மேலும்

மாவையைச் சந்தித்தார் முதலமைச்சர் – கூட்டாகச் செயற்படுவதற்கு இணக்கம்

cm-mavaiவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவுக்கும் இடையில் நேற்று முக்கிய பேச்சு நடத்தப்பட்டது.

நேற்று மாலை 5 மணியளவில், யாழ்ப்பாணம், மார்ட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்துக்குச் சென்ற முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராசா வரவேற்றார்.

இதையடுத்து, இருவரும், தனியாக நீண்ட நேரம் பேச்சுக்களை நடத்தினர்.

இந்தப் பேச்சுக்களின் போது, வடக்கு மாகாணசபையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்படுவது தொடர்பாக முக்கியமாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், இனப்பிரச்சினைத் தீர்வு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும், பேச்சுக்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

cm-mavai

இந்தப் பேச்சுக்களை அடுத்து, ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மாவை சேனாதிராசா,

வடமாகாணசபையில் உருவாகிய பிரச்சினைகள் குறித்தும், இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள்தொடர்பாகவும் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடினோம்.

வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளிலோ, இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலோ எங்களுக்குள் பிரச்சினைகளோ குழப்பங்களோ இல்லாமல் செயற்படுவது என்று இணக்கம் கண்டுள்ளோம்.

வடக்கு மாகாணசபை எமக்கு மிகப்பெரிய பலத்தைக் கொண்ட சபை. மாகாணசபை பிளவுபட்டிருப்பது எமது இனத்தின் விடுதலைக்கு எந்த வகையிலும் உதவியாக இருக்காது.

முதலமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இரு அமைச்சர்களைப் பதவியில் இருந்து நீக்குவதாகவும் குற்றம் காணாத இரு அமைச்சர்களை விடுப்பில் செல்லுமாறு கூறியதில் இருந்து ஆரம்பித்த பிரச்சினை தான்,  முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரை சென்றது. இவை தொடர்பில் விரிவாக ஆராய்ந்தோம்.

தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சமரசத்திற்கு பின்னரான சூழ்நிலையில் எங்களுடைய இலக்கு மாகாணசபையில் அமைச்சுப் பதவிகளை எதிர்காலத்தில் ஏற்பது அல்ல. போராட்டங்களை நடத்துவது அல்ல. அமைச்சுப் பதவி என்பது ஒரு சிறிய விடயமாகும்.

எங்களுடைய இனம் பல இலட்சக்கணக்கானஉயிர்களைப் பலி கொடுத்துள்ள நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்விற்கு அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுத்து வருகின்ற நேரத்தில், நாடாளுமன்றத்திலும் இதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், மீள் குடியேற்றம், இராணுவத்தினரின் காணி அபகரிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் போன்ற விடயங்களுக்கு,  நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு முழுமையான பயன் கிடைக்காதுள்ள  நிலை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தொடர்பில் இருவரும் கலந்துரையாடினோம்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பது தொடர்பாக, வடக்கு மாகாண சபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதில்இணக்கம் கண்டுள்ளோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் வடமாகாண முதலமைச்சரும் கூட்டமைப்பின் ஏனைய கட்சித் தலைவர்களும் ஒன்று கூடி எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பிலும் இத்தகைய பிரச்சினைகள் எழாமல் செயற்படுவது தொடர்பாகவும், இணக்கம் கண்டுள்ளோம்.

தற்போது கிடைத்துள்ள அனைத்துலக சந்தர்ப்பத்தை நாங்கள் முறையாக பயன்படுத்தி தமிழ்த் தேசியத்தின் விடுதலைக்காக ஒன்றுபட்டு செயற்படவும் இணங்கியுள்ளோம்.

எதிர்காலத்தில் இவ்வாறான சந்திப்புக்களை நடத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடனும் முதலமைச்சருடனும் கலந்துரையாடுவதற்கும்  இணக்கம் கண்டுள்ளோம்.

வடக்கு மாகாணசபையின் இரண்டு அமைச்சர்களை நியமித்தல் தொடர்பாக, அடுத்த சில நாட்களில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனும், சந்தித்து கலந்துரையாடுவது என்றும் இணக்கம் காணப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணசபையில் முதலமைச்சருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை முயற்சிக்குப் பின்னர், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கும், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் முதல் முறையாக நடந்த இந்தச் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *