர்,

“இராணுவ அதிகாரிகளைக் கைது செய்து தடுத்து வைக்கிறார்கள். விசாரணை செய்து விட்டு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் விடுவிக்கிறார்கள். ஆனாலும், இன்னமும் எவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்படவில்லை.

லசந்த விக்ரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட கடத்தல், கீத் நொயார் கடத்தல், 11 இளைஞர்கள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில், 2015ஆம் ஆண்டு விசாரணைகள் தொடங்கப்பட்ட பின்னர், எந்தவொரு இராணுவ சந்தேக நபர்களுக்கு எதிராகவும், ஒரு வழக்கேனும் தாக்கல் செய்யப்படவில்லை.

இராணுவத்தின் முன்னாள் இரண்டாம் நிலைத் தளபதியான, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை கைது செய்து 5 மாதங்கள் தடுத்து வைத்திருந்தார்கள்.  ஆனால் அவருக்கு எதிராக எந்த வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை.

11 இளைஞர்கள் கடத்தல்“ தொடர்பான வழக்கில் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அனைவரையும்  தடுத்து வைத்திருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு கூறியது. ஆனால் அனைவரும் பிணையில் வெளியே வந்து விட்டனர். இதுவரை அவர்கள் மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை.

ஒரு சந்தேக நபரை கைது செய்யவதில் இருந்து தடுத்தார் என்பதே, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி மீதான குற்றச்சாட்டு.

இரண்டு நாட்களுக்கு முன்னர் சட்டமா அதிபர், காவல்துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரிகளைச் சந்தித்த போது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதில் தோல்வியடைந்திருப்பது குறித்து அவர்களுக்கு சுட்டிக்காட்டினேன்.

அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாவிட்டால், கைது செய்து தடுத்து வைக்கக் கூடாது என்று அவர்களுக்கு நான் கூறினேன்.

11 பேரையும் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி கொன்று விட்டார் என்ற அடிப்படையில் தான் செய்திகள் வெளியிடப்படுகின்றன.

இராணுவ அதிகாரிகளை கைது செய்து தடுத்து வைத்து விடுவிக்கப்படுவதால், போர் வீரர்களை அரசாங்கம் வேட்டையாடுகிறது என்ற அவப்பழி ஏற்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *