மேலும்

மனித உரிமை ஆணைக்குழுவுடன் உடன்பாடு செய்யவில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன், சிறிலங்கா இராணுவம் இன்னமும் புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படாத 49 பேர் கொண்ட சிறிலங்கா இராணுவ அணியொன்று ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக லெபனானுக்கு கடந்த பெப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது.

இது தொடர்பாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்தவாரம் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

அதில், ஐ.நா மற்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா இராணுவம் மீறிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து கொழும்பில் நேற்று விளக்கமளித்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க,

“ சிறிலங்கா இராணுவம் இன்னமும் இது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டை சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் செய்து கொள்ளவில்லை. இன்னமும் அது வரைவு நிலையில் தான் இருக்கிறது.

சரியான சொற்பதங்களும், நிபந்தனைகளும் புரிந்துணர்வு உடன்பாட்டில் உள்ளடக்கப்பட வேண்டும். முழுமையாக சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

நாங்கள் இந்த நிபந்தனைகளுக்கு இணங்கினோம்.  ஆனால்  இப்போது நேரம் ஒரு பிரச்சினையாக இருக்கிறது.

இது 2017 டிசெம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மாலிக்கு எமது படையினரை அனுப்ப வேண்டியிருந்தது. அதனால் முன்னைய ஆய்வு நடைமுறைகளுக்கு அமைய அவர்கள் அனுப்பப்பட்டனர்.

நாம் முதலில் 200 பேரை அனுப்பினோம். அப்போது, ஐ.நா மற்றும் ஏனைய அமைப்புகள், மனித உரிமை ஆணைக்குழுவின் இந்த ஆய்வு முறைகளின் ஊடாகவே படையினரை அனுப்ப வேண்டும் என்று கோரின.

இப்போது நாங்கள் இக்கட்டான நிலையில் இருக்கிறோம். மனித உரிமை ஆணைக்குழுவின் ஆய்வுகள் தொடங்கப்படும் நேரம் வரும் வரை, நாங்கள் அரச புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, காவல்துறை மற்றும் ஏனைய முகவர் அமைப்புகளுடன் இணைந்து எமது படையினரை ஆய்வு செய்கிறோம்.

நாங்கள் மிகவும் இறுக்கமான ஆய்வு நடைமுறைகளைப் பின்பற்றுகிறோம்.

வெளிநாடுகளுக்கு அமைதிப்படையில் பணியாற்ற அனுப்பப்படுவதற்கு முன்னதாக படையினரின் மனித உரிமை ஆய்வுகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் முழுமையாக ஒத்துழைப்பதற்கு சிறிலங்கா இராணுவம் முயற்சிக்கிறது. ஏனென்றால், அவர்கள் எந்த தவறும் செய்த குற்றவாளிகள் அல்ல” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *