மேலும்

நாமலுடன் இன்று புதுடெல்லிக்குப் பறக்கிறார் மகிந்த – மோடி, டோவல், சோனியாவை சந்திக்க வாய்ப்பு

மூன்று நாட்கள் பயணமாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார். பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்தியா செல்கிறார்.

புதுடெல்லியில் நாளை மறுநாள் நடைபெறும் கருத்தரங்கு ஒன்றில் மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுடன், அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச மாத்திரமே,இந்தப் பயணத்தில் இணைந்து கொள்ளவுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுடன் எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும், இந்திய வெளிவிவகார அமைச்சு, இந்திய தூதரகம், மற்றும் மகிந்த ராஜபக்சவின் செயலகம் ஆகியன இணைந்தே ஒழுங்குகளைச் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பயணத்தின் போது, மகிந்த ராஜபக்சவுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கவும், சிறப்பாக வரவேற்பு அளிக்கவும் இந்திய அரசாங்கம் ஒழுங்குகளை செய்துள்ளது.

மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம், சிறிலங்காவில் மாத்திரமன்றி, இந்த வலயத்தில் உள்ள ஏனைய நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதேவேளை புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளும் மகிந்த ராஜபக்ச, முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்று ‘தி ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், மற்றும் சோனியா காந்தி ஆகியோரையும் மகிந்த ராஜபக்ச சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனினும், இந்தச் சந்திப்புகள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு எதையும் கூறவில்லை. இந்தப் பயணம் தனிப்பட்ட தரப்புகளாலேயே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு தகவல் தெரிவிக்கிறது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *