மேலும்

படை அதிகாரிகளை இடைநிறுத்த வேண்டும் – காணாமல் போனோர் பணியகம் பரிந்துரை

ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட, படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று  காணாமல் போனோருக்கான பணியகம் சிறிலங்கா அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

காணாமல் போனோருக்கான பணியகத்தின் இடைக்கால அறிக்கை நேற்றுமுன்தினம் சிறிலங்கா அதிபரிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த இடைக்கால அறிக்கையில், சிறிலங்கா அரசுக்கு சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதில், ஆட்கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட, படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளை, இறுதியான தீர்ப்பு அறிவிக்கப்படும் வரையில், பணியில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அத்துடன்,  அவர்களுக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரையிலும், சந்தேக நபர்களாக உள்ள அதிகாரிகளை, இடமாற்றம் செய்யவோ, பதவி உயர்வு வழங்கவோ, ஆயுதப்படை, காவல்துறை அல்லது அரச சேவையில் மற்றொரு பணியில் அமர்த்தப்படவோ கூடாது என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் சிலர்,  இன்னமும் அதிகாரம் மிக்க பதவிகளில் குறிப்பாக ஆயுதப்படைகள் மற்றும் காவல்துறையில், இருக்கிறார்கள். அவர்கள் நிலுவையில் உள்ள விசாரணைகளில் தலையீடு செய்ய முடியும்.

ஆயுதப்படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான தகவல்களை வழங்கத் தயாராக இருந்த பலர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படட சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக, நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வழக்கு ஒன்றில் சந்தேக நபராக உள்ள ஆயுதப்படை அதிகாரி ஒருவர், பணியில் இருந்து இடைநிறுத்தப்படவில்லை. தொடர்ந்தும், அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

குறைந்தது ஒரு வழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் சந்தேக நபராக உள்ள ஆயுதப்படை அதிகாரி ஒருவருக்கு- அவர் மீதுான வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சந்தேக நபர்களாக உள்ள படை அதிகாரிகள் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட வேண்டும்.” என்றும் காணாமல் போனோருக்கான பணியகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *