மேலும்

யாழ். மாநகர சபையில் இன்று பலப்பரீட்சை

jaffnaபரபரப்பான அரசியல் சூழலில் யாழ்ப்பாண மாநகரசபையின் முதலாவது அமர்வு இன்று காலை நடைபெறவுள்ளது.

கடந்த பெப்ரவரி 10ஆம் நாள் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் யாழ்ப்பாண மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் முதலாவது கூட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் முதலாவதாக, மாநகர முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது.

45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகரசபையில், தனித்து ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 23 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனினும், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால், மாநகர முதல்வர் தெரிவில் பலத்த எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது.

அதிகபட்சமாக 16 ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாநகர முதல்வர் பதவிக்கு முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் ஆர்னோல்ட்டின் பெயரை முன்மொழிந்துள்ளது. பிரதி முதல்வர் பதவிக்கு ஈசனின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

அதேவேளை, 13 ஆசனங்களைக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது தரப்பில் மணிவண்ணனை முதல்வர் பதவிக்கு முன்னிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், இரகசிய வாக்கெடுப்பை நடத்தினால், தாம் வெற்றி பெறுவோம் என்றும் கூறியுள்ளது.

எனினும், இரகசிய வாக்கெடுப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.

இந்தநிலையில், மாநகரசபையில் 10 ஆசனங்களைக் கொண்ட ஈபிடிபி எடுக்கப் போகும் முடிவு முக்கியத்துவம் மிக்கதாக உள்ளது.

அதேவேளை, யாழ். மாநகரசபையில், ஐதேகவுக்கு 3 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 1 உறுப்பினரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அதிக ஆசனங்களைப் பெற்ற சாவகச்சேரி நகரபைக்கான முதல்வர் தெரிவும் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

இங்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 6 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

அதேவேளை, ஈபிடிபி 3 ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி 2 ஆசனங்களையும், தமிழர் சமூக ஜனநாயக கட்சி 1 ஆசனத்தையும், ஐதேக 1 ஆசனத்தையும் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *