மேலும்

இராஜதந்திரிகளை விட சிறப்பாக பணியாற்றினராம் முன்னாள் படைத் தளபதிகள் – கோத்தா புகழாரம்

சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள் வெளிநாடுகளில் தூதுவர்களாக ஆற்றிய பணி சிறப்பானதாக இருந்தது என்றும், ஏனையவர்களை விட அவர்கள் திறமையாகச் செயற்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன எழுதிய ‘கடொல் எத்து’ என்ற சிங்கள நாவலை கொழும்பில் நேற்று வெளியிட்டு வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”எதற்காக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை இராஜதந்திரிகளாக நியமிக்கிறீர்கள் என்று சிலர் கேட்டனர். அதற்கு ஒரு காரணம், அவர்கள் நாட்டுக்காக அளித்த சேவைக்கு வழங்கிய கௌரவம்.

மற்றொரு காரணம், ஏனையவர்கள் ஆற்றியதை விட இவர்கள் தூதுவர்களாக திறமையான சேவையை ஆற்றினர்.

இந்த அதிகாரி்கள் ஆயுதப்படைகளில் பணியாற்றியதன் மூலம் நாட்டையும் மக்களையும் பற்றி மிகப் பெரிய அனுபவங்களைக் கொண்டிருக்கின்றனர்.

இராணுவத்தில் பணியாற்றிய ஒருவருக்கு குறிப்பாக போரின் போது பணியாற்றியவருக்கு, மனிதர்களைப் பற்றிய ஆழமான புரிதலும், அவர்களைக் கவனிக்க வேண்டும் என்ற உணர்வும் இருக்கும்.

வியட்னாம் மற்றும் ஈராக்கிய போர்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது போல் சிறிலங்காவில் போர் இலக்கியங்கள் படைக்கப்படவில்லை.

தீவிரவாதக் குழுவை வெற்றிகரமாக  தோற்கடித்த போதிலும் ஏன் போர் இலக்கியங்கள் சிறிலங்காவில் படைக்கப்படவில்லை என்று ஒருமுறை இந்திய ஜெனரல் ஒருவர் என்னிடம் கேட்டார்.

அதற்குப் பின்னர், நான் கமல் குணரத்ன போன்ற- முப்படைகளின் தலைவர்களின் எழுதுகோல் இலக்கியங்களை ஊக்குவித்தேன்.” என்றும் அவர் கூறினார்.

மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஏற்கனவே “நந்திக்கடலுக்கான பாதை” என்ற போர் அனுபவ நூலை எழுதியிருந்தார். அவரது இரண்டாவது நூல் இதுவாகும்.

இந்த நூல் போரினால் மாற்றுத் திறனாளியான ஒரு இராணுவச் சிப்பாயின் வாழ்வை அடிப்படையாக கொண்டு இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளதாக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

போரில் வெற்றியைப் பெற படையினரே காரணம் அவர்கள் இல்லாமல் அதிகாரிகளான எம்மால் போரில் வெற்றியைப் பெற்றிருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *