மேலும்

குசால் பெரேராவின் நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரை

cmகுசால் பெரேராவினால் எழுதப்பட்ட “Rajapakse the Sinhala Selfie”  என்ற  நூலின் வெளியீட்டு நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.  கொழும்பு இலங்கை மன்றக் கல்லுரியில் கடந்த 12ஆம் நாள் நடந்த இந்த நிகழ்வில்  முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிகழ்த்திய உரையின் மொழியாக்கம் முழுமையாகத் தரப்படுகிறது.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. கடந்த வாரம் மகாநாயக்க தேரர்களைச் சந்திப்பதற்கு எமக்கு உதவிய குசால் எமது நண்பர்களில் ஒருவர் என்பதற்கப்பால், இவரால் வெளியிடப்படும் இந்த நூலில் குசால் தனது நண்பர்களில் ஒருவரைப் பற்றியே எழுதியுள்ளார் என்பது முக்கியமானது.

‘Rajapakse the Sinhala Selfie’ என இந்த நூல் தலைப்பிடப்பட்டுள்ளது. எங்களை நாங்களே ஒளிப்படம் எடுப்பதே ‘சுயபடம்’ (செல்பி) எனக் கூறப்படுகிறது. ராஜபக்ச தன்னைத் தானே ஒளிப்படம் பிடிக்கும் போது அவரை மக்கள் ராஜபக்ச என நோக்காது ஒரு சிங்களவராகவே நோக்குகின்றனர். அதாவது ராஜபக்ச எந்த வகையான சிங்கள மனிதர் என்பதை குசால் தனது நூலில் விளக்கியுள்ளார்.

‘மகிந்த என்பவர் எதையும் ஏற்றுக்கொள்ளக் கூடிய மிக அரிதான விடயங்களையே மறுக்கக்கூடிய ஒரு நண்பர் என்பதை நான் கண்டறிந்தேன். இந்த அடிப்படையில் இவர் தனது சொந்த சௌகரியத்திற்காக எதையும் ஒருபோதும் மறுக்கவில்லை’ என குசால் தனது நூலின் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

இது மகிந்த ராஜபக்ச தொடர்பான பொருத்தமான விளக்கமாகும். மகிந்த ராஜபக்ச தொடர்பாக எனது தரப்பில் பல அதிருப்திகள் நிலவிய போதிலும், ஒக்ரோபர் 07, 2013 அன்று நான் வடமாகாண முதலமைச்சராக மகிந்தவின் முன் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டேன். இவர் மிகவும் நட்பாக இருந்தார். 2014 ஜனவரி 02 அன்று, நான் மகிந்த ராஜபக்சவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தேன். அப்போதும் அவர் மிகவும் அமைதியாகப் பழகினார்.

நான் மகிந்த ராஜபக்சவிடம் பத்து வேண்டுகோள்களை முன்வைத்திருந்தேன். அதில் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றிய வடக்கின் ஆளுநரைப் பதவி விலக்கி பிறிதொருவரை நியமிக்குமாறு கோரியிருந்தேன். இராணுவ அதிகாரி ஒருவர் வடக்கின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் இதற்குப் பதிலாக பொதுமகன் ஒருவரை ஆளுநராக நியமிக்குமாறும் நான் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்திருந்தேன். ‘நிச்சயமாக நாங்கள் ஆளுநரை மாற்றவேண்டும். ஆனால் இவ்வாண்டு ஜூலை மாதம் வரை எனக்கு அவகாசம் கொடுங்கள். ஏனெனில் அவருக்கான பதவிக்காலம் ஜூலையிலேயே முடிவடைகிறது. இதன் பின்னர் நான் பொதுமகன் ஒருவரை ஆளுநராக நியமிக்கிறேன்’ என மகிந்த ராஜபக்ச எனக்குப் பதிலளித்திருந்தார்.

இந்த அடிப்படையில் வடக்கின் ஆளுநராக நியமிப்பதற்குப் பொருத்தமானவர்களின் பெயர் விபரங்களையும் மகிந்த ராஜபக்ச என்னிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் சில பெயர்களை அவரிடம் குறிப்பிட்டிருந்தேன்.Rajapakse the Sinhala Selfie (3)

ஜூலை மாதம் வந்தபோது மகிந்த ராஜபக்ச எனக்குத் தந்த வாக்குறுதிகளையும் மறந்து மீண்டும் குறித்த இராணுவ ஆளுநரின் பதவிக்காலத்தை மேலும் நீட்டித்தார். மகிந்தவின் இந்தச் செயலானது நான் அவரிடம் முன்வைத்த பத்துக் கோரிக்கைகளும் ஒருபோதும் நிறைவேற்றப்படமாட்டாது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

மகிந்த ராஜபக்சவின் இந்தச் செயற்பாடே சிங்கள செல்பியாகக் காணப்படுகிறது. தன்னிடம் பிறிதொரு எண்ணம் உள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். பொய்யான வாக்குறுதிகள் என்பது மகிந்த ராஜபக்சவின் தந்திரமாகக் காணப்படுகிறது.

குசால் தனது அணிந்துரையில் பிறிதொரு முக்கிய விடயத்தையும் குறிப்பிட்டுள்ளார். ‘பயங்கரவாதம்’ என்கின்ற பதத்தின் அரசியல் உட்குறிப்புக்களை புலம்பெயர் தமிழ் மக்கள் சரியாக வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் தவறியுள்ளனர் என குசால் குறிப்பிட்டுள்ளார்.

நியூயோர்க்கில் இடம்பெற்ற செப்ரெம்பர் 11 தாக்குதலானது உலக அரசியலில் தீவிரமானதொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அமெரிக்கா மீது அல்குவைதாவால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் பின்னர் அமெரிக்கப் புலனாய்வாளர்கள், அரச அதிகாரிகள் போன்றோரால் உலகெங்கும் செயற்பட்ட ஆயுத அரசியலானது பயங்கரவாதம் என முத்திரை குத்தப்பட்டது. இதன் பிரகாரம் அல்குவைதாவிற்குச் சமமானவர்களாக தமிழ் ஆயுதக்குழுவினரையும் ராஜபக்ச அங்கீகாரம் செய்து அவர்களைப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியிருந்தார். செப்ரெம்பர் 11 தாக்குதல் இடம்பெற்று 16 ஆண்டுகள் கடந்து விட்டன.

இப்போதும் கூட தமிழ் ஆயுதக்குழுக்களை பல ஊடகங்கள் பயங்கரவாதிகளாகவும் தீவிரவாதிகளாகவும் குறிப்பிடுகின்றன. உலக அரங்கில் தமிழ் இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் பயங்கரவாதச் செயற்பாடுகளாக முத்திரை குத்தப்படுகின்றன. இந்த அளவிற்கு மகிந்த ராஜபக்ச உள்ளுர் அரசியல் இராணுவப் போராட்டத்தை உலகளாவிய நிகழ்வாக மாற்றியுள்ளார்.

சிங்கள செல்பியாக உள்ள மகிந்தவைப் பற்றியே குசாலின் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச தொடர்பாக வெளியிடப்படும் நூலிற்கு ஏன் விக்னேஸ்வரன் ஆதரவு வழங்குகின்றார் என்கின்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.  ‘சம்பந்தன் மகிந்தவுடன் நட்புறவைப் பேணுகிறார் – இதற்கு விக்னேஸ்வரன் பூக்களை வழங்குகிறாரா?’ போன்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நான் எனது நண்பரான குசால் பெரேரா தனது நூல் வெளியீடு தொடர்பாக வழங்கிய அழைப்பிதழை ஏற்றே நான் இங்கு வந்துள்ளேன். இதன்பின்னரே இந்த நூல் எதைப்பற்றியது என்பது தொடர்பாக நான் அறிய முற்பட்டேன். இந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பந்தியை நான் இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.

‘ராஜபக்ச அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட யுத்தத்தால் ஏற்பட்ட கொடிய விளைவுகளை ஒருபோதும் முக்கியத்துவப்படுத்தவோ அல்லது நியாயப்படுத்தவோ முடியாது. இந்த யுத்தத்தின் தாக்கமானது வடக்கு கிழக்குடன் மட்டும் முடியவில்லை. இந்த யுத்தம் தமிழ் மக்களை மட்டும் வேட்டையாடவில்லை. தமிழ் மக்கள் இந்த யுத்தத்தின் போது மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உண்மையே.

அத்துடன் நீண்ட காலமாக நடைமுறையிலுள்ள அனைத்து சமூகத்தவர்களினதும் ஜனநாயகக் கட்டமைப்புக்கள், சமூக விழுமியங்கள் போன்றன மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட கொடிய யுத்தத்தால் அழிவுற்றுள்ளன. இந்த யுத்தமானது மக்களின் ஜனநாயக மற்றும் மனித உரிமைகளை முற்றிலும் மீறியுள்ளது. இந்த யுத்தமானது ஊடக சுதந்திரத்தை பாதிப்படையச் செய்துள்ளது. அத்துடன் அரசியல் இராணுவ ஆட்சி ஒன்று சிறிலங்காவில் இடம்பெறுவதற்கும் இக்கொடிய யுத்தம் வழிவகுத்தது.

இதன்மூலம் நீண்டகாலமாக தேர்தல் மூலம் ஜனநாயக வழியில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் செயலிழந்தது. இதனால் இராணுவ ஆட்சியானது மக்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறியது. இந்த யுத்தம் மக்களின் இறையாண்மையை நிர்மூலமாக்கியது. இது மக்களை சமூக உளவியல் தாக்கத்திற்கு உள்ளாக்கியது. தமிழ் ‘பயங்கரவாதம்’ என்கின்ற பதத்தை இல்லாதொழிப்பதற்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட கொடிய யுத்தமானது இத்தகைய பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தியது’ என குசால் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இப்பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை எவராலும் மறுக்க முடியாது. தமிழ்ப் பயங்கரவாதத்தை அழித்தல் என்கின்ற போர்வையில் மகிந்த ராஜபக்ச அரசியல் இராணுவ ஆட்சிக்கு வழிவகுத்தார்.  மகிந்த அரசியல் ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதேவேளையில் இவர் இராணுவ ஆட்சியை மேற்கொண்டமை மக்களின் இறையாண்மையைப் பாதித்தது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

cm

மகிந்தவைக் கவருவதற்காக திரு.சம்பந்தனுக்குப் பூக்களை வழங்குவதற்கு அப்பால், பொருத்தமான நேரத்தில் தேவைப்படும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக நான் என்னைத் தயார்ப்படுத்திக் கொள்கிறேன். அதாவது வில்லன்கள், கதாநாயகர்களை விட மிக விரைவாகப் பிரபலமடைகின்றனர் எனக் கூறப்படுகிறது. ஆனால் இதைப் பிரபலம் எனக் கருதமுடியாது. இது அவப்பெயரைச் சம்பாதித்துத் தருகிறது.

இந்த வகையிலேயே இன்று விற்பனை செய்யப்படும் குசால் பெரேராவின் நூலும் மகிந்தவிற்கு அவப்பெயரையே சம்பாதித்துத் தரும். மாறாக இது மகிந்தவிற்கு நற்பெயரைச் சம்பாதித்துக் கொடுக்காது. இருப்பினும் நான் திரு.சம்பந்தனைப் போன்று நடந்து கொள்ளவில்லை.

குசால் எழுதிய நூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக எழுதிய விடயத்தையும் நான் குறிப்பிட விரும்புகிறேன். ‘ராஜபக்ச சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிரான் அலெஸ் தேர்தலைப் புறக்கணிப்பதற்கான முயற்சிகளுக்கு அனுசரணையாக இருந்ததாக ஐ.தே.க உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக எமில் காந்தன் இதில் தொடர்புபட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு காந்தனுடன் ரிரான் அலெஸ் சமரசம் செய்தமையானது வேறுபட்ட அரசியல் நோக்கங்களைக் கொண்டிருந்திருக்கலாம் என நான் நம்புகிறேன்’ என குசால் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

‘தேர்தலைப் புறக்கணிப்பது தொடர்பில் பிரபாகரன் மற்றும் புலிகள் அமைப்பின் தலைமையுடன் எந்தவொரு உடன்படிக்கையையும் மேற்கொள்வதற்கான ஒரு மத்தியஸ்தராக பணியாற்றக்கூடிய தகைமையை எமில் காந்தன் கொண்டிருந்தார் என்பதை தனிப்பட்ட ரீதியாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவ்வாறான ஒரு உடன்பாடு எட்டப்பட வேண்டிய தேவையிருந்திருந்தால் அதற்கு எமில் காந்தனை விட மேலும் சிறப்பான கூடிய தகைமையைக் கொண்ட பலர் இருந்தனர். இவர்களுள் புலிகள் அமைப்பின் சமாதானச் செயலகத்தின் தலைவராகப் பணியாற்றிய புலித்தேவன் ஒருவராவார். ராஜபக்ச புலிகள் அமைப்புடன் ஏதாவதொரு உடன்பாட்டை மேற்கொள்ள விரும்பியிருந்திருந்தால் அரசியல் ரீதியான தொடர்பாடலைச் செய்வதற்கான நம்பிக்கை மிக்க மத்தியஸ்தராக புலித்தேவனைத் தெரிவுசெய்திருக்க முடியும்.

தேர்தலில் யாருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் கொழும்பிலிருந்து பிரபாகரனுக்கு அனுப்பப்பட்ட பணத்தை பிரபாகரன் தனது அரசியல் இராணுவ எதிர்காலத்திற்காகக் சூதாடியிருப்பார் என்பதில் எனக்கு இன்னமும் சந்தேகம் உள்ளது’ என குசால் பெரேரா எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளார்.

‘செப்ரெம்பர் 11 தாக்குதலின் பின்னர் இடம்பெறும் பூகோள அரசியல் நிலைப்பாடுகளை புலம்பெயர் தமிழ் மக்கள் உன்னிப்பாக அவதானிப்பதற்கான திறனைக் கொண்டிராததால், வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கான தனிநாடொன்றை உருவாக்குவதற்கு ஐ.நா தலையீடு செய்வதற்கான அனைத்துலகப் பரப்புரை நடவடிக்கையை புலம்பெயர் தமிழ் மக்கள் ஆரம்பித்தனர். தாங்கள் இந்த நோக்கத்தை அடைவதற்கு சிறிலங்காவின் அதிபராக கடும்போக்கு சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என அவர்கள் கருதினார்கள்.

இவ்வாறான ஒரு கடும்போக்கு சிங்கள அதிபரால் மட்டுமே 13வது திருத்தச் சட்டத்தைத் தவிர வேறெந்த ஒன்றுக்கும் உடன்பட முடியாது என புலம்பெயர் தமிழ் மக்கள் கருதினர். இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு காரணமாகியது. யுத்த நிறுத்தம் தொடர்ந்தும் அமுலில் இருப்பதை பெரும்பாலான தமிழ் மக்கள் விரும்பியதால் அவர்கள் விக்கிரமசிங்கவிற்கே தமது வாக்குகளை வழங்குவார்கள் என தேர்தலுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் எதிர்வுகூறப்பட்டது’ என குசால் பெரேரா தனது நூலில் எழுதியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சொந்த நலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே மகிந்த ராஜபக்சவைத் தெரிவு செய்திருக்கலாம். குசால் ராஜபக்ச குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவர். மகிந்தவுடனும் இவர் மிகவும் நெருக்கமாகப் பழகியிருந்தார். 13 நவம்பர் 2005ல் தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர் குசால் பெரேரா, மகிந்தவிற்கு திறந்த மடல் ஒன்றை எழுதியிருந்தார். அந்த மடலில் ‘இந்த நாட்டின் தலைவிதியானது ஒரு சால்வையில் தொங்கும் நிலை ஏற்படுவதை நான் விரும்பவில்லை என்பதால் இத்தேர்தலில் நான் தங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டேன்’ என குசால் குறிப்பிட்டிருந்தார்.

‘யுத்தம் வெற்றி கொள்ளப்பட்டதால் ‘போர்க் கதாநாயகர்களின்’ உதவியுடன் மகிந்த ராஜபக்ச ஊழல் மற்றும் அதிகாரத்துவ குடும்ப ஆட்சியை மேற்கொண்டிருந்தார். நான் இவரது இந்த ஆட்சியை ‘திருட்டுத்தனமானது’ என அழைக்க விரும்புகிறேன். அதாவது எமது நாட்டின் வளங்களை மகிந்த தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி திருடியுள்ளார் என்பதே இதன் கருத்தாகும்’ என குசால் பெரேரா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Rajapakse the Sinhala Selfie (1)

குசால் பெரேராவின் நூலை நான் குறுகிய நேரத்தில் வாசித்துள்ளேன். இவரது நூலில் சில சாதகமான அம்சங்கள் காணப்படுகின்றன. சிங்கள மக்களின் ஆதரவை அதிகம் பெற்றிருந்த மகிந்த ராஜபக்சவை குசால் நன்கறிந்திருந்தார். ஆனால் மகிந்தவின் பிரபலமானது நாட்டில் வன்முறையை உருவாக்குவதற்கும் சிறிலங்காவின் இன்றைய அரசியல் சூழலில் நிலவும் இன மத முரண்பாடுகளை உருவாக்குவதற்கும் வழிவகுத்ததாக குசால் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

குசால் தனது நூலில் மகிந்தவின் முன்னைய வரலாறு மற்றும் சிங்கள தேசியவாத நீள்வட்டப்பாதையில் மகிந்தவின் உறிஞ்சல்கள் தொடர்பாகவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மகிந்த நுழைந்தமை தொடர்பாகவும் அதன் பின்னரான அவரது அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும் எழுதியுள்ளார். தமிழ் மக்களுக்கு எதிராக மகிந்தவால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டமிட்ட நகர்வுகள் குறிப்பாக தமிழ் மாணவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கல்வித் தரப்படுத்தல் தொடர்பாகவும் குசால் குறிப்பிட்டுள்ளார்.

‘சிங்கள பௌத்த நாட்டின் ஒருங்கிணைப்பானது கடந்த 03 பத்தாண்டுகளில் பல்வேறு சிக்கலான அரசியல் கையாளல்கள் மூலம் பெறப்பட்டது. இவ்வாறான ஒவ்வொரு தலையீடும் சிங்கள சமூகத்தின் மனங்களை பலப்படுத்தியுள்ளது. இதன்மூலம் இரு பெரும் சிங்கள அரசியற் கட்சிகள் தேர்தலில் முதன்மை பெற்றுள்ளன. இவ்விரு கட்சிகளின் மூலம் ஒவ்வொரு தேர்தலிலும் சிங்கள வாக்குகள் அரசியல் அதிகாரத்தைப் பெறக் காரணமாக உள்ளன. இதுவே தமிழ் மக்களின் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமைக்கான முதன்மைக் காரணமாகும்’ என குசால் தனது நூலில் எழுதியுள்ளார்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதென்பது உண்மையில் சாதாரணமானதாகும். இந்த மக்களின் அடையாளங்கள் அங்கீகரிக்கப்பட்டு இவர்களுக்கான அரசியல் உரிமைகள் ஏற்கப்படும் பட்சத்தில் இந்த நாட்டில் அமைதி, நல்லிணக்கம், பொருளாதார மீளுருவாக்கம் போன்றன உடனடியாக இடம்பெறும். இதன்மூலம் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

கலாநிதி கொல்வின் ஆர் டீ சில்வாவின் நினைவு நாள் இடம்பெற்ற 01.03.2008 அன்று, றோயல் கல்லூரியில் என்னுடன் கற்ற எனது சகபாடியும் எனது நண்பனுமான கலாநிதி நிகால் ஜெயவிக்கிரம,  ஆற்றிய உரை தொடர்பாகவும் குசால் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அதாவது 1972 மற்றும் 1978 அரசியல் சாசனங்கள் தொடர்பாகவே இந்த உரை அமைந்திருந்தது. அப்போதைய அரசியல் கட்சிகள் தமது அரசியல் நலன்களுக்காகவே அரசியல் சாசனங்களை உருவாக்கியதாகவும் மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப அரசியல் சாசனங்களை உருவாக்கவில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலாநிதி கொல்வின் ஆர் டீ சில்வா மற்றும் லங்கா சம சமாஜக் கட்சி ஆகியன பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருந்தன. இதன் பின்னர் 1970 தேர்தலில் இப்பெரும்பான்மையை ஐக்கிய முன்னணி பெற்றுக் கொண்டது. இதன்மூலம் கலாநிதி ஆர் டீ சில்வா தனதும் தனது கட்சியின் நீண்ட நாள் அரசியல் நம்பிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக அரசியல் சாசன வரைவை எடுத்துக்கொண்டார். இது தொடர்பில் எந்தவொரு தரப்பிடமிருந்தும் குறிப்பாக பொதுச் சேவை, நீதி மற்றும் மிதவாதக் கருத்தைக் கொண்டிருந்த அப்போதைய பிரதமரிடமிருந்தும் தடை ஏற்படக் கூடாது என இவர் விரும்பினார். இதனால் வடக்கில் வாழ்ந்த மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்கு இந்த சாசனம் தவறிவிட்டது என்பது பெரும் துன்பியல் சம்பவமாகும்’ என குசால் குறிப்பிட்டுள்ளார்.

1978 அரசியல் சாசனத்தை வரைவதற்கு கலாநிதி எச்.டபிள்யு. ஜெயவர்த்தன பொறுப்பாக இருந்தார்.   ‘சிறுபான்மையினருக்கு சேவையாற்றிய இரண்டாம் சபை, பொதுச் சேவை நியமனங்களில் எவ்வித பாரபட்சங்களும் இடம்பெறுவதைத் தடுக்கும் சுயாதீன பொதுச் சேவை ஆணைக்குழு, நீதிச் சேவையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தும் நீதிச் சேவை ஆணைக்குழு, பிரதிநிதித்துவம் அற்றவர்களின் தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தேர்வு செய்யப்பட்ட சட்ட சபை உறுப்பினர்கள், அரசியல் சாசனத்தின் நீதி மீளாய்வு, 29வது பிரிவில் குறிப்பிடப்பட்ட பாரபட்சப்படுத்தப்பட்ட அரசியல் சாசனத்தைத் தடை செய்தல் போன்ற ஆறு அம்சங்கள் 1978 அரசியல் சாசனத்திலிருந்து நீக்கப்பட்டது. இதனைத் தமிழ் அரசியல்வாதிகளும் ஏற்றுக்கொண்டனர்’ என கலாநிதி ஜெயவிக்கிரம குறிப்பிட்டிருந்தார்.

Rajapakse the Sinhala Selfie (2)பெடரல் கட்சியால் அரசியலமைப்புச் சட்டமன்றத்திடம் கையளிக்கப்பட்ட நான்கு விடயங்கள் தொடர்பாக குசால் பெரேராவால் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சிங்கள மொழிக்குச் சமானாக தமிழ் மொழியை அரசியல் சாசனத்தில் அங்கீகரித்தல், மதச்சார்பற்ற நாட்டை உருவாக்குதல், அரசாங்க ஆட்சிக் கட்டமைப்புக்களை மத்தியிலிருந்து பிரித்தெடுத்து பரவலாக்குதல், அனைத்து தமிழ் தோட்டத் தொழிலாளர்களுக்கும் எவ்வித பாரபட்சமுமின்றி குடியுரிமையை வழங்குதல் போன்ற நான்கு விடயங்களை தமிழ் பிரதிநிதிகளால் தலைமை வகிக்கப்பட்ட பெடரல் கட்சியால் கையளிக்கப்பட்ட போதிலும் லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் கொம்யுனிஸ்ட் கட்சித் தலைமைகளை உள்ளடக்கிய அரசியலமைப்புச் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்டிருந்த ஐக்கிய முன்னணியால் நிராகரிக்கப்பட்டது.

இதன் மூலம் ‘இறையாண்மை மிக்கதும் சுதந்திரம் மிக்க குடியரசாக’ இலங்கை அறிவிக்கப்பட்டது. இது சிறிலங்காவை மேலும் சிங்கள பௌத்த நாடாக பலப்படுத்துவதற்கு உதவியது’ என குசால் தனது நூலில் எழுதியுள்ளார்.

ஜனநாயக, ஒழுக்கம்மிக்க, அமைதி விரும்பிகளான தமிழ்த் தலைவர்கள் ஒற்றை நாட்டிற்குள் மாற்றுத் தீர்வுடன் வாழ்வதற்கான வழிகளைத் தேடிய போதிலும் ஐக்கிய முன்னணியின் அரசியலானது தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கக் காரணமாகியது. தமிழ்த் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்த தந்தை செல்வா தனது காங்கேசன்துறை தொகுதிக்கான நாடாளுமன்ற ஆசனத்தில்  இருந்து 1972 ஒக்ரோபரில் விலகிக் கொண்டார்.

1972 குடியரசு அரசியல் யாப்பை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தேர்தல் மூலம் உறுதி செய்வதற்காகவே தான் பதவி விலகிக்கொள்வதாக தந்தை செல்வா அறிவித்தார். திருமதி பண்டாரநாயக்காவின் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம் தேர்தலைப் பிற்போட்டது. இது தமிழ் மக்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

1973ல் மல்லாகத்தில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 12வது மாநாட்டில் முதன் முதலாக ‘தனித் தமிழ் நாட்டுக்’ கோரிக்கைக்கான அத்திவாரத்தை இடுவது தொடர்பாக தீவிரமாக கலந்துரையாடப்பட்டது.

1974 பெப்ரவரியில் காங்கேசன்துறை தொகுதிக்கான தேர்தலை நடத்த  ஐக்கிய முன்னணி தலைமை தீர்மானித்தது. இத்தேர்தலில் போட்டியிட்ட செல்வநாயகம் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றார். இவர் 72.55 சதவீத வாக்குப் பலத்துடன் தேர்தலில் வெற்றி பெற்றார். இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் இன்று வரை இவ்வாறான ஒரு தேர்தல் வெற்றியை எந்தவொரு அரசியல்வாதியும் பெற்றுக்கொள்ளவில்லை.

இத்தேர்தலில் ஐக்கிய முன்னணி சார்பாக போட்டியிட்ட கொம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் வி.பொன்னம்பலம் 26.46 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்டார். இத்தேர்தலானது   தமிழ்த் தேசிய அரசியலின் ‘தந்தையாகக்’ கருதப்பட்டவரும் 33 ஆண்டுகளாக ஜனநாயக அரசியலிற்காக மிகவும் துடிப்புடன் செயற்பட்ட தலைவருமான தந்தை செல்வா அரசியலிலிருந்து ஓய்வுபெறுவதற்கு இரண்டு ஆண்டுகளின் முன்னர் இடம்பெற்றது.

30 ஆண்டுகளாக ஜனநாயக வழியில் தமிழ் மக்களின் அரசியல் அவாக்களை முன்வைத்துப் போராடிய தந்தை செல்வா அவர்கள், தனது அரசியல் வாழ்வின் இறுதி மூன்று ஆண்டுகளும், தமிழ் மக்கள் கௌரவத்துடன் வாழ்வதற்கு அவர்களின் அரசியல் அவாக்களுக்கான பதிலாக தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கை மட்டுமே தீர்வாக அமையும் என்பதை ஏற்றுக்கொள்ளுமளவிற்கு சிங்களத் தலைவர்களால் இவர் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்.

‘எனது மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனில், இவ் இடைத் தேர்தல் மூலம் மக்கள் அளித்த ஆணையானது தமிழ் மக்கள் இறையாண்மையுடன் வாழ்வதற்கும் சுதந்திரமாக வாழ்வதற்கும் தமிழீழம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை உறுதிபடத் தெரிவிப்பதாகவும் இதுவே தமிழ் மக்களின் தீர்ப்பாக இருப்பதாகவும் நான் கருதுகிறேன்’ என தேர்தல் வெற்றியை ஏற்றுக்கொண்டு விடுத்த அறிக்கையில் தந்தை செல்வா குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்த அறிக்கையானது அப்போது என்ன நடந்தது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. குசால் ஒரு சிங்க ஊடகவியலாளராக உள்ள போதிலும் அவர் தன்னை ஒரு சிங்களவர் எனக் கருதாது ஒரு மனிதனாகக் கருதி இந்த நூலில் பல்வேறு முக்கிய கருத்துக்களை எவ்வித பக்கச்சார்பற்ற வகையிலும் முன்வைத்துள்ளார். இவரது இந்த மனோநிலையை தம்மைத் தாமே சிங்களத் தேசியவாதிகள் எனப் பறைசாற்றும் கடும்போக்கு சிங்களவாதிகள் கருத்திற் கொள்ள வேண்டும்.

குசால் தனது நூலில் எழுதிய பல விடயங்களை இங்கு கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன். இதே விடயங்களை நான் தெரிவித்தால் நான் ஒரு தீவிரவாதியாகவே நோக்கப்படுவேன். குசாலுக்கு எதிராக முன்வைக்கப்படும் சில புனைபெயர்கள் தொடர்பில் நான் சந்தேகப்படுகிறேன். ஆனால் நாங்கள் இருவரும் உண்மையை மட்டுமே கூற முற்படுகிறோம். உண்மையைத் தவிர வேறெதையும் கூற நாங்கள் விரும்பவில்லை.

குசாலின் இந்த நூலானது மிகவும் பயனுள்ளது. குறிப்பாக கடந்த காலத்தில் இடம்பெற்ற அரசியல் சம்பவங்களை நினைவுபடுத்துவதற்கும் தற்காலத்தில் இடம்பெறும் பல்வேறு பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணங்கள்  என்பதை அறிவதற்கும் குசாலின் இந்த நூல் பெரிதும் உதவுகின்றது. இந்த நூலானது காலத்திற்கு உகந்த ஒரு வெளியீடாகும்.

இந்த நூல் ‘மகிந்த – சிங்கள செல்பி’ என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்ட போதிலும் நாட்டில் ஆயுதப் போராட்டம் ஒன்று ஆரம்பிப்பதற்கு காரணமான கடந்த கால அரசியல் வரலாற்று உண்மைகளைப் பதிவு செய்துள்ளது. தனித் தாய்நாட்டுக் கோரிக்கையானது முதன் முதலாக பிரபாகரனால் முன்வைக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதையும் இக்கோரிக்கையானது முதன் முதலாக செல்வநாயகத்தாலேயே முன்வைக்கப்பட்டது என்ற உண்மையும் குசாலின் நூலின் ஊடாக வெளிப்படுத்தப்படுகிறது.  இந்த நூலின் இறுதிப் பந்தியில் மகிந்தவின் பங்கு என்ன என்பது தொடர்பாகவும் விளக்கப்பட்டுள்ளது.

மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *