மேலும்

ஆனந்தசங்கரியுடனான கூட்டு தற்காலிக ஏற்பாடு தான் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

suresh_premachandranஉள்ளூராட்சித் தேர்தல் தேசிய அளவில் முக்கியத்துவமற்றது என்றும், இந்தத் தேர்தலில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடும் தமது முடிவு தற்காலிக ஏற்பாடு தான் என்றும் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ்க் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து, கூட்டமைப்புக்கு எதிரான பலமான கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சிகளில் இறங்கிய ஈபிஆர்எல்எவ், திடீரென தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நேற்று முன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏமாற்றம் வெளியிட்டிருந்த நிலையில், நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், இது ஒரு தற்காலிக ஏற்பாடு தான் என்று கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,

“உள்ளூராட்சித் தேர்தல் என்பது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இல்லை. அது கிராமிய மட்டத்தில் அபிவிருத்திகளை இலக்காக கொண்ட தேர்தலாகும்.

ஆனால், உள்ளூராட்சித் தேர்தல் வெற்றியின் ஊடாக புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையை மக்கள் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் என காட்டுவதற்கு தமிழ் அரசு கட்சி முயற்சிக்கக் கூடும்.

ஆனால், வெளியாகியிருக்கும் இடைக்கால அறிக்கை என்பது மிக பிழையான ஒன்றாகும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகளை, தமிழ் அரசு கட்சி  கைப்பற்றுவதைத் தடுப்பதற்கு பலம்வாய்ந்த ஒரு எதிரணி தேவை என்பது உணரப்பட்டிருக்கின்றது.

அந்தவகையில் தேசிய கொள்கைகளை ஒத்து கொண்டு, கிராமிய அபிவிருத்திகளையும் கருத்தில் கொண்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்ச்சியாக பேச்சு நடத்தப்பட்டு பலமான பொது எதிரணி ஒன்றை உருவாக்க நினைத்தோம்.

அதில் சமூகத்தில் உள்ள பல அமைப்புக்களையும் இணைத்து செயற்பட தீர்மானித்திருந்தோம். எனினும் அதில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன.

பலராலும் ஆதரிக்கப்பட்ட, தந்தை செல்வாவினாலும் ஆதரிக்கப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது.

இது ஒரு தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே. தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் சகல தரப்பினரின் கருத்துக்களையும் பெற்று தீர்மானிக்கலாம் எனவும் தீர்மானித்திருந்தோம்.

ஆனால், தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடுவதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அல்லது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் விரும்பவில்லை

எமக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் கொள்கை ரீதியான பிரச்சினைகள் எவையுமில்லை.

அதேபோல் நாம் இணங்கி செயற்படுவதற்கான காலமும் அதிகம் உள்ளது. வேட்புமனுக்களை சமர்ப்பிப்பதற்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன.

எந்த வகையில் தொடர்ந்து இணைந்து செயற்படலாம் என தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்துவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *