மேலும்

பெண் அதிபரை மண்டியிட வைத்த ஊவா முதலமைச்சர் கைது

Chamara Sampath Dassanayakeபதுளை தமிழ் பெண்கள் பாடசாலை அதிபரை மண்டியிட வைத்து மன்னிப்புக் கோரச் செய்த ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை அதிபரை மண்டியிடச் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஊவா முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க இன்று காலை சட்டவாளருடன், பதுளை காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

கைது செய்வதை தவிர்ப்பதற்காகவே அவர் சரணடைந்தார் என்று கூறப்படுகிறது.

அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது.

இதையடுத்து, பதுளை நீதிமன்றத்தில் ஊவா முதலமைச்சரை முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு பதுளை நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பிந்திய செய்தி

கைது செய்யப்பட்ட ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமிந்த திசநாயக்கவை, பதுளை நீதிமன்ற நீதிவான் பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

முதலமைச்சரை காவல்துறையினர் பதுளை நீதிவான் நீதிமன்றில் நிறுத்திய போது, அவரை இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேரின் சரீரப் பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்துள்ளார்.

நீதிமன்ற வளவில், முதலமைச்சருக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் கூடியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *