மேலும்

வடக்கு, கிழக்கில் உலோக வீடுகளை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் சிவில் சமூகம்

steel-houseவடக்கு கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 உலோகப் பொருத்து வீடுகளை அமைத்துக் கொடுப்பது தொடர்பாக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை பொது அமைப்புக்கள் எதிர்த்துள்ளன. இந்த வீடுகள் தமக்கு வேண்டாம் என மக்கள் கூறிவரும் நிலையில், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டை மேலும் கடன் சுமைக்குள் தள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் 6000 உலோக வீடுகளைக் கட்டுவது தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை, சிறிலங்காவின் அமைச்சரவை அண்மையில்  ஏற்றுக்கொண்டது. வடக்கு கிழக்கில் யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு, கற்கள், சீமெந்து போன்றவற்றைக் கொண்டு மரபுசார் முறையில், வருடாந்தம் 10,000-15,000 வீடுகளை மட்டுமே கட்டிக்கொடுக்க முடியும். இதனைச் சமன்செய்வதற்காகவே தற்போது உலோகப் பொருத்து வீடுகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

உலோகத்திலான பொருத்து வீடுகள் அனைத்துலக உலோக நிறுவனமான ArcelorMittal (AM)    என்கின்ற நிறுவனத்தால் கட்டப்படுகிறது. இந்த நிறுவனம் சிறிலங்காவில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கில் 65,000 உலோக வீடுகளைக் கட்டித்தருவதற்கான விண்ணப்பத்தை 2015ல் வழங்கியது. இதனை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆதரித்திருந்தார். ஆனால் இதனை அமைச்சரவை நியமன ஆணைக்குழு மறுத்திருந்தது.

அதாவது இந்த அமைச்சரவை நியமன ஆணைக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மாகாண சபை, மாவட்ட ஒருங்கிணைப்பு ஆணைக்குழுக்கள், நாடாளுமன்ற கண்காணிப்பு ஆணைக்குழு மற்றும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை ஆணைக்குழுவால் நியமிக்கப்பட்ட குழு, உள்ளுர் அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றவர்கள் உள்ளடங்குகின்றனர்.

ArcelorMittal நிறுவனம் சிறிலங்காவில் உலோகப் பொருத்து வீடுகளை அமைப்பதற்கான பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் அவற்றை நிர்மாணிப்பதற்கும் சிறிலங்கா அரசாங்கம் கடனைப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்க்கிறது. அதேவேளையில் போரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமக்கு எத்தகைய வீடு வேண்டும் என்கின்ற தெரிவை அதாவது உலோகப் பொருத்து வீடுகளா அல்லது சீமெந்து வீடுகளா தேவை என்கின்ற தெரிவை எடுக்க வேண்டும் என நாட்டின் அதிபர், பிரதமர் மற்றும் அமைச்சரவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளன. ஆனால் மீள்குடியேற்ற அமைச்சே உலோகப் பொருத்து வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்கின்ற தெரிவை முன்னெடுத்தது.

இதனால் பொது அமைப்புக்கள் கடந்தமாதம் 26ஆம் நாள் கொழும்பில் ஊடக மாநாடொன்றைக் கூட்டியதுடன் உலோகப் பொருத்து வீடுகளைக் கட்டிக்கொடுப்பது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அறிவித்தது.

steel-house

தனக்கென்றொரு நிரந்தர வீடு இல்லாததால் தான் அலைந்து திரிவதாகக் கூறி மன்னாரைச் சேர்ந்த ஜேக்கப் அந்தோணிப்பிள்ளை தனக்கு உலோகப் பொருத்து வீடொன்றை அமைத்துத் தருமாறு விண்ணப்பித்திருந்தார். இவரும் இந்த ஊடக மாநாட்டில் சில கருத்துக்களை வழங்கியிருந்தார்.

‘உலோகப் பொருத்து வீடுகள் தொடர்பான எவ்வித விளக்கங்களும் வழங்கப்படாத நிலையில் வீடுகளுக்கான விண்ணப்பங்கள் மக்களிடம் வழங்கப்பட்டன. இந்த வீடுகள் எவ்வாறான வடிவத்தைக் கொண்டுள்ளன, இதன் பண்புகள் போன்ற எந்த விடயங்களும் மக்களுக்குத் தெரியப்படுத்தப்படவில்லை’ என திரு. அந்தோணிப்பிள்ளை தெரிவித்தார்.

‘அரசாங்க அதிகாரிகள் கூட இந்த வீடுகள் தொடர்பான எவ்வித விளக்கத்தையும் தரவில்லை. வீடு தேவையாயின் மீள்குடியேற்ற அமைச்சால் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை நிரப்பித் தருமாறு கிராம சேவகர் என்னிடம் தெரிவித்திருந்தார். அதனால் அதனை நான் நிரப்பிக் கொடுத்தேன்’ என திரு. அந்தோணிப்பிள்iளை தெரிவித்தார்.

இந்த வீடுகள் தொடர்பாக மக்களுக்கு எவ்வித விளக்கமும் தெரியாது. ஆனால் இதற்கு விண்ணப்பிக்காவிட்டால், எந்தவகையான வீட்டையும் இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என மக்கள் அச்சம் கொண்டதால் விண்ணப்பங்களைக் கையளித்திருந்தனர். இதேபோன்றே திரு.அந்தோணிப்பிள்ளையும் நிரந்தர வீடொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பத்தை வழங்கியிருந்தார். ஆனால் அவர் தனது விண்ணப்பத்தில் தனது முதலாவது முன்னுரிமையாக செங்கல் மற்றும் சீமெந்திலான வீடே தேவை என எழுதியிருந்தார். இவ்வகையான வீடு கிடைக்காவிட்டால் மாத்திரமே உலோகப் பொருத்து வீடு தேவை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உலோகப் பொருத்து வீடுகள் தொடர்பில் பல்வேறு தொழினுட்பப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. ‘பொது அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் வடக்கில் வாழும் மக்களின் தேவைகளை ஆராய்ந்துள்ளனர். இந்த அடிப்படையில் இந்த மக்களுக்கு சீமெந்து வீடுகள் மட்டுமே பொருத்தமானவை எனவும் உலோகப் பொருத்து வீடுகள் எவ்வகையிலும் பொருந்தாது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கு பல தொழினுட்ப சார் காரணிகள் மற்றும் பாரம்பரிய மற்றும் குடும்பத்தின் செல்வந்த நிலை போன்றனவும் கலாசார நிர்ப்பந்தங்களும் இந்த வீடுகளை அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டும் என்பதால் இதன் நீண்ட காலப் பாவனை தொடர்பான பிரச்சினைகளையும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆராய்ந்துள்ளனர்’ என சிறிலங்காவின் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சந்திரா ஜெயரட்ன தெரிவித்தார்.

‘நாங்கள் பொருளாதார மற்றும் நிதி சார் விடயங்களையும் கவனத்திற் கொண்டுள்ளோம். உலோகப் பொருத்துவீடுகள் முதலில் வரி மற்றும் தீர்வை அறவீடுகளின்றி 2.1 மில்லியன் செலவில் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டது. இது வழமையாக கட்டிக் கொடுக்கப்படும் சீமெந்து வீடுகளின் பெறுமதியை விட அதிகமாகும். அதாவது சீமெந்து வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு ரூபா 500,000 தொடக்கம் 600,000 வழங்கப்பட்டன. பின்னர் இந்த வீடுகளுக்கான செலவு ரூபா 800,000 தொடக்கம் 900,000 ஆக உயர்த்தப்பட்டன. இதனுடன் ஒப்பீடு செய்யும் போது உலோகப் பொருத்து வீடுகளை அமைப்பதற்குத் தேவையான பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து வெளிநாட்டு நாணயத்தின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட வேண்டும். ஆகவே இதற்கு மேலும் செலவு அதிகமாகும்’ என திரு.ஜெயரட்ன தெரிவித்தார்.

‘அத்துடன் உலோக வீடுகளைக் கட்டிக் கொடுப்பதற்கான செலவானது 10 ஆண்டுகளில் மீளச் செலுத்தப்படலாம் என்கின்ற திட்டமும் குறித்த நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டது. பத்து ஆண்டுகளில் சிறிலங்கா ரூபா வீழ்ச்சியடையும் நிலை உருவாகும்’ என திரு.ஜெயரட்ன விளக்கமளித்தார்.

இதன் காரணமாகவும் ஏனைய சில தொழினுட்ப மற்றும் நடைமுறைக் காரணங்களுக்காகவும் பொது அமைப்புக்கள் உலோகப் பொருத்து வீடுகளைப் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கட்டிக்கொடுப்பதை மிகவும் வன்மையாக எதிர்த்து நிற்கின்றன. இதற்கான மாற்றுப் பரிந்துரை ஒன்றை பொது அமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளன.

‘சீமெந்து வீடுகளைக் கட்டுவதற்கான நிதிகளை கடனாக வழங்குவதாக சிறிலங்காவின் முன்னணி வங்கி ஒன்று முன்வந்துள்ளது. ArcelorMittal நிறுவனத்தின் ஊடாக வீடுகளைக் கட்டுவதற்காக நாங்கள் செலவளிக்கும் பணத்தில் சீமெந்திலான 102,000 வீடுகளை எம்மால் கட்டமுடியும்’ என திரு.ஜெயரட்ன தெரிவித்தார்.

ஆனால் இதனை மீள்குடியேற்ற அமைச்சு முற்றிலும் நிராகரித்து விட்டது. பொது அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து மூன்று கோரிக்கைகளை முன்வைத்தன. அதாவது வடக்கு கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 உலோகப் பொருத்து வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கான தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும், அமைச்சரவையானது வருடாந்தம் 10-15,000 சீமெந்து வீடுகளைக் கட்டிக் கொடுப்பதெனத் தீர்மானித்திருந்தால் இதற்கான நிதியை அரசாங்கம் தனது வருடாந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்தே வீடுகள் கட்டப்படுகின்றன என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை பொது அமைப்புக்கள் முன்வைத்தன.

‘பரிந்துரைக்கப்பட்ட உலோகப் பொருத்து வீடுகள் போதியளவு தள அமைவைக் கொண்டிருக்கவில்லை. அத்துடன் பொருத்தமான பாதுகாப்புடன் கூடிய வீட்டுக் கூரைகளைக் கொண்டிருக்கவில்லை. இங்கு உலோகத்தால் உருவாகும் வெப்பம் அதிகமாக இருக்கும். குறிப்பாக உயர் காற்று வீசும் போது இந்த வீடு வாழ்வதற்கு உகந்த வீடல்ல’ என பொறியியலாளரும் பேராசிரியருமான பிரியன் டயஸ் மற்றும் மூன்று வல்லுனர்களுடன் இணைந்து தயாரித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடுகளிற்கு உள்ளே காற்றோட்டம் குறைவாகக் காணப்படுகிறது. புகைக்கூடுகள் அமைக்கப்படாததால் இங்கிருந்து புகை வெளியேறுவதற்கான வழி காணப்படவில்லை. ஆகவே சீமெந்து வீடுகளை விட உலோகப் பொருத்து வீடுகள் எல்லாவிதத்திலும் மோசமான தன்மையையே கொண்டுள்ளதுடன் இதற்கான செலவும் இரண்டு மடங்காகும்.

‘சீமெந்து வீடுகளைக் கட்டுவதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. அதாவது இதற்கு மண், மரம் போன்ற பல வளங்கள் தேவைப்படுகின்றன. அத்துடன் இதனைக் குறுகிய காலத்தில் கட்டிமுடிக்க முடியாது. இதனை தனியொரு நிறுவனத்தால் செய்ய முடியாது. இது தொடர்பில் ஏற்படும் நடைமுறைப் பிரச்சினைகளை அரசாங்கத்தால் தீர்க்கமுடியும்’ என பேராசிரியர் டயஸ் தெரிவித்தார்.

மீள்குடியேற்ற அமைச்சின் சீமெந்து வீடுகள் ரூபா 800,000 இல் கட்டிக்கொடுக்கப்படுகின்றன. ‘இந்நிலையில் இதன் இரண்டு மடங்கு செலவு கூடிய உலோகப் பொருத்து வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதில் மீள்குடியேற்ற அமைச்சு உறுதியாக இருப்பதற்கான காரணம் என்ன?’ என பேராசிரியர் டயஸ் வினவியுள்ளார்.

உலோகப் பொருத்து வீடுகளின் மாதிரி தொடர்பாகவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. ‘ ArcelorMittal நிறுவனம் இந்த வீடுகளை இறக்குமதி செய்யவுள்ளது. ஆகவே இங்கே உள்ளுர் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படும். ஆனால் சீமெந்து வீடுகளைப் பொறுத்தளவில் இதற்கான தொழில் வாய்ப்புக்கள் உள்ளுரில் உள்ளவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கப்படுகின்றன. இது உள்ளுர்ப் பொருளாதாரத்திற்கும் வலுச்சேர்க்கும். உள்ளுர் வளங்களைப் பயன்படுத்துவதால் உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு இது வருவாயைப் பெற்றுக் கொடுக்கும். இதற்கான துணைச் சேவைகளும் உள்ளுரில் பயன்படுத்தப்படுவதால் உள்ளுர் மக்கள் நன்மை பெற முடியும்’ என வடக்கைச் சேர்ந்த ஆய்வாளர் நியந்தினி கதிர்காமர் தெரிவித்தார்.

‘ ArcelorMittal நிறுவனத்திற்கான கடனானது வெளிநாட்டு நாணயப் பரிமாற்றல் விகிதத்தைப் பொறுத்தே வழங்கப்படும். கடந்த ஆண்டு சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக நாணய நிதியத்துடன் வெளிநாட்டு ஒதுக்கங்களில் குறைப்பை ஏற்படுத்துதல் தொடர்பான உடன்படிக்கையை மேற்கொண்டது. ஆகவே அரசாங்கம் பிறிதொரு வெளிநாட்டுக் கடனைப் பெற்றுக் கொள்ளும் போது இந்தப் பிரச்சினை மேலும் அதிகரிக்கும்’ என நியந்தினி கதிர்காமர் தெரிவித்தார்.

‘நாம் தற்போது வழங்கியுள்ள பரிந்துரையானது உள்நாட்டில் ரூபா பிணைப்பத்திரங்கள் மூலம் நிதியைச் செலுத்துவதற்கான பொறிமுறையைக் கொண்டுள்ளது. இதில் நாணய வீழ்ச்சி ஏற்பட்டாலும் கூட, நாங்கள் செலவைக் குறைக்க முடியும். அத்துடன் அரசாங்கம் கடனைச் செலுத்த முடியும்’ என நியந்தினி சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இந்நிலையில் உள்ளுரில் குறைவான செலவுடன் சீமெந்து வீடுகளை அமைத்து அதன் மூலம் உள்ளுர் பொருளாதாரத்திற்கு வலுச்சேர்ப்பதற்கு அரசாங்கம் முன்வராது உலோகப் பொருத்து வீடுகளை அதிகளவு செலவில் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதற்கான காரணம் என்ன?’ என ஆய்வாளர் நியந்தினி கேள்வியெழுப்பியுள்ளார்.

‘அரசாங்கத்தின் இத்தகைய தீர்மானத்திற்கு பின்னாலுள்ள நியாயம் என்ன என்பதை உண்மையில் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. 65,000 உலோகப் பொருத்து வீடுகளை போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கட்டிக்கொடுப்பதற்கான திட்டம் முதலில் 2015ல் முன்வைக்கப்பட்டது. மக்கள் இரண்டு ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். உண்மையில் மக்களுக்கு வீடுகள் தேவை. ஆகவே உடனடியாக இந்த மக்களுக்கு சீமெந்து வீடுகளைக் கட்டிக்கொடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்’ என நியந்தினி தெரிவித்துள்ளார்.

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக அவசரமாக வீடுகள் தேவையாக உள்ளதாக வடக்கைச் சேர்ந்த றாகா அல்போன்சஸ் தெரிவித்தார். இதில் ஏற்படும் தாமதங்கள் இந்த மக்களின் வாழ்வைப் பாதிப்பதாகவும் சிறிலங்கர்களுக்கு தமக்கான நிரந்தர வீடுகளை எவ்வாறு கட்டுவதென்பது தெரியும் எனவும் இதனை அவர்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்து வருகின்றனர் எனவும் றாகா அல்போன்சஸ் தெரிவித்தார். ‘பெரும்பாலான இலங்கையர்கள் தமது வீடுகளைத் தமது வாழ்நாளுக்கான ஒரு முதலீடாகவே கட்டுகின்றனர். இந்த முதலீடு விரைவாகத் தமக்குக் கிடைக்க வேண்டும் என அவர்கள் பார்க்கவில்லை. குடும்பத்தை நிலைப்படுத்துவதற்கு வீடு என்பது மிகவும் முக்கியமானதாகும். இது இந்த நாட்டிற்குப் பொதுவான ஒன்றாகும்’ என திரு.அல்போன்சஸ் தெரிவித்தார்.

‘கடந்த ஆண்டு மீள்குடியேற்ற அமைச்சு என்ன செய்தது என்பதையும் தற்போது அது என்ன செய்கின்றது என்பதையும் நாங்கள் பார்க்கவேண்டும். அவர்கள் என்ன செய்கிறார்கள்? ரூபா 800,000 பெறுமதியில் சீமெந்து வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன. மக்கள் இந்த வீடுகள் தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றனர். தற்போது கூறப்படும் உலோக வீடுகளை விட சீமெந்து வீடுகள் விஸ்தீரணம் கூடியது’ என திரு.அல்போன்சஸ் தெரிவித்தார்.

மக்கள் விரும்பும் வீடுகளையே கட்டிக் கொடுக்குமாறு சிறிலங்கா அதிபர் மற்றும் பிரதமர் தெரிவித்துள்ள போதும் மக்களுடன் இது தொடர்பாக ஆலோசிக்கப்படவில்லை எனவும் திரு.அல்போன்சஸ் குற்றம் சுமத்தியுள்ளார். ஆனால் சிறிலங்கா அதிபரின் கவனத்திற்குச் செல்வதற்கு முதல் மக்களிடமிருந்து உலோகப் பொருத்து வீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கான விருப்பத்தைப் பெறுவதில் அரசாங்க அதிகாரிகள் செயற்படுகின்றனர். ஆனால் இது தொடர்பாக தமக்கு எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை எனவும் குறித்த இலக்குகளை அடைவதற்காக துரிதமாகப் பணியாற்றுமாறு தமக்கு அழுத்தம் வழங்கப்பட்டதாகவும் அரசாங்க அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆங்கிலத்தில்  – Namini Wijedasa
வழிமூலம்       – Sunday times
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *