மேலும்

ஈழத்தமிழர்கள் நீதியுடன் கூடிய அரசியல் தீர்வை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பு அவசியம்

prof.manivannanஈழத்தமிழ் மக்கள் கோரி நிற்பது நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு. அதனை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பினைத் தமிழ் மக்கள் உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என பேராசிரியர் இராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

நோர்வேயில் கடந்த மே மாதம் 28ஆம் நாள் நடந்த தமிழ்3 இன் சங்கமம் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பேராசிரியர் இராமு மணிவண்ணன்,  நிகழ்வின் ஒரு அங்கமாக சிறப்புரையாற்றினார். அத்துடன் பார்வையாளர்களுடனான உரையாடலும் இடம்பெற்றது.

தமிழகத்தின் அரசியல் சூழலும், அதன் வெளிப்பாடுகளும் ஈழத்தமிழ் அரசியலின் சமகாலமும் பற்றிய விடயங்கள் சார்ந்த தனது அவதானிப்புகளைப் பற்றிய கருத்துகளையும் தனதுரையின் போது அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“தமிழக அரசியல் கட்சிகள் தத்தமது அரசியலாலும் சித்தாந்தங்களாலும் வேறுபட்டு நின்றாலும் தமிழக மக்கள் உணர்வு ரீதியாக தமிழீழ மக்களின் உரிமைகளுக்கு ஆதரவாக நின்றனர்.

என்றைக்குத் தமிழகம் ஒரு சரியான உறுதியான அரசியலை உருவாக்குகின்றதோ, அன்றைக்குத்தான் தமிழீழத்திற்கான ஒரு பொருத்தமான அரசியல் பங்களிப்பை வழங்க முடியும்.

தமிழகத்தின் சமகால அரசியலில் ஒரு திடீர் தலைமைத்துவ இடைவெளி ஏற்பட்டுள்ளது. புதிய கட்சிகள் தலைதூக்க முடியாத சூட்சும நிலையும் நிலவுகின்றது. இதன் விளைவாக மிகப்பெரும் அரசியல் தடுமாற்றத்திலும் நிலைகுலைவிலும் தான் தமிழகம் இருக்கின்றது.

prof.manivannan

வாழ்க்கையிலும் அரசியலிலும் சரி மிகப்பெரிய தடுமாற்றத்தின் பின்னரான பட்டறிவின் திரட்சியுடன் தான் உறுதியான நிலையை எட்டமுடியும் என்று சொல்வதுண்டு. அக்கூற்றுக்கு அமைய நோக்குகையில் கடந்த ஜனவரி மாதம், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஒரு எழுச்சியைக் கண்டது தமிழகம். இளைஞர்கள், மாணவர்களின் எழுச்சி அது. அதனைச் சாதாரணமான எழுச்சியாகக் சொல்லிவிட முடியாது. 1960இற்குப் பின்னர், ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் குரலாக எழுந்த போராட்டம் அதுவாகும்.

60 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் சமூக வரலாற்றை கொண்ட திராவிட இயக்கங்கள் இறுதி இருபது ஆண்டுகளில் சிந்தாந்த ரீதியாகவும் செல்நெறி ரீதியாகவும் இறங்குமுகத்தையே சந்தித்து வந்துள்ளன. தமிழக அரசியல் சித்தாந்த வீழ்ச்சியும் தலைமைகளின் தவறுகளும், அரசியல் வீழ்ச்சிகளுமே இதற்கான காரணங்கள்.

இவற்றினால் தான் ஈழச்சிக்கலில், குறிப்பாக 2009 காலப்பகுதியில் மத்திய அரசின் மீதோ, அதன் வெளியுறவு அரசியல் மீதோ தாக்கத்தினையோ செல்வாக்கினையோ ஏற்படுத்த முடியவில்லை. உணர்வுபூர்வமான மக்கள் எழுச்சியைத் தாண்டி அரசியல் மாற்றங்களாக எதனையும் நகர்த்த முடியவில்லை.

2009இல் நிகழ்ந்த ஒரு பெரும் ஏமாற்றத்தின், துயரத்தின் விளைவுகளே ஜல்லிக்கட்டின் ஊற்று என்பதே உண்மை. அதுவே மாற்று அரசியலுக்கான ஒரு பாதையைத் தமிழகம் தேடிக்கொண்டிருப்பதன் வெளிப்பாடாகவும் இதனைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது.

இடைமாறு கால நீதிப்பொறிமுறை எவ்வாறு இழுத்தடிப்பு அரசியலுக்கு சர்வதேச சமூகம் மற்றும் சிறிலங்கா அரசினால் பயன்படுத்தப்படுகிறது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலானவற்றில் வலதுசாரி சார்ந்த ஒரு அரசியலில் போக்கு அதிகரித்து வருகின்றது. வலதுசாரிச் சிந்தனை கொண்ட கட்சிகள் பெரும்பாலான நாடுகளில் ஆட்சியமைத்து வருகின்றன. அதன் விளைவாக தேசிய இன உரிமைகளை புறமொதுக்கும் போக்கும் அதிகரித்து வருகின்றது.

நீதி விசாரணைகள் அதற்கான தீர்ப்புகள், அரசியல் உரிமைசார் தீர்வுகள் சார்ந்த இவ்வாறான பொறிமுறைகள் ஒருவகையில் கால இழுத்தடிப்புக்குரிய துருப்புச்சீட்டுகளாகவே கைக்கொள்ளப்படுகின்றன. ஆனால் இவற்றுக்கு எதிரான உரிமைசார் அரசியல் முன்னெடுப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவற்றை இராஜதந்திர ரீதியிலும் சாதுரியமான முறையிலும் பயன்படுத்துவதில் தான் எமது முன்னெடுப்புகளின் வெற்றி தங்கியுள்ளது.

ஈழத்தமிழ் மக்கள் கோரிநிற்பது நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு. அதனை அடைவதற்கு வலுவான அரசியல் கட்டமைப்பினைத் தமிழ் மக்கள் உருவாக்கித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அத்தோடு சர்வதேச சக்திகளிடம் எமது அரசியலைச் சரியான முறையில் முன்னெடுப்பதற்கும் அவ்வாறான உறுதியான அரசியல் கட்டமைப்பும் திட்டங்களும் அவசியப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் சென்னை பல்கலைக்கழக அரசறிவியல் மற்றும் பொதுநிர்வாகத்துறையின் தலைவர். ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளில் அக்கறை கொண்ட பங்களிப்பினை வழங்கி வருபவர். ஒரு கல்வியாளராக கருத்தியல் ரீதியாக தமிழ் மக்களின் அரசியல் போராட்ட உரிமைகளுக்கு வலுச்சேர்க்கும் வகையிலான பங்களிப்பினைத் தொடர்ச்சியாக வழங்கி வருபவர்.

இனக்கருவறுப்புத் தொடர்பாக – “Sri Lanka. Hiding the Elephant . Documenting Genocide> War Crimes and Crimes against Humanity” ” எனும் நூலை எழுதி 2014இல் வெளியிட்டவர். Transitional Justice – – ‘இடைமாறு கால நீதி’ தொடர்பான ஆய்வுகளிலும் தற்போது ஈடுபட்டு வருகிறார். தமிழர்களின் அரசியல் உரிமைகள் சார்ந்து மட்டுமல்லாமல், சமூகம், மொழி, பண்பாட்டுத் தளங்களிலும் தனது கல்விசார் ஆய்வுசார் பங்களிப்பினை தொடர்ச்சியாக வழங்கி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *