மேலும்

இடி அமீன் போல இருக்கிறார் – சிறிலங்கா இராணுவத் தளபதியை தாக்கும் பொன்சேகா

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, இடி அமீன் போலத் தோற்றமளிக்கிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை மறுசீரமைத்தல் மற்றும், மீள நிலைப்படுத்தல் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை சரத் பொன்சேகா கடுமையாக விமர்சித்து வருகிறார்.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்த முனைகிறார் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்றும், இராணுவத்தினரை நிலைப்படுத்தும் விடயத்தில் கருத்துக் கூறும் உரிமை முன்னாள் படை அதிகாரிகளுக்கு கிடையாது என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், களனியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட, சரத் பொன்சேகா-

“இராணுவத் தளபதி குழப்பமான மனோநிலை கொண்டவர்.

அவர் முதலில்,  மதிப்புக்குரிய ஒரு அரச அதிகாரி எவ்வாறு தனது தலைமுடியை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மொட்டையடித்து, இடி அமீன் போல தோற்றமளிக்கிறார்.

இப்போதைய இராணுவத் தளபதி போர் நடந்து கொண்டிருந்த போது, பிரிகேடியராக மாத்திரமே இருந்தவர்.

எம்மை விட அதிகம் தெரிந்தவர் என்று அவர் நினைப்பாரேயானால், அவர் தற்போது அவரது வாலில் தான் அமர்ந்திருக்கிறார்.

அவரது திறமைக்காக இராணுவத் தளபதியாக நியமிக்கப்படவில்லை. ஏனையவர்களின் தவறுகளால் தான் அவர் அந்தப் பதவியை அடைய முடிந்தது.” என்றும் அவர் சாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *