மேலும்

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் மரணம் – யாழ். நகரில் அதிரடிப்படை குவிப்பு

shot-dead-ariyalai (2)யாழ். அரியாலை கிழக்கு, மணியம்தோட்டம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன், சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு மரணமானார். இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மணியம்தோட்டம், உதயபுரம் – கடற்கரை வீதிச் சந்தியில் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில், உந்துருளியில் சென்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது, மற்றொரு உந்துருளியில் சென்ற இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் மூன்று குண்டுகள் துளைத்து படுகாயமடைந்த டொன் பொஸ்கோ ரிச்மன் என்ற இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில்  அவர் மரணமானார்.

சுவாசப் பையில் குண்டுதுளைத்ததால், ஏற்பட்ட அதிக குருதிப் பெருக்கே அவரது மரணத்துக்குக் காரணம் என்று, யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

shot-dead-ariyalai (1)shot-dead-ariyalai (2)shot-dead-ariyalai (3)

“துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவருக்கு அதிக குருதிப் போக்கு காணப்பட்டிருந்தது. முதற்கட்டமாக அவருக்கு ஒரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனையடுத்து, இரண்டாவது அறுவைச்சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

துப்பாக்கி ரவை அவரது மார்பின் ஊடாக,  சுவாசப்பையை துளைத்துச் சென்றுள்ளது.  சுவாசப்பையில் ஏற்பட்ட அதித குருதிப் பெருக்கினால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இளைஞன் மரணமான சம்பவத்தை அடுத்து, யாழ். போதனா மருத்துவமனையில் பதற்றநிலை காணப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக, விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெறுவதை தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாண நகரத்திலும், காவல் நிலையங்களிலும், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவத்துக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.

அதேவேளை, சாதாரண உடையில் இருந்த காவல்துறையினரை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

படங்கள் – வாகீசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *