மேலும்

சிறிலங்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளது ரஷ்யா

சிறிலங்கா அரசாங்கத்துடன் ரஷ்யா பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த உடன்பாட்டில் கையெழுத்திடுமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சுக்கு, ரஷ்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யாவிற்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு, “சமாதானத்தையும் அனைத்துலக பாதுகாப்பையும் பலப்படுத்தும்.” என்று ரஷ்யாவின் வரைவு ஆவணம் கூறுகிறது.

இதன்படி, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு, இராணுவ விவகாரங்கள் குறித்த தகவல் பரிமாற்றம், படையினரின் அபிவிருத்தி மற்றும் பயிற்சி, பொறியியல் பயிற்சி, இராணுவ கல்வி, மருத்துவம், வரலாறு, தரைப்பகுதியின் இயல்பு, சமுத்திரவியல்,  கலாசாரம் மற்றும் விளையாட்டு, ஐ.நாவின் கீழ், அமைதி காப்பு மற்றும் அமைதிகாப்பு நடவடிக்கைகளின் போதான ஒத்துழைப்பு விவகாரங்களில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல், உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் முன்னெடுக்கப்படும்.

மேலும், பல்வேறு மட்டங்களில், பிரதிநிதிகள் குழுக்களின் அதிகாரபூர்வ பயணங்கள், இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்றல் அல்லது, அவதானிப்பாளராக பங்கேற்றல், இராணுவ நிபுணர்களுடனான பணிக் கூட்டங்கள், இராணுவத்தினருக்கான பயிற்சி, போர்க்கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு விமானங்களின் பயணங்கள், கடலில் தேடுதல் மற்றும் மீட்பு செயற்பாடுகளில் ஒத்துழைப்பு, கடற்கொள்ளைக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்களையும், சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டில் உள்ளடக்குவதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அதன் வரைவு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *