மேலும்

குடாநாட்டு நிலவரம் – சிறிலங்கா அதிபர், பிரதமரை நாளை அவசரமாகச் சந்திக்கிறது கூட்டமைப்பு

sampoor-ms (3)யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவையும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை அவசரமாகச் சந்தித்துப் பேசவுள்ளது.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா,

“வடக்கின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் தொடர்பாக, கலந்துரையாடுவதற்கான ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்து தரக்கோரி, சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமருக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

நாளை நாடாளுமன்ற அமர்வின் போது சிறிலங்கா அதிபரையும், பிரதமரையும் சந்தித்து நாங்கள், அண்மையில் நடந்த இளைஞர்களின் கைதுகள், பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு சூழல், ஆவா குழுவின் செயற்பாடுகள், மக்கள் எதிர்கொண்டுள்ள அச்சமான சூழல் என்பன தொடர்பாக கலந்துரையாடவுள்ளோம்.

ஆவா குழுவுடன் இளைஞர்கள் இணைந்தமைக்கான காரணங்களை கண்டறிய வேண்டியது காவல்துறையினர் பொறுப்பு. இதன் மூலம், ஆவா குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது இலகுவாக இருக்கும்.

இது பல மாதங்களாக இருந்தாலும், இதுதொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மக்கள் இளைஞர்களின் இதுபோன்ற செயற்பாட்டை விரும்பவில்லை.

இத்தகைய குற்றச்செயல்களில் உண்மையாகவே தொடர்புபட்டிருப்பவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை நாம் தடுக்கப் போவதில்லை. அதற்கும் நாம் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *