மேலும்

மகிந்தவின் குற்றங்களை அம்பலப்படுத்தவே அரசியலில் இறங்கினேன் – சரத் பொன்சேகா

sarath-fonsekaதனது பிரதான எதிரியான மகிந்த ராஜபக்சவின் கடந்த காலத் தவறுகளை அம்பலப்படுத்தவதற்காகவே தாம் அரசியலில் நுழைந்து அமைச்சர் பதவியைப் பெற்றதாக, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொட பிரதேசத்தில் ஐதேகவின் கிளை ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றிய  போதே சரத் பொன்சேகா இவ்வாறு கூறியுள்ளார்.

“ ஒரு சிறிய கட்சியின் ஊடாகவே நான் அரசியலுக்குள் நுழைந்தேன். அதனால் ஒரு அரசாங்கத்தை நிறுவ முடியாது அது எனக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால், மகிந்த ராஜபக்ச செய்த குற்றங்களை உலகத்துக்கு கூறுவதற்கு அது உதவியாக இருக்கும் என்பதை நான் அறிவேன்.

அரசியலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான கருத்தை உருவாக்குவதற்கு, அந்த சிறிய கட்சி தான் எனக்கு தளமாகப் பயன்பட்டது.

2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேகவில் களனிய தொகுதியில் போட்டியிடுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த குண்டர் அரசியல்வாதிகளுடன் போட்டியிட நான் விரும்பவில்லை.

2015இல் மகிந்த ராஜபக்ச குருநாகலவில் போட்டியிட்ட போது, அங்கு போட்டியிட முன்வருமாறு மீண்டும் அழைத்திருந்தார் ரணில் விக்கிரமசிங்க.

குருநாகல மாவட்டத்தில் பெருமளவு வலுவான ஐதேக தலைவர்கள் உள்ளனர்.அங்கு போட்டியிட நான் விரும்பவில்லை.

பின்னர் நான் களனிய தொகுதி அமைப்பாளர் பதவியை ஏற்றுக் கொண்டேன்.

நாடாமன்ற ஆசனத்தைப் பெறுவதோ சிறப்பு வசதிகளை அனுபவிப்பதோ எனது பயணத்தின் நோக்கம் அல்ல. மகிந்த ராஜபக்சவை அம்பலப்படுத்துவதே எனது நோக்கம்.

நாடு முழுவதும் சென்று மகிந்த ராஜபக்ச செய்த குற்றங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும் என்பதே எனது இலக்கு” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *