மேலும்

நரேந்திர மோடி அரசின் கொள்கை வகுப்பாளர்களைச் சாடுகிறார் கோத்தா

gotabaya-rajapaksaஇந்தியாவின் நரேந்திர மோடி அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள், சிறிலங்காவை வேறுவிதமாகப் பார்த்தார்கள் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தியாளருக்கு அளித்துள்ள சிறப்பு செவ்வி ஒன்றிலேயே இவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போரின் போது சிறிலங்காவுக்கு இந்தியா உதவியது, ஆனால் சீனாவை நோக்கி சிறிலங்கா நகர்ந்து தனக்குத் துரோகம் செய்து விட்டதாக இந்தியா உணர்கிறதே- என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச-

“இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் நூலில், இந்தியாவின் பாதுகாப்புக்கான எந்தவகையான அச்சுறுத்தல்களும் இருக்காது என்று இந்தியாவுக்கு சிறிலங்கா உத்தரவாதம் கொடுத்தது, திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு வெளிநாடும், எமது நாட்டு மண்னை பயன்படுத்த எமது அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.

இராஜதந்திரம், இருதரப்பும் பரிமாறிக் கொள்ளுகின்ற ஒரு கலை. இது ஈடுபாடு, கலந்துரையாடல், பரஸ்பர நம்பிக்கையில் தங்கியுள்ளது.

இராஜதந்திர உறவுகளில், புலனாய்வு அதிகாரிகளை நீங்கள் இராஜதந்திரிகளுக்குப் பதிலாக நியமிக்க முடியாது.

சிறிலங்காவுடனான சீனாவின் உறவுகள் தொடர்பாக, சீன பயத்தில் இருந்து இந்தியா வெளியே வரவேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

gotabaya-rajapaksa

ஆனால், இந்தியாவின் கரிசனைகள், உங்களின் அணுகுமுறை மாற்றத்துக்கு இட்டுச் செல்லுமா? என்று எழுப்பப்பட்ட மற்றொரு கேள்விக்குப் பதிலளித்துள்ள கோத்தாபய ராஜபக்ச,

“இந்தியாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கத்துடன் நாங்கள் மிகுந்த புரிந்துணர்வுடன் இருந்தோம். குறிப்பாக, அதன் கொள்கை வகுப்பாளர்களுடன் நல்லுறவு இருந்தது.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு அவர்களின் முழுமையான ஆதரவைப் பெறக் கூடியதாக இருந்தது.

ஆனால் புதிய அரசாங்கத்தின், குறிப்பாக நரேந்திர மோடி அரசின் கொள்கை வகுப்பாளர்கள் சிறிலங்காவை வேறு விதமாக பார்த்தார்கள்.

சரியான புரிதலின்றி, கொழும்பு துறைமுகத்தின் சீன நீர்மூழ்கிகள் தரித்து நின்றது பற்றிய உண்மையான நிலையை தெரிந்து கொள்ளாமல், இருந்தனர்.

இந்திய ஊடகங்களும் கூட, இதனை பிரச்சினையாக்கின. கொள்கை வகுப்பாளர்கள் எம்முடன் பேசியிருக்க வேண்டும்.

இங்கும் கூட, சிறிலங்காவின் நலன்களுக்கு எதிராக இந்தியா வேலை செய்வதாக சிறிலங்காவின் தேசப்பற்றாளர்கள் மத்தியில் கரிசனைகள் இருந்தன.

உதாரணமாக, விடுதலைப் புலிகளுக்கு இந்திராகாந்தி இந்தியாவில் பயிற்சி அளித்து ஆதரவளித்ததைக் குறிப்பிடலாம். அது மிகப்பெரிய இந்திய எதிர்ப்பு உணர்வுகளை ஏற்படுத்தியது.

உள்நாட்டு விவகாரத்தில் இந்திய அரசாங்கம் தேவையின்றி தலையீடு செய்வதாக இலங்கையர்கள் உணர்ந்தனர். கடந்த அரசாங்கம் மாற்றப்பட்ட போதும் கூட அதனை காண முடிந்தது.“ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *