கடும் பாதுகாப்புடன் இரு சிறப்பு விமானங்களில் கட்டுநாயக்கவில் வந்திறங்கிய 26 இலங்கையர்கள்
இரண்டு நாடுகளில் புகலிடம் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடுகடத்தப்பட்ட 26 இலங்கையர்களுடன், இரண்டு சிறப்பு விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவுஸ்ரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தே, இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம், 26 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் இருந்து 15 இலங்கையர்களை ஏற்றிக் கொண்டு சிறப்பு விமானம் ஒன்று இன்று காலை 6.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியது.
அதேவேளை, சுவிட்சர்லாந்தில் இருந்து 11 இலங்கையர்களை ஏற்றிக் கொண்டு, காலை 9 மணியளவில் மற்றொரு சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களுடன், இந்த விமானங்களில் பெரும் எண்ணிக்கையான அவுஸ்ரேலிய மற்றும் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரிகளும், வந்திருந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு கடத்தப்பட்டவர்களில் தமிழர்களும், சிங்களவர்களும் அடங்கியுள்ளனர். இவர்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.