மேலும்

பூதாகாரமாகும் பாடசாலை அதிபர் அவமதிப்பு விவகாரம் – இக்கட்டில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி

Chamara Sampath Dassanayakeபதுளை தமிழ்ப் பெண்கள் பாடசாலை அதிபரை முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைத்த ஊவா மாகாண முதலமைச்சருக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ள அதேவேளை, மாகாண கல்வி அமைச்சர் பதவியில் இருந்து அவர் நேற்று விலகினார்.

தமது பரிந்துரைக் கடிதம் ஒன்றுடன் சென்ற மாணவியை பாடசாலையில் சேர்த்துக் கொள்ள மறுத்த பதுளை தமிழ்ப் பெண்கள் பாடசாலை அதிபர் பவானியை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைத்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியானதும், அதனை மறுத்த ஊவா முதலமைச்சர், இந்தப் பொய் செய்தியை பரப்பிய ஜேவிபி மாகாண சபை உறுப்பினருக்கு எதிராக 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி வழக்குத் தொடரப் போவதாகவும் கூறியிருந்தார்.

அதேவேளை, பாடசாலை அதிபரையும், மறுப்புத் தெரிவித்து அறிக்கை வெளியிட மாகாண கல்வி அதிகாரிகள் நிர்ப்பந்தித்திருந்தனர்.  இதையடுத்து அவரும் அழுத்தங்களுக்குப் பணிந்து முதலமைச்சர் தம்மை முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைக்கவில்லை என்று கூறியிருந்தார்.

எனினும், பாடசாலை அதிபர் தமக்கு ஏற்பட்ட அவமானத்தை சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மற்றும் உயர் கல்வி அதிகாரிகளிடம் கண்ணீருடன் வெளிப்படுத்தினார்.

இந்த நிலையில், ஊவா மாகாண முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று ஆசிரியர் தொழிற்சங்கம் வலியுறுத்தியிருந்ததுடன், தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் ஊவா முதலமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தீவிரமடைந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளக விசாரணைகள் நடத்தும் என்று, இந்தச் சம்பவத்தை கண்டிப்பதாகவும், அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த கூறியிருந்தார்.

இந்த நிலையில், நேற்று ஊவா மாகாண முதலமைச்சர் தசநாயக்க, மாகாண கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் முடியும் வரை கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்குப் பணித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *