மேலும்

வடக்கு சம்பவங்களுக்கு முன்னாள் போராளிகள் காரணமில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

mahesh senanayake pressவடக்கில் அண்மையில் சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் உள்ளூர் விவகாரங்களாகும். இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர், வடக்கில் இராணுவ மற்றும் காவல்துறை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,

“கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்தும், மேலும் இரு காவல்துறையினர் மீது தாக்குதல். நடத்தப்பட்டதை அடுத்தும் பாதுகாப்பு அதிகாரிகள் ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர்.

வடக்கில் இராணுவ மற்றும் காவல்துறை பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த தாக்குதல் உள்ளூர் சம்பவங்களாகும்.  இதனை பரந்துபட்ட செயற்பாடு ஒன்றின் அங்கமாக கருதக் கூடாது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கின்ற ஒவ்வொரு சம்பவங்களையும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புபடுத்த ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றனர்.

நல்லூர் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் விடுதலைப் புலிகளின் பின்னணியைக் கொண்டவர் தான். ஆனால் அவர் 1996ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்த அமைப்பில் இருக்கவில்லை.

mahesh senanayake press

தெற்கில் நடக்கின்ற இதுபோன்ற தாக்குதல்களை யாருமே, தேசிய பாதுகாப்பு விவகாரத்துடன் தொடர்புபடுத்துவதில்லை.

இது போருக்குப் பிந்திய சமூகத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது இயற்கையே.

வடக்கின் அண்மைய சம்பவங்களுக்கும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் எந்த நேரடித் தொடர்புகளும் கிடையாது.

யாராவது ஒரு முன்னாள் புலி உறுப்பினர் இதுபோன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தாலும் கூட அது, தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் என்று அர்த்தம் இல்லை.

கொக்குவிலில் இரண்டு காவல்துறையினர் தாக்கப்பட்ட சம்பவத்தில் கூட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்குத் தொடர்பில்லை.

2009 ஆம் ஆண்டு புார் முடிவுக்கு வந்த பின்னர், 12,180 விடுதலைப் புலி  உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. இவர்களில், 1,963 பேர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கின்றனர். அவர்களில் 600 பேர் பெண்களாவர்.

அதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த மேலும் 200  பேர் புனர்வாழ்வு அளிக்கப்படாத நிலையில் இன்னமும் யாழ்ப்பாணத்தில் உள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *