மேலும்

கடற்படைத் தளபதிக்கு ஒரு மாதமே சேவை நீடிப்பு – பாதுகாப்பு வட்டாரங்களில் ஆச்சரியம்

Vice Admiral Travis Sinniahசிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு, ஒரு மாத சேவை நீடிப்பு மாத்திரமே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பு வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் நாள், சிறிலங்கா கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, கடந்த 26ஆம் நாளுடன் 55 வயதை பூர்த்தி செய்துள்ளார்.

இவருக்கு ஒரு மாத சேவை நீடிப்பு மாத்திரமே சிறிலங்கா அதிபரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத சேவை நீடிப்பு வரும் ஒக்ரோபர் 26ஆம் நாளுடன் நிறைவடையவுள்ளது.

1973ஆம் ஆண்டுக்குப் பின்னர், சிறிலங்கா கடற்படைத் தளபதிகளாக இருந்த அனைவருமே, குறைந்தபட்சம் ஒரு ஆண்டு இந்தப் பதவியில் இருந்துள்ளனர்.

அதேவேளை, மிக அண்மையில், வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு முன்னதாக சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, 2 ஆண்டுகள் 1 மாதம் கடற்படைத் தளபதியாக பதவியில் இருந்தார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு மூன்று தடவைகள் சேவை நீடிப்புகள் வழங்கப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை உடனடியாக கடற்படைத் தளபதி பதவியில் இருந்து ஓய்வுபெற வைப்பதில் உறுதியாக இருப்பதாக  கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ட்ராவிஸ் சின்னையாக ஓய்வு பெற்றால், அம்பலங்கொடவைச் சேர்ந்த கடற்படை அதிகாரி ஒருவர் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வார். சின்னையாவை ஓய்வுபெற வைக்க விரும்பும் பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரியும் அதே அம்பலங்கொடவை சேர்ந்தவராவார்.

குறிப்பிட்ட கடற்படை அதிகாரிக்கு அம்பலங்கொடவைச் சேர்ந்த அமைச்சர் சரத் பொன்சேகாவின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே சிறிலங்காவின் 21ஆவது கடற்படைத் தளபதியாக கடந்த ஓகஸ்ட் 22ஆம் நாள் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவுக்கு இன்னமும், அதிகாரபூர்வ இல்லமோ, வாகனங்களோ வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

கடற்படைத் தளபதியின் அதிகாரபூர்வ இல்லம், மற்றும் வாகனங்களை, முன்னைய கடற்படைத்தளபதியான அட்மிரல்  ரவீந்திர விஜேகுணரத்ன இன்னமும் ஒப்படைக்கவில்லை.

அவர் கடற்படையின் ஒரு டிபென்டர், 5 கார்கள், 3 கப்ஸ், 4 உந்துருளிகள் என்பனவற்றைப் பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *