மேலும்

நெஸ்பி பிரபுவுக்கு இரகசியமாக நன்றிக் கடிதம் அனுப்பினார் சிறிலங்கா அதிபர்

maithripala-srisenaசிறிலங்காவில் போர்க் குற்றங்கள் நடக்கவில்லை என்று பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய நெஸ்பி பிரபுவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இரகசியமாக நன்றிக் கடிதம் அனுப்பியுள்ளார் என்று கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இறுதிப் போரில் ஐ.நா அறிக்கையில் கூறப்பட்டது போல 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றும், இறுதிப் போரில் 7000 தொடக்கம் 8000 வரையானவர்களே கொல்லப்பட்டனர் என்றும், அவர்களில் கால்வாசிப் பேர் சாதாரண உடையில் இருந்த புலிகள் என்றும் கடந்த ஒக்ரோபர் மாதம் பிரித்தானிய பிரபுக்கள் சபையில் உரையாற்றிய போது, நெஸ்பி பிரபு கூறியிருந்தார்.

இந்த நிலையில், சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட நெஸ்பி பிரபுவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார் என்றும் தமிழ் பிரிவினைவாதிகளின் அழுத்தங்களால் அந்தக் கடிதம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

“நெஸ்பி பிரபுவுக்கு நன்றி தெரிவித்து சிறிலங்கா சார்பில் அதிபர் மைத்திரிபால சிறிசேன கடிதம் எழுதியுள்ளார். இது பாராட்டப்பட வேண்டியது. ஆனால் இந்தக் கடிதம் பற்றி சிறிலங்காவிலோ, பிரித்தானியாவிலோ யாருக்கும் தெரியாது.

சிறிலங்கா அதிபரின் கடிதம், சிறிலங்கா வெளிவிவகாரச் செயலரின் கடிதம் ஒன்றுடன் இணைத்து வழங்கப்பட்டுள்ளது.

வெளிவிவகாரச் செயலரின் இணைப்புக் கடிதத்தில், சிறிலங்கா அதிபரின் கடிதத்தின் உள்ளடக்கம் சிறிலங்கா அல்லது பிரித்தானிய ஊடகங்களுக்குப் பகிரப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

ஏன் இந்த இரகசியம்? சிறிலங்கா அதிபர் தனது கருத்தை வெளிப்படுத்துவதற்கு அச்சம் கொண்டிருந்தால் அது தமிழ் பிரிவினைவாதிகள் குறித்த அச்சமாகவே இருக்கும்.

இந்த இரகசியம் குறித்து சிறிலங்கா அதிபர் அறிந்திருந்தாரா?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *