மேலும்

வடக்கில் அமைதியைக் குழப்புகிறது கூட்டமைப்பு – சிறிலங்கா அமைச்சர் குற்றச்சாட்டு

ruwan-wijewardeneதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் அமைதியைக் குழப்பி வருவதாக சிறிலங்காவின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன குற்றம்சாட்டியுள்ளார்.

பியகமவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன,

“விளக்கமறியலில் உள்ள விடுதலைப் புலி சந்தேக நபர்க மோசமான குற்றங்களை இழைத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

அவர்களை விடுவிக்கக் கோரி வடக்கில் எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும், நீதித்துறை நடைமுறைகளின்றி அவர்களை விடுவிக்க முடியாது.

வடக்கில் நேற்று நடத்தப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது.  அரசியல் நலனை அடைய முனையும் குழுவொன்றே இதற்குப் பின்னால் உள்ளது.

முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் வடக்கிலுள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கையை சீர்குலைக்க முனைகின்றனர்.

கூட்டமைப்பு கூறுவது போல, அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை.சிறையில் உள்ளவர்கள் போரின் போது மோசமான குற்றங்களுடன் தொடர்புபட்டிருந்தார்கள் என்று விசாரணைகள் வெளிப்படுத்தியுள்ளன.

அவர்களை எந்த நீதித்துறை விசாரணைகளும் இன்றி விடுவிக்க முடியாது.

நீதிச் செயற்பாடுகள் தாமதமடைந்தால் அது நிச்சயம் தீர்க்கப்பட வேண்டும். எனினும், சிறைக்கைதிகள் நீதிச் செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டும்.

அதன் முடிவிலேயே விடுவிப்பா அல்லது தண்டனையா என்பது தீர்மானிக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *