மேலும்

தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வு கோரிக்கை சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது – சம்பந்தன்

அரசியல் தீர்வு மூலம் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தத் தவறினால், இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்று எச்சரித்துள்ளார்  எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்.

சிறிலங்காவுக்கான ஐ.நாவின்  புதிய வதிவிடப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுள்ள,  ஹனா சிங்கர், இன்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில், இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், “முன்னைய அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில், இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் நடவடிக்கைகளில் மாற்றம் உள்ளது, எனினும், மக்கள் எதிர்பார்த்த அளவில் கருமங்கள் இடம்பெறவில்லை.

காணாமல் போன தனது அன்புக்குரியவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவிக்கும் ஒருவர் மனதில் சமாதானம் குடிகொள்ள முடியாது.

மக்களின் இந்த அடிப்படையான நாளாந்த ஏக்கங்களுக்கு சரியான தீர்வும் நீதியும் கிடைக்க வேண்டியது அவசியம்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற வன்முறைகள் மீண்டும் இந்த நாட்டில் இடம்பெற அனுமதிக்க முடியாது. அவர்கள் அதனை உறுதி செய்வதற்காக ஒரு புதிய அரசியல் யாப்பு அவசியம் .

அதிகாரப்பகிர்வு தொடர்பில் தமிழ் மக்களின் கோரிக்கை நியாயமானது மட்டுமன்றி, அது சர்வதேச நியமங்களுக்கும் உட்பட்டது.

தமிழ் மக்கள் கடந்தகால தேர்தல்களில் ஒருமித்த – பிரிக்கப்படமுடியாத இலங்கை தீவுக்குள் அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். மக்களின் இந்த ஜனநாயக தீர்ப்பை மதிக்க வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது.

தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எட்டப்படாதன் விளைவாக எழுந்த ஆயுதப் போராட்டத்தினால், சிறிலங்காவை விட பின்தங்கிய நிலையில் இருந்த நாடுகள்,  அபிவிருத்தியிலும் மக்களின் வாழ்க்கை தரத்திலும் தற்போது சிறிலங்காவை விட பன்மடங்கு முன்னேறியுள்ளன.

ஆயுதப் போராட்டமும் அதன் பாதக விளைவுகளும் சிறிலங்காவை பல கோணங்களிலும் பின்தங்கிய நிலைக்கு உள்ளாகியுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் இந்த அரசாங்கம் பதவி ஏற்ற பின்னர் முன்னெடுக்கப்பட்ட கருமங்கள்  சாதகமான முடிவை எட்டவேண்டும்.

அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்தத் தவறும் பட்சத்தில் இந்த நாட்டிற்கு எதிர்காலம் இல்லை.

ஐ.நா நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை,   சிறிலங்கா அரசாங்கம் கூட்டாக முன்மொழிந்தது மாத்திரமன்றி தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு கால அவகாசத்தையும் கோரியிருந்தது.

ஆகவே இந்தத் தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கட்டாய பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது.

தீர்மானத்தில் இடம்பெற்ற விடயங்கள் சரியாக நிறைவேற்றப்படுவதை உறுப்பு நாடுகளும் ஐ.நா.மனித உரிமை பேரவையும் உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கடந்த காலங்களில் போன்று எதிர்வரும் காலங்களிலும் ஐ.நா.வின் கருமங்களில் ஒத்துழைப்புடன் செயற்படும்.

சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நாவின் ஆக்கபூர்வமான பங்களிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும்” என  வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ சுமந்திரன், “காணாமல் ஆக்கப்பட்டோர், அரசியல் கைதிகள், இராணுவத்தின் வசமுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகளின் விடுவிப்பு போன்ற விடயங்களில் திருப்திகரமான முன்னேற்றங்கள் இல்லை.

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படுவதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை. அவர்களிடையையே அதிகாரப்பகிர்வின் நன்மைகளை எடுத்து சொல்லவேண்டியதன் அவசியம் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி நிரந்தரமான சமாதானத்தை இலங்கை நாட்டில் ஏற்படுத்துவதும் பாரிய பணியில் ஐ.நா.தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்படும் என்று  உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *