மேலும்

சீனாவை எதிர்கொள்வதற்கு சிறிலங்காவைப் பலப்படுத்துகிறது ஜப்பான்

Shinzo Abe-Ranil Wickremesinghe- puthinappalakaiஇந்தியப் பெருங்கடலில் சீனாவின் முன்னகர்வுகளுக்கு எதிர் நடவடிக்கையாக, சிறிலங்கா கடலோரக் காவல்படையின் திறனை வலுப்படுத்துவதற்கு ஜப்பான் உதவ முன்வந்துள்ளது என்று ஜப்பானிய ஊடகமான The Asahi Shimbun செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேக்கும் இடையில் நேற்று முன்தினம் ரோக்கியோவில் நடந்த சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், கடல்சார் துறையில் மேலும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பின் ஒரு கட்டமாக, இரண்டு அதிவேக கடலோரக் காவல் படைப் படகுகளை சிறிலங்காவுக்கு ஜப்பான் வழங்கவுள்ளது. அத்துடன், சிறிலங்கா கடலோரக் காவல்படையின் ஆற்றலை அதிகரிக்கும் பயிற்சிகளையும் ஜப்பான் வழங்க முன்வந்துள்ளது.

மேலும், இரண்டு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளின் பரிமாற்றங்களை வலுப்படுத்தவும் இந்தக் கூட்டறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, திருகோணமலை துறைமுகத்தின் கட்டுமானப் பணிகளுக்காக 9 மில்லியன் டொலரையும் ஜப்பான் கொடையாக வழங்க முன்வந்துள்ளது.

Shinzo Abe-Ranil Wickremesinghe- puthinappalakai

மத்திய கிழக்கின் எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் ஜப்பானை இணைக்கும் கடல் வழிப்பாதையின் நடுவே- கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் சிறிலங்கா தீவு அமைந்துள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளின் கடலோரக் காவல் படைகளுக்கு இடையில் நடத்தப்படவுள்ள கூட்டுப் பயிற்சியில் சிறிலங்காவும் பங்கேற்க வேண்டும் என்று ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே அழைப்பு விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் குவடார் துறைமுகம் போல, சிறிலங்காவின் துறைமுகங்கள் மாறி விடக் கூடாது என்று, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஒரு திறந்த சுதந்திரமான இந்தோ- பசுபிக் கடல் மூலோபாய கொள்கையை சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம், இந்தியப் பெருங்கடலில் வளர்ந்து வரும் சீனாவின் தலையீட்டை  தடுக்க முடியும் என்று ஜப்பானிய பிரதமர் அபே நம்பிக்கை கொண்டுள்ளார் என்றும் ஜப்பானிய ஊடகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *