மேலும்

சிறிலங்கா படைகளின் பாலியல் குற்றங்கள் மூடிமறைக்கப்பட்டது எப்படி? – அனைத்துலக ஊடகம்

jegath dias (2)ஹெய்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா இராணுவ வீரர் எவ்வித பாலியல் வன்புணர்வுச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என தனது தாயார் வீட்டின் தோட்டத்தில் கதிரை ஒன்றில் அமர்ந்தவாறு மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் உறுதிபடத் தெரிவித்தார்.

ஹெய்டியில் 2013ல் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வுச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் அங்கு அனுப்பப்பட்டிருந்தார். இவர் உண்மையில் இந்த விசாரணையை மேற்கொள்வதற்குப் பொருத்தமான ஒருவரல்ல. ஏனெனில் சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு யுத்த மீறல்கள் தொடர்பில் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.

பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட நபருடனோ அல்லது அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவப் பணியாளருடனோ டயஸ் ஒருபோதும் கதைக்கவில்லை. ஆனால் இக்குற்றத்தை இழைத்த சிறிலங்கா இராணுவ வீரர் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என்பதில் டயஸ் மிக உறுதியாக இருந்தார்.

சிறிலங்கா இராணுவ வீரர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட முதலாவது சம்பவம் இதுவல்ல.

jegath dias (1)

134 சிறிலங்கா அமைதி காக்கும் படையினர் ஹெய்டியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலரை மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி சம்பவம் 2007ல் கண்டறியப்பட்டது. இதில் ஈடுபட்ட 114 சிறிலங்கா இராணுவ வீரர்கள் உடனடியாக அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்பப்பட்ட போதிலும் அவர்கள் ஒருபோதும் சிறைகளில் அடைக்கப்படவில்லை.

இந்த அடிப்படையில் நோக்கில், வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிக்காக அனுப்பப்பட்ட சிறிலங்கா இராணுவ வீரர்களால் இழைக்கப்பட்ட பாலியல் மீறல்கள் தொடர்பில் எந்தவொரு சிறிலங்கா இராணுவ  வீரருக்கு எதிராகவும் அந்நாட்டு அரசால் தண்டனை விதிக்கப்படவில்லை. உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இவ்வாறான பாலியல் மீறல்களில் சிறிலங்கா இராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவ வீரர்களால் இழைக்கப்பட்ட  பல்வேறு பாலியல் மீறல் சம்பவங்கள், சித்திரவதைகள், பாரிய படுகொலைகள் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்து வந்துள்ளது.

இவ்வாறான பல்வேறு போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரை தனது அமைதி காக்கும் படையில் இணைப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை அனுமதியளித்தது. இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு நீதி எட்டப்படாது ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரை ஐ.நா தனது அமைதி காக்கும் படையில் இணைத்தமையால் உலக நாடுகளிலும் இவ்வாறான குற்றங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபட்டனர்.

மனித உரிமைக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா போன்ற பல நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களை ஐ.நா தொடர்ந்தும் தனது அமைதி காக்கும் படையில் இணைத்து வருகிறது. இந்த ஆண்டு இதற்காக 8 பில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்புணர்வுச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கான விசாரணையாளராக ஐக்கிய நாடுகள் சபையால் மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டமை தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்ரொனியோ குரெரெசின் உதவிப் பேச்சாளர் பர்கான் ஹக்கிடம் வினவிய போது ‘எதிர்காலத்தில் அமைதி காக்கும் படைக்கு வீரர்களைத் தெரிவு செய்யும் போது தரமானவர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக ஐ.நா தற்போது சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுகிறது. ஆகவே எதிர்காலத்தில் சிறிலங்காவிலிருந்து அனுப்பப்படும் வீரர்கள் தொடர்பாக 2005 இற்குப் பின்னரான தனிப்பட்ட தகவல்கள் மற்றும் அவர்கள் இராணுவத்தில் பணியாற்றும் போது மேற்கொண்ட செயற்பாடுகள் தொடர்பான தகவல்களையும் சிறிலங்கா வழங்கும்’ என தெரிவித்தார்.

jegath dias (2)

‘அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தை குறித்த வீரர் எந்தவிதத்திலும் மீறவில்லை என்பதை சிறிலங்கா அதிகாரிகள் எழுத்துமூலம்  உறுதிப்படுத்துவதுடன் இராணுவ வீரர்கள் தவறிழைக்கும் பட்சத்தில் அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் தாம் ஈடுபடமாட்டோம் என்பதையும் எமது நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்’ என அவர் தெரிவித்தார்.

‘சிறிலங்கா அரசாங்கமும் தனது வீரர்களைத் தனித் தனியாகப் பரிசீலிக்க வேண்டும். அத்துடன் ஐ.நா நியமங்கள் மற்றும் பாலியல் மீறல்கள் தொடர்பான மனித உரிமை நன்னெறிகளைப் பாதுகாப்பதற்கான பல்வேறு நியமங்களையும் பின்பற்றுவது தொடர்பாக சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிறிலங்கா அரசாங்கம் பயிற்சியளிக்க வேண்டும்’ என பேச்சாளர் ஹக் தெரிவித்தார்.

மார்ச் வரையான கடந்த 12 ஆண்டுகளில் ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட சிறிலங்கா இராணுவ வீரர்களுக்கு எதிராக 2000 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ்  ஊடகத்தால் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. ஐ.நா அதிகாரிகள் தமது பழைய கோப்புக்களிலிருந்து பாலியல் மீறல்கள் குறித்த பதிவுகளை மீளவும் பரிசீலித்தால் இந்த எண்ணிக்கை இன்னமும் அதிகமாகலாம்.

கொங்கோவில் இடம்பெற்ற நீண்ட கால யுத்தத்தின் போதும் கொங்கோலிய இராணுவத்தினர் பல்வேறு யுத்த மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டனர். மத்திய ஆபிரிக்க குடியரசில் சமாதானப் படைகளாகப் பணியாற்றிய இவர்கள் குறைந்தது 17 பாலியல் மீறல் சம்பவங்களில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளையில் கொங்கோ நாட்டின் நிலை மிகவும் சிக்கலானதாகும். குறிப்பாக தனது சொந்த நாட்டில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு முகங்கொடுப்பதற்காக ஐ.நா அமைதி காக்கும் படையினரின் உதவியை கொங்கோ நாடிய அதேவேளையில் ஏனைய நாடுகளுக்கு தனது படைவீரர்களை அமைதி காக்கும் பணிக்காக அனுப்பி வருகிறது. ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனான் இந்த விடயத்தை நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்.

ருவாண்டாவில் யுத்தம் இடம்பெற்ற போது அவர்களுக்கு உதவுவதற்கான அமைதி காக்கும் படையினரை அனுப்புவதில் அவர்  இடரை எதிர்நோக்கியிருந்தார். ஆனால் இந்த யுத்தத்தில் 800,000 வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ‘சிலவேளைகளில் ஐ.நாவிற்கு படைகள் தேவைப்படுகின்றது. படையினரை ஏற்றுக்கொள்ளும் போது அவர்கள் மோசமானவர்களாக இருந்தால் அது பெரிய பிரச்சினையாக மாறிவிடுகிறது’ என கோபி அனான் தெரிவித்திருந்தார்.

haiti victims

ஹெய்டியில் இடம்பெற்ற சிறுவர் மீதான தொடர்ச்சியான பாலியல் வன்புணர்வுச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒன்பது சிறார்கள் ஐ.நா விசாரணையாளர்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தனர். தமது உணவுப் பசியைத் தீர்ப்பதற்காக முதலில் தாம் பாலியல் வன்புணர்வில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் பின்னர் தாம் ஒவ்வொரு இராணுவ வீரர்களாலும் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட சிறார்கள் தெரிவித்தனர்.

தனது 12வது வயதில் தான் முதன் முதலில் அமைதிப் படை வீரர் ஒருவருடன் பாலியல் உறவை வைத்த போது தான் உடலளவில் கூட முதிர்ச்சியடையவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கூறினார். நாளொன்றுக்கு நான்கு பேர் வீதம் மூன்று ஆண்டுகளில் 100 இற்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவ வீரர்களுடன் உறவில் ஈடுபட்டதாக பிறிதொரு சிறுமி தெரிவித்தார்.

இதுமட்டுமல்லாது சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட உள்நாட்டு யுத்தத்தின் போதும் இவ்வாறான பல்வேறு பாலியல் மீறல் சம்பவங்கள் சிறிலங்கா இராணுவ வீரர்கள் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் தாம் எவ்வாறு இராணுவ வீரர்களால் சித்திரவதை செய்யப்பட்டோம் மற்றும் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டோம் என்பது தொடர்பாக சிறிலங்காவில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தற்போது சாட்சியங்களுடன் கூறுகின்றனர்.

சாதாரண உடைகளுடன் முகமூடிகள் அணிந்த வண்ணம் வந்த ஆண்கள் சிலர் தன்னைக் கடத்திச் சென்றதாகவும் பின்னர் தனது கண்கள் கட்டப்பட்ட நிலையில் தான் கூட்டுப் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதாகவும் அது ஒரு இராணுவ முகாம் எனத் தான் கருதுவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழ்ப் பெண் ஒருவர் அசோசியேட்டட் பிரஸ் ஊடகத்திற்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

‘அவன் எனது உடைகள் அனைத்தையும் களைந்தான், தரையில் விரிக்கப்பட்ட மெத்தையில் என்னைப் பலவந்தமாக அமரவைத்தான். அத்துடன் எனது இரு கைகள் மற்றும் கால்கள் போன்றவற்றை நைலோன் கயிற்றால் மெத்தையின் இரு பாகங்களிலும் பொருத்தப்பட்ட இரும்புக் கம்பியுடன் சேர்த்து இறுகக் கட்டினான். இவ்வாறு நான் இரண்டு மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டு மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டேன்’ என குறித்த பெண்மணி தெரிவித்தார்.

‘எனது அறைக்கு மேலும் நான்கு பெண்கள் கொண்டு வரப்பட்டனர். அப்போது அங்கு வந்த இராணுவ வீரன் ஒருவனிடம் எங்களில் எவரையாவது தெரிவு செய்யுமாறு கேட்கப்பட்டான். அவன் என்னைத் தெரிவு செய்து பிறிதொரு அறைக்குள் கொண்டு சென்று பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டேன்’ என பாதிக்கப்பட்ட இப் பெண் கொடுத்த வாக்குமூலமானது மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

57 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையானது பாலியல் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த 43 பெண்களின் உண்மையான சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது.

இவ்வாறு தன்னை வன்புணர்விற்கு உட்படுத்திய சிறிலங்கா இராணுவ வீரரை குறித்த பெண் ஒளிப்படம் ஒன்றில் அடையாளம் காண்பித்தார். இந்த இராணுவ வீரன் ஒரு இராணுவ அதிகாரி என்பதுடன் இவர் ஐ.நா அமைதி காக்கும் படையில் பணிபுரிவதற்காக அனுப்பபட்டார் என்பதை அசோசியேட்டட் பிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த பாதிக்கப்பட்ட பெண் அச்சம் காரணமாகத் தனது பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். ஆனால் இந்த அறிக்கை தொடர்பாக பதிலளிப்பதற்கு சிறிலங்கா இராணுவத்தினரும் அரசாங்கமும் மறுத்துவிட்டன. தனது இராணுவத்தினர் பல்வேறு சித்திரவதைகள் மற்றும் பாலியல் மீறல்களில் ஈடுபடுகின்ற போதிலும் இதனை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் நிராகரித்தே வருகிறது.

சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுடன் ஏபி ஊடகம் நேர்காணல்களை மேற்கொண்ட போது, அமைதி காக்கும் பணிக்காக தமது வீரர்கள் மாலிக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தனர்.

– மிகுதி நாளை

ஆங்கிலத்தில்    – Katy Daigle and Paisley Dodds
வழிமூலம்         – Associated Press
மொழியாக்கம்   – நித்தியபாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *