மேலும்

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட அரச அதிகாரிகளுக்கான கட்டுப்பாடு தளர்வு – கள அதிகாரிக்கு தடை

lakshman kiriellaஅரச சேவையில் உள்ள களப்பணியாற்றும் அதிகாரிகள் மாத்திரமே, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆசிரியர்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்ட வரைவு நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த திருத்தச்சட்ட வரைவில், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட அரச பணியாளர்களுக்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரும் திருத்த யோசனை ஒன்றை கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன முன்வைத்தார்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும், அரச பணியாளர்கள், ஒரு ஆண்டுக்கு முன்னரே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையை புதிய திருத்தச்சட்டத்தில் நீக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

இதையடுத்து, இந்த திருத்த யோசனை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது, 120 உறுப்பினர்கள் இந்த திருத்த யோசனைக்கு எதிராக வாக்களித்தனர். 44 உறுப்பினர்கள் மாத்திரம் ஆதரவாக வாக்களித்தனர். இதனால் இந்த திருத்த யோசனை  நிராகரிக்கப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில்அமைச்சர் ஜோன் செனிவிரத்ன வாக்களிக்கவில்லை. எனினும், உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் அவர் ஆதரவாக வாக்களித்தார்.

இந்த திருத்த யோசனை தொடர்பாக உரையாற்றிய அவை முதல்வரும் அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல, சமுர்த்தி அதிகாரிகள், அபிவிருத்தி அதிகாரிகள், கிராம அதிகாரிகள் போன்ற களப்பணி ஆற்றும் பொதுச்சேவை அதிகாரிகள் மாத்திரமே உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், ஆசிரியர்கள் போட்டியிட முடியும் என்றும் கூறினார்.

இந்த விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் பௌசர் முஸ்தபா, அரச சேவையில் பணியாற்றுவோர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டுள்ள தடையை, களப்பணி அற்றும் அதிகாரிகளுக்கு மட்டுமே பொருத்தமானதாக, உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச்சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளரும், அரச பணியாளர்கள் அனைவரையும் தேர்தலில் போட்டியிட தடை செய்யவே பரிந்துரைத்திருந்தார். எனினும், சமுர்த்தி அதிகாரிகள், கிராம அதிகாரிகள், அபிவிருத்தி அதிகாரிகள் போன்ற களப்பணி ஆற்றும் அதிகாரிகளுக்கு மாத்திரம் இந்தக் கட்டுப்பாட்டை மட்டுப்படுத்த அரசாங்கம் முடியு செய்துள்ளது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *