மேலும்

பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம் – கூட்டணி ஆட்சி அமைக்க தயாராகிறார் தெரெசா மே

teresa mayபிரித்தானியாவில் நேற்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில்லாத தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் 650 ஆசனங்களுக்கு நடந்த தேர்தலில், 649 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பிரதமர் தெரெசா மே தலைமையிலான ஆளும் கொன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களில் வெற்றி பெற்று மிகப் பெரிய கட்சியாக உள்ளது.

கடந்த நாடாளுமன்றத்தில், இருந்ததை விட 12 ஆசனங்களை கொன்சர்வேட்டிவ் கட்சி இழந்துள்ளது.

அறுதிப்பெரும்பான்மையைப் பெறுவதற்கு கொன்சர்வேட்டிவ் கட்சிக்கு, இன்னமும் 8 ஆசனங்கள் தேவைப்படுகின்றன.

எதிர்க்கட்சியான தொழிற்கட்சி, 261 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இந்தக் கட்சிக்கு கடந்த முறையை விட 29 ஆசனங்கள் அதிகமாக கிடைத்துள்ளன.

ஸ்கொட்டிஸ் தேசிய கட்சி 35 ஆசனங்களைப் பெற்றுள்ளது. கடந்தமுறை பெற்றிருந்த 21 ஆசனங்களை இந்தக் கட்சி இழந்துள்ளது.

லிபரல் ஜனநாயகக் கட்சி 12 ஆசனங்களையும், தேசிய ஒன்றிய கட்சி 10 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

இந்த தேர்தலில், பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள கொன்சர்வேட்டிவ் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று தொழிற்கட்சி தலைவர் விடுத்த கோரிக்கையை பிரதமர் தெரெசா மே நிராகரித்துள்ளார்.

10 ஆசனங்களைக் கொண்டுள்ள தேசிய ஒன்றியக் கட்சியுடன் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ள நிலையில் அமெரிக்க டொலருக்கு எதிரான பிரித்தானிய பவுண்ட்டின் மதிப்பு 2 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *