நாடு கடத்தப்படவிருந்த நிலையில் விமானத்தில் இருந்து கடைசி நிமிடத்தில் இறக்கப்பட்ட தமிழ்க் குடும்பம்
அவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலியாவில் இணைப்பு நுழைவிசைவு காலாவதியான நிலையில் நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் இவர்களின் குழந்தைகளான கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர்,நாடு கடத்தப்படுவதற்காக அவுஸ்ரேலிய அதிகாரிகளால் குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை நாடு கடத்துவதை தடுக்கக் கோரி அவுஸ்ரேலியாவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் நேற்றிரவு இவர்கள் நால்வரும் நாடு கடத்தப்படுவதற்காக பேர்த் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, வேறு பல இலங்கையர்களுடன் சிறப்பு விமானம் ஒன்றில் ஏற்றப்பட்டனர்.
பின்னர் சிறிது நேரத்தில் அவுஸ்ரேலிய அதிகாரிகள் அவர்களை விமானத்தில் இருந்து இறக்கிக் கொண்டு சென்றனர்.
கடைசி நேரத்தில் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளை அடுத்தே அவர்களை நாடு கடத்தும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.