மேலும்

அமல் கருணாசேகர கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கோத்தாவிடம் இன்று விசாரணை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

இன்று காலை 10 மணியளவில் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்தில் முன்னிலையாகும்படி, கோத்தாபய ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கீத் நொயார் கடத்தல் தொடர்பாக கோத்தாபய ராஜபக்சவிடம், விசாரணை நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

கீத் நொயார் கடத்தல் வழக்கு கடந்த திங்கட்கிழமை கல்கிசை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கோத்தாபய ராஜபக்ச மற்றும் சரத் பொன்சேகா ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும் நீதிவான உத்தரவிட்டிருந்தார்.

2008 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் இரவு கீத் நொயார் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் நடந்த காலப்பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டு, கடந்த திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்..

விசாரணைகளின் போது அவர் அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே, கோத்தாபய ராஜபக்சவிடம் இன்று விசாரணைகள் நடத்தப்படும் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *