மேலும்

வடக்கு அரசியல் நெருக்கடி முற்றுகிறது – மாறி மாறி பந்து வீசும் ஆளும்கட்சி அணிகள்

wigneswaran-sampanthanவடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகவும், ஆதரவாகவும், ஆளும்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் பிளவுபட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்று தெரிய வருகிறது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் நால்வருக்கும் எதிராக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த நடவடிக்கையின் விளைவாக, அவருக்கு எதிராக ஆளும்கட்சியின் 15 உறுப்பினர்கள் மாகாண ஆளுனரிடம் மனுவொன்றை அளித்தனர். அதில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களும் கையெழுத்திட்டிருந்தனர்.

அதேவேளை, முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட ஆளும்கட்சியின் 15 உறுப்பினர்களும் ஆளுனரிடம் கடிதம் அளித்திருந்தனர்.

இந்தநிலையில், முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து போராட்டங்கள் பேரணிகளும் நடத்தப்பட்டிருந்தன.

இந்த நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். எனினும், இந்த இணக்க முயற்சிகளில் எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதில் விசாரணைக்குழுவினால் குற்றவாளிகளாக காணப்படாத அமைச்சர்களுக்கு எதிராக விக்னேஸ்வரன் எடுத்த நடவடிக்கையே வடக்கு மாகாணசபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு காரணம் என்றும், அவர்கள் மீதான நடவடிக்கைகளை திருத்திக் கொண்டால், நிலைமைகள் சுமுகமடையும் என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருந்தார்.

இரா.சம்பந்தன் தனது கடிதத்தில், மேற்குறிப்பிட்ட இரண்டு அமைச்சர்கள் மீதான மேல் விசாரணையை தாம் எதிர்க்கவில்லை என்றும், அவர்களால் விசாரணைக்கு இடையூறு ஏற்படாது என்றும் உறுதியளித்திருந்தார்.

இதற்கிடையே, நேற்று வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் முதலில் தனியாகச் சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர், சில மாகாணசபை உறுப்பினர்களுடன் இணைந்து நேற்றுமாலை முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், இரா.சம்பந்தனுக்கு பதில் அனுப்பவுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். எனினும் பதில் கடிதத்தின் உள்ளடக்கத்தை அவர் வெளியிடவில்லை.

அதேவேளை, விசாரணைக்குழுவினால், குற்றம்சாட்டப்படாத அமைச்சர்கள் இருவருக்கு எதிராக புதிய விசாரணை நடத்தப்படும் என்றும், அதற்கு தம்மால் இடையூறு ஏற்படுத்தப்படாது என்று அமைச்சர்கள் இருவரும் எழுத்து மூலம் உறுதி அளித்தால், அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் முடிவைப் பரிசீலிக்கத் தயார் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தமிழ் அரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள், முதலமைச்சரை நீக்குவதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மாகாணசபை உறுப்பினர் சயந்தன், இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் முதலமைச்சர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவர் மீது நம்பிக்கையிழந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டு தரப்புகளுமே முடிவு தமது கையில் இல்லை என்று மறுதரப்பிடம் பந்தை வீசி வருகின்ற நிலையில் வடக்கின் அரசியல் குழப்ப நிலை தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையே, வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே நேற்றுமுன்தினம் அவசரமாக கொழும்புக்குச் சென்றிருந்தார். அவர் சிறிலங்கா அதிபர் மற்றும் அரசாங்க உயர் மட்டத்தினருடனும், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுடனும், ஆலோசனைகளை நடத்தியதாக  கூறப்படுகிறது.

வடக்கு அரசியலின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக தாம் சிறிலங்கா அதிபருக்கு உடனுக்குடன் தகவல்கள் அளித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாகாணசபையின் 38 உறுப்பினர்களின் கருத்தை அறிந்த பின்னர், அவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தாம் முதலமைச்சரிடம் கோருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *