மேலும்

‘புலம்பெயர் சூழலில் ஊடகமும் தாசீசியசும்’ – கிருஸ்ணா அம்பலவாணர்

tasieஉலகப்பரப்பில் ஊடகம் என்பது என்ன? அதன் பண்புகள் எவை? என்ற கேள்விகளுக்கு அவ்வளவு இலகுவாக விடை காண முடியாது. நவீன தொழில்நுட்பப் புரட்சியுடன் தோன்றிய தகவல் தொழில்நுட்பம் என்பது செய்தித்தாள் என்ற அச்சு ஊடகமாக ஆரம்பித்து இன்று வானொலி, தொலைக்காட்சி, இணையத்தளம் உள்ளிட்ட அதிவேக தகவல் பரிவர்த்தனை பரப்புக்களுக்குள் படர்ந்து ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தும் தனித்தும் மானிடப்பரப்பை ஊடறுத்து நிற்கின்றது.

அந்த பரப்பு என்பது பேனா முனைகளில் தொடங்கி செய்கோள்கள் வரை வியாபித்து நிற்கின்றது.

இந்த வியாபகப் பரப்பில் ஏ.சீதாசீசியஸ் என்கின்ற நிதர்சனத்தை தரிசிப்பதற்கு இன்று சுவிற்சலாந்தில் ஆசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் பவளவிழா நிகழ்வு நடைபெறுகின்றது.

நாடகம், ஊடகத்துறை, பன்முக கலை விற்பன்மை, புலம்பெயர் தமிழ் மாணவர்களுக்கான கல்விநூல் ஆக்கப்பணிகளில் களப்பணி என அவர் ஆற்றிய, பணிகளுக்கு இன்று நடைபெறும் பவளவிழா நிகழ்வு என்பது மணிமுடி ஏந்திய மாமன்னனின் சிம்மாசனத்தில் மின்னும் பொற்றாமரை போன்றது இந்தவிழா.

ஏனெனில் கலையும் ஊர் ஊடகமே அது மக்களுக்கான அரங்கியல் ஊடகம்.

அந்த அரங்கியல் ஊடகத்தில் ஆசானாய் விளங்கும் ஏ. சிதாசீசியஸ் என்கின்ற இந்த வரலாற்று ஊடகத்தின் பக்கங்களை நீங்கள் உள்நோக்கித் தரிசிப்பதற்கான களமாக மட்டுமன்றி ஏனைய ஊடக உலகு தழுவிய மாண்பைத் தழுவி நிற்கும் வளவாளர்களின் கருத்துக்களையும் பாராட்டுக்களையும், வரலாறுதந்த வல்லமைதான் வாழும் காலத்திலேயே கேட்பதற்கான ஓர் அரிய பேறாகவும் இந்த விழா அமைந்துள்ளது.

கனவு மெய்ப்பட வேண்டும் என்றான் பாரதி.

அதைத்தான் எமது மொழியில் எம்அய்யன் அய்யன் பேராசான் சிவத்தம்பி அவர்கள், ஓர் கலைஞனை நீங்கள் பாராட்ட வேண்டும் என்றால் அதை அந்த கலைஞன் வாழும் காலத்திலேயே செய்யுங்கள் என்று அடிக்கடி கூறுவார்.tarci

அந்தக் கூற்றை நாங்கள்.. நீங்கள் வாழும் காலத்திலேயே உங்களுக்கு கூடிச் செய்திருக்கின்றோம் என்றே நான் நம்புகின்றேன்.

பாரதி சொன்னானே… எடுத்த காரியம் யாவினும் வெற்றி என முழங்கி உலகமெல்லாம் தேமதுரத் தமிழோசையை பரப்பும் பணியிலே தன்னைக் களப்பலியாக்கியவர் பெருமகனார் ஏ.சீதாசீசியஸ் அவர்கள்.

அவர் தன்னை அர்ப்பணித்து ஊடகத்துறையில் ஆகுதியாக்கிய அர்பணிப்புக்கள் என்றும் எங்கள் பேச்சிலும் மூச்சிலும் கலந்திருப்பவவை.

புலம்பெயர் சூழலில் ஊடகம் அதுவும் ஈழத்தமிழ் தேசியத்தின் குரலாக ஒலிக்கும் ஊடகத்தை உருவாக்கி அதன்மூலம் எமக்கான அடையாளத்தை அடைமொழியாக்கியவர் தாங்கள்.

செய்தி அறிக்கையில், அலசலில்,  நேர்காணலில், நேர்முகவர்ணனையில், நிகழ்ச்சித்தொகுப்பில், பத்திரிகை கண்ணோட்டத்தில், சிறுவர் நிகழ்ச்சிகளில் என அவற்றில் நீங்கள் செய்து காட்டிய புதுமைகள் பின்னாளில் ஊடகத்துறையை நிர்வகிப்பவர்களுக்கெல்லாம் விலைமதிக்க முடியாத அகராதிகளாகவே அமைந்தன.

அத்தகைய பெருமைக்குரிய பெருமகனே!

உங்களைப் பற்றி பேசுவதானாலும் சரி எழுதுவதானாலும் சரி அதற்கு காலங்கள் போதாது என்றே நம்புகின்றேன்.

காரணம் நீங்கள் வெறுமனே ஒரு ஊடகத்தான் என்கின்ற கட்டுக்குள் நின்று விடாது அரசியல்களத்தில், மக்கள் மன்றத்தில் ஆற்றிய பணிகளும் அளவிட முடியாதவை. அதிலும் நீங்கள் பேராசானாகவே வாழ்ந்தீர்கள்.

“……..அய்யன் அய்யனே நான் மீண்டும் மீண்டும் பாரதியையே உங்களோடு அழைத்து வருகின்றேன். காரணம் பாரதியும் கனவுகண்டான் தன்தேச விடுதலைக்கு, அதுபோல் நீங்களும் இனவிடுதலைக்காய் கனவுகண்டவர் மட்டுமல்ல, அது மெய்பட வேண்டுமென அயராது உழைத்தவர் இன்றும்உழைத்து வருபவர்…..”

பாரதி சொன்னானே, “தனிஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த யுகத்தினை அழித்திடுவோம்” என்று.. அந்த வாசகத்தை நெஞ்சகம் தாங்கிய தாங்கள் தாயகமக்களுக்காய் மடிப்பிச்சை ஏந்தி அதற்காய் தெருவெல்லாம் மன்றாடி அதில் வெற்றியும் கண்டீர்கள்.

அதில் நீங்கள் பல அவமானங்களையும் சொல்லடிகளையும் தாங்கினீர்கள். அதில் நீங்கள் பட்ட அவமானங்களையெல்லாம் நாங்கள் அறிவோம். ஆனாலும் நீங்கள் இன்றும் அதேமிடுக்குடன் சாகாவரம் பெற்ற பிரம்மஞானியாகவே வாழ்கின்றீர்கள்.

நூறாண்டுகளுக்கு மேல் கடந்தாலும் ஓர் ஊடகத்தானுக்கு வயதில்லை என்பார்கள். அந்தவகையில் சாகாவரம் பெற்ற பிரம்மஞானிக்கு பாராட்டு என்பது என் நெஞ்சத்தையெல்லாம் ஓர்முறை வருடி எங்களுக்குள் ஓர் மதிப்பையும் மகிழ்வையும் ஏற்படுத்தி நிற்கின்றது.

காரணம் சோழன் உலகை ஆண்டான் அந்த உலகுக்கெல்லாம் அவன் சவாலாக இருந்தான் என்று நாம் படித்திருக்கின்றோம். ஆனால் கண்டதில்லை. அவன் காலத்தில் நாங்கள் வாழ்ந்ததும்இல்லை .

tasieஆயினும் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பார்த்து இவர் அவர் போல்இருப்பாரோ என்று எண்ணும் போது நாம் தலைவர் காலத்தில் வாழ்ந்தோம் என்று இறுமாப்புக் கொள்வது போல், நாடகத் தந்தை சாக்ரட்டீசை நாங்கள் பார்த்ததில்லை ஆனால் ஏ.சிதாசீசியஸ் என்கின்ற ஈழத்தமிழ் தேசியத்தின் நல்லாசான் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்கின்ற பெருமை ஒன்றே போதும் எமக்கு.

அதற்கு அய்யன் அய்யனே உங்களுக்கு என்றும் நன்றிகள். காரணம் ஈழத்தமிழ் தேசியத்தின்ஆத்மாவையே அசைத்தவர் தாங்கள்.

போர்சூழலில் என்ன தமிழ்மக்களுக்கு தினமும் நேர்கிறது,  ஏன் எவ்விதம் இவ்விதம் நடக்கிறது, எதிர்காலம் எவ்வாறிருக்கும், என்கிற உளவியல் பரிமாணம் கொண்ட கேள்விகளுக்கு செய்திகள் வழி- செவ்விகள்வழி-ஆய்வுகள் வழியென-பலவழிகள் மூலம் விளக்குவதை உணர்த்துவதை கடமையாக ஜபிசி தமிழின் உறவுப்பாலம் ஊடாக உருவாக்கி உயர்பணி ஆற்றினீர்கள்.

குறிப்பாக புலம்பெயர்ந்து அலைந்துழலும் வாழ்வை வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு தாயக வரைபடத்தை மனதில் வரைந்து வாழும் உறவுகள் மத்தியில் முழுநேரமாக நீங்கள் ஊடகத்துறையின் மூலம் ஆற்றிய பணிகள் காலத்தால் அழியாதவை.

காரணம், போர்சூழலில் சேவல் கூவி பொழுது விடிவதில்லை, பிசியின் தொடக்க ஒலி கேட்டே பொழுது விடிகிறது.

எம் முதல் பணி காலையில் ஜபிசி தமிழ் வானொலி கேட்டல் என்றாகி விட்டது.

இதன் வழியிலேயே எம்மக்கள் உலகைக் காண்கின்றனர்.  அறிகின்றனர், என்று தலைவனே மனசாரப் பாராட்டியது. உங்களுக்கான மணிமகுடமாகவே நான் கருதுகின்றேன்.

நிறைவாக தகவலே உலகையாளும் காலமிது. தகவலே பின் செதுக்கப்பட்ட அறிவாகின்றது.

இன்றைய நவீன பொருளாதார கோட்பாடுகளின் மையக் கருவிலிருந்தே மானுட விடுதலை தன் இலக்கு நோக்கி நகர்ந்து செல்ல முனைகின்றது.

அதாவது கடத்தல், கொடுத்தல், நிலைமாற்றல் வகிபாகங்கள், என்பன மானுடரும் சுடரும் விடுதலைக்கான பாதையைத் தீர்மானிக்கின்றன.  இது இன்றைய தமிழ் ஊடக உலகுக்கும் பொருந்தும் என்றே நான் நம்புகின்றேன்.

தாயகத்தின் மூலை முடுக்குகளில் இருந்து தகவல்களைப் பெற்று புலத்துக்கு கடத்தல். அச்செய்திகளின் பின்னணியத் தேடி ஒளியூட்டி விரிவாக்கிக் கொடுத்தல். இவற்றின் மூலம் தமிழ்மக்களின் எதிர்கால வெற்றியை உறுதிப்படுத்தும் நிலைமாற்றத்தினை மக்களின் மனங்களில் தோற்றுவித்தல் அல்லது உளவுரணை தோற்றுவிக்க முதற்காரணியாக அமையும் என்பதே .. ‘ புலம்பெயர் சூழலில் ஊடகமும் தாசீசியசும்’ என்ற பன்முக படைப்பாளியை நாம் கற்றுக்கொண்டதற்கான காணிக்கையாக அமையும் என்றே நான் நம்புகின்றேன்.

இவை காத்திரமான அறிவுப்பணி, உளவியற்பணி அரசியற்பணி, சமூகப்பணி என பரவலாக விரிவாகும்.

ஏ.சிதாசீசியஸ்  என்பது  ஆகு பெயர்.

இதுவரை ஆகிவந்த வெற்றிக்கும் சிறப்பிற்குமான, இன்னும் பன்னெடும் காலம் விழுதெறிந்து விருட்சங்களாகும் வேர்களுக்கும் விழுதுகளுக்கும் எம் தேசத்துக்கான அசைவியக்கங்கள் அனைத்துக்கும் சிறப்பிற்கும் நீங்களும் ஒரு வழிகாட்டியானீர்கள் என்று சொல்லி, உலக மேலாதிக்க அழுத்தங்களுக்குள்ளும்,  உலகமயமாக்க அலைகளுக்குள்ளும் சுயங்கள் அழிக்கப்படுகின்ற இழக்கப்படுகின்ற இன்றைய கால இருப்புக்குள், சுயபண்பாட்டின் அரணாக தங்களின் ஊடகப் பணி உயர்ந்து நிற்கின்றது.

தொடர்பியல் தொழில்நுட்ப புரட்சி பற்றிய பகுப்பாய்வுகள் பெரும்பாலும் மையப்படுத்தப்பட்ட பாரிய ஊடகங்களைப் பற்றியே பேசின.

இப்பொழுது, மாற்று ஊடகங்களின் சமூக மேம்பாட்டு பணிகளைப் பற்றிய தவிர்க்க முடியாத கவனிப்பை அவதானிக்க முடிகின்றது.

இத்தகைய சமூக நீதிக்கான தமிழின் குரலாய் பெருமகனே நீங்கள் உருவாக்கித் தந்த நிலைபேறு புதிய வரலாறாகி நிற்கின்றது.

வானமளந்ததனைத்தும் அளந்திடும் தமிழின் வாழ்விடமாய் ஏ.சிதாசீசியஸ் எனும் பெருமகனாரின் கலையுலக வாழ்வு மென்மேலும் சிறந்திட எல்லையில்லா அன்பு கொண்டு போற்றுகின்றேன்.

என்றும்
உங்களை நெஞ்சார நேசிக்கும்,
கிருஸ்ணா அம்பலவாணர்
17.9.2017

(சுவிற்சர்லாந்தின், லுசேர்ன் நகரில் கடந்த செப்ரெம்பர் 17ஆம் நாள், ஆசான் ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் பவளவிழா நிகழ்வில், நிகழ்த்தப்பட்ட உரை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *