மேலும்

வடக்கில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு இன்னமும் தொடர்கிறது – முன்னாள் ஐ.நா அதிகாரி

former UN staffer Benjamin Dix25 ஆண்டு கால உள்நாட்டுப் போரில், தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் இனச்சுத்திகரிப்பே என்று கூறியுள்ள ஐ.நாவின் முன்னாள் பணியாளரான பென்ஜமின் டிக்ஸ், இன்றும் கூட  தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசத்தின் இனத்துவப் பரம்பலை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பகுதியில், 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரையான நான்கு ஆண்டுகள், ஐ.நாவின் தொடர்பாடல் முகாமையாளராக பென்ஜமின் டிக்ஸ் பணியாற்றியிருந்தார்.

ஒரு சிறந்த ஒளிப்படக் கலைஞருமான டிக்ஸ், இந்தியாவின் ஜெய்பூர் நகரில் நடந்த ஜெய்பூர் இலக்கிய விழாவில் பங்கேற்றிருந்தார்.

இதன்போது, பிரிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த செவ்வியில்,

“சிறிலங்காவில் இரண்டு தரப்பிலுமே கொடூரமான குற்றங்கள் இழைக்கப்பட்டன. சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களை இழைத்தது. ஆனால் உள்நாட்டுப் போரின் கடைசி பத்தாண்டுகளில் தமிழ்த் தலைமை தோல்வியடைந்தது.

தாங்கள் கொடுமைகளை இழைத்ததாக சிறிலங்கா இராணுவம் நம்பவில்லை.  தமிழ்த் தலைமையிடம் இருந்து அவர்கள் தமிழர்களை விடுவித்ததாக, மேற்கொள்ளப்படுவது வெறும் பரப்புரை தான். அது விடுதலை அல்ல, தமிழ்ச் சமூகத்தின் அழிவு.

சிறிலங்கா இராணுவம் இனப்படுகொலைகளை செய்தது என்று கூறுவதே  நியாயமானது.  சிறிலங்காவில் நிகழ்ந்த கொடுமைகள் நிச்சயமாக இனச் சுத்திகரிப்பை நோக்கி நடத்தப்பட்டவையாகும்.

மகிந்த ராஜபக்ச ஆட்சி தமிழர்கள் சிறிலங்காவில் இருப்பதை விரும்பவில்லை. நாட்டை விட்டு வெளியேற்ற முயன்றது.

தமிழர்களை வரலாற்றில் இருந்து அகற்றும் கொடுமை அல்லது பெயர்களை மாற்றுவது, அல்லது வடக்கில் சிறிலங்கா இராணுவம் சுற்றுலா விடுதிகளையும், சுற்றுலாவையும் நடத்த அனுமதிப்பது இன்னமும் தொடர்கிறது.

வடக்கில் தமிழர்களை வென்று விட்டதான உணர்வு இன்னமும் உள்ளது.

வடக்கில் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் பாரிய நடவடிக்கைகள் இன்னமும் தொடர்கின்றன.

ஆனால் கடந்த காலத்தில் இருந்த நிலைமைகளுடன் ஒப்பிடும் போது, இப்போது குறிப்பிடத்தக்களவு தளர்வுகள் ஏற்பட்டுள்ளன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *